வானிருக்கும் நாள்வரைக்கும்..

அக்கரைப்பற்றில்
ஆத்மீக ஞான பீடம்
அக்மியம் போதிக்கும் தரீக்கா பீடம்
மஹ்ழறத்துல் காதிரிய்யா – எனும்
ஆன்மபீட ஆத்மகுரு
அறப்பணி பிரியும் அருளெ எம் வாப்பா…

அப்பாஸிக் குலத்தின் மேதை
அப்துஸ் ஸமது மௌலானாவின்
அருமைப் பேரனாய் – அவர்
வழி தொடர்ந்த – தியாகச் செம்மல்
அப்துல் வாஹிது மௌலானாவின்
பெருமைமிகு மருமகனாய் – மக்கத்தார்
அப்துஸ் ஸமது ஆளிமின்
எழில் மிகு ஏக புதல்வனாய்
உயர் குடும்பத்தில் அவதரித்த
உத்தமர் எம் வாப்பா..

பாசமிகு பெற்றோரின்
செல்லப்பிள்ளையாய்
பள்ளியில் முன்னணிச்சீடனாய்
நல்லொழுக்க ஆசானாய்
வழிகாட்டும் அதிபராய் – கண்திறக்க
உதவிய போதனாசிரியராய்
பார்போற்றும் பாடகனாய்
ஞானசித்திர நடிகனாய்
வாண்மைக் கவிஞனாய்
கரமிசைக்கும் இசைஞானியாய்
இல்லத்தரசியின் உளம் கவர் நாயகனாய்
முறைவழி மருத்துவனாய்
மாமேதையாய்
ஞானவழி தலைவனாய்
அள்ளிவழங்கும் வள்ளளாய்
களித்திருக்கும் நண்பனாய்
கனிந்திருக்கும் எம் வாப்பா…

கண்மணியாம் றஸூலுல்லாஹ்வின்
அடியொற்றி வாழ்ந்து – வந்த
ஆண்டகை முஹையிதீனின்
அறப் போதனையில்
அறநெறி கண்ட – எம்
ஹல்லாஜ் வாப்பாவின்
அமுதுண்ட அழகு நிலா
அப்துல் மஜீத் – எனும்
ஞான உலா!
எம் அன்பு நிறை
மக்கத்தார் வாப்பா!
வாய் திறந்து நானும்
சொல்கின்றேன்
சில வரிகள்..

ஹல்லாஜ் மகாமெனும்
ஆத்மீக ஆலையிலே@
புடம் போடப்பட்ட
மாசிலாத்தங்கம் – எங்கள்
மக்கத்தார் வாப்பா- அவர்
சுய விருப்பின் பேரில்
பேசியதில்லை ஒரு நாளும்
இறைவாக்கு அன்றி
பிற வாக்கு சொன்னதில்லை…

எம் போன்ற கீழோர் – அகக்
கண்ணைத் திறப்பதற்காய்
தம் வாழ்வை அர்ப்பணிக்கும்
ஆத்மீகத் தந்தையே !- எம்மை
அரவணைத்து … ஆதரித்து…

அருள் சொரியும் தந்தையே!
வாழ வேண்டும்- நீங்கள்
வானிருக்கும் நாள் வரைக்கும்
நாம் இருக்க வேண்டும்- உங்கள்
அன்புக் காலடியில்
பாசமிக்க தந்தைக்கு – என்
உளம் கனிந்த காணிக்கை…

ஆசிரியர் மீராலெப்பை மஹ்பூர்,
அட்டாளைச்சேனை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *