Silent Inquiry

தஸவ்வுபினதும், ஸுபிகளினதும் அறிவுப் பங்களிப்பும் சமூக நிர்மாணப்பணிகளும்.

கலாநிதி எம்.ஏ.எம். சுக்ரி , பணிப்பாளர் ஜாமிஆ நளீமிய்யா கலாபீடம், பேருவளை

(கஹட்டோவிட்ட பாதீபிய்யா தக்கியாவில் நடைபெற்ற 150வது நத்ர் கந்தூரி தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்ட மலரிருந்து)

இஸ்லாமிய வரலாற்றில் காலவளர்ச்சியில் தோன்றிய அகீதா, பிக்ஹ் போன்ற கலைகள் போன்றே குர்-ஆன் ஸுன்னாவின் அடிப்படையில் தோன்றிய ஒரு கலையாக தஸவ்வுப் விளங்குகின்றது. அகீதா, இஸ்லாமிய விசுவாசக் கோட்பாட்டோடு தொடர்புடைய ஒரு கலையாகவும் பிக்ஹ், இஸ்லமிய சட்டவியலுடன் தொடர்புடைய கலையாகவும் அமைந்ததுபோன்று, தஸவ்வுபும் இஸ்லாத்தின் ஆத்மீகக் கோட்பாட்டோடு தொடர்புடைய ஒரு கலையாகும். முத்தகல்லிமீன் கள், புகஹாக்கள் போன்றே ஸூபிகளும் இஸ்லாமிய அறிவுப் பாரம்பரியத்திற்கு மகத்தான பங்களிப்புச் செய்துள்ளனர்.

தஸவ்வுப் பற்றி சரியான அறிவும் தெளிவும் இல்லாதவர்கள் அதனை ஒரு துறவறக் கோட்பாடாகவும், ஸூபிகள் என்போர் உலக வாழ்வைப் பொறுத்தளவில் பற்றற்ற மன்நிலையைக் கடைபிடித்து சமூக வாழ்விலிருந்து ஒதுங்கி வாழ்வோராகவும் கருதுகின்றனர். சிலர் ஸூபிகள் துறவறக் கோட்பாட்டைப் போதித்து இஸ்லா”மிய வரலாற்றின் இயக்க சக்திக்கு எதிராக ச் செயற்பட்ட பிற்போக்குவாதிக ள் என அவர்களை விமர்சிக்கின்றனர். ஆனால் உண்மையில் தஸவ்வுபின் வரலாறும், ஸூபிகளின் ஆளுமையும் பங்களிப்பும் இக்கருத்து முற்றிலும் முரணாக அமைந்துள்ளது.

தஸவ்வுபும் மனித உள்ளத்தை அதன் மாசகற்றி தூய்மைப்படுத்துவதை நோக்காக க் கொண்டுள்ளது. “தஸ்கிய்யத்துந் நப்ஸ்” எனும் உளப்பரிசுத்தமே அதன் முக்கிய நோக்கமாகும். இந்த நோக்கம் அனைத்தையும் அடையும் வகையிலேயே அதன் வழிமுறைகளும் அமைந்துள்ளன. தொழுகை, நோன்பு போன்ற இஸ்லமிய வணக்கங்களின் புறரீதியான சட்டங்களை ‘ பிக்ஹ்’ எனும் சட்டக்கலை விளக்குவது போன்று இந்த வணக்கங்களில் பொதிந்துள்ள  உள்ளார்ந்த அம்சங்கள் பற்றி தஸவ்வுப் விளக்குகின்றது. இதனை அறிஞர்கள் ‘பிக்ஹுல் பாதின்’-‘உள்ளார்ந்த பிக்ஹ்’ என அழைப்பர். இந்தவகையில் பிக்ஹுவும் தஸவ்வுபும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் போன்றவை.

இஸ்லாத்தின் போதனைகள், வணக்க வழிபடுகளின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாக விளங்கியிருப்பது ஒரு விசுவாசியில் ‘அக்லாக்’ எனும், உயர்ந்த சான்றான்மை மிக்க நற்குணங்களை உருவாக்குவதாகும். இத்தகைய நற்குணங்களை உருவாக்கத் தவறும் போது அகீதா எனும் இஸ்லாமியக் கோட்பாடும் சரீஆ எனும் இஸ்லாமிய சட்டக்கோப்பும் உயிரற்ற வெறும் சடமாகவே காட்சியளிக்கும், இந்தவகையில் ‘ தஸ்கிய்யத்துந் நப்ஸ்’ எனும் உளத்தூய்மைகளும், ‘அக்லாக்’ எனும் நற்குணங்களுக்கு இடையில் நெருங்கிய தொடர்புள்ளது. ஆத்மீக அனுஷ்டாணங்கள் மூலம் ஒரு விசுவாசியின் உள்ளத்தின் பாவக்கறை அகன்று தூய்மையடைவதன் மூலமே, அவனிலொ சான்றாண்மை மிக்க நற்குணங்கள் தோற்றமெடுக்கின்றன.

 இமாம் இப்னுல் கையும் ஜவ்ஸீய்யா நற்குணத்திற்கும் தஸவ்வுபிற்கும் இடையேயுள்ள தொடர்பை பின்வருமாறு அழகாக விளக்குகின்றார்கள். :

“சன்மார்க்கம் என்பது, மொத்தத்தில் நற்குணமாகும். ஏனெனில் நற்குணங்கள் அதிகரிக்கின்றனவோ, அவனில் சன்மார்க்க உணர்வு மிகச் சக்திவாய்ந்ததாக செயற்படும்.  இது போன்றே எவனில் நற்குணங்கள் அதிகரிக்கின்றனதோ அவனில் தஸவ்வுபின் பண்பு உயிரோட்டத்துடன் செயல்படுகின்றது என்பது கருத்தாகும்”

ஸூபி என்பவர் செயலும் இயக்கமற்று, சமூக வாழ்வோடு தொடர்பற்று தனிமையில், ஏகாந்த நிலையில் துறவு பூண்டு வாழ்பவர் எனக் கருதுவோரும் உளர்.  தஸவ்வுபின் வரலாறு பற்றி உரிய முறையில் தெரியாதவர்களே இத்தகைய கருத்தைக் கொண்டிருப்பர் ஸூபிகள் வாழ்க்கையில் முழு ஈடுபாட்டுடன் செயல்படுவதும் இயங்குவதும் ‘ஸுஹ்த்’ எனும் பற்றற்ற வாழ்வின் ஒரு அங்கமாகவே கருதுகின்றனர். ஏனெனில் ஸுஹ்த் என்பது அவகளைப் பொறுத்தளவில் உள்ளத்தின் கீழான உணர்வுகளிலிருந்துசடத்தின்  ஆதிக்கத்திலிருந்தும் விடுதலை பெறுவதாகும்.  மாறாக வாழ்க்கையின் விவகாரங்களில் இருந்து ஒதுங்கி, தனித்து, செயலற்று இருப்பதை ஸுஹ்த் குறிக்கவில்லை.  ஆரம்பகால ஸூபிகள் செயலையும் உழைப்பையும் தூண்டினர். இய்க்கமும் செயற்படுமே அவர்களது வழி முறையில் முக்கிய பண்புகளாக விளங்கின. இப்றாஹீம் இப்னு அத்ஹம் எனும் புகழ் பூத்த ஸூபி அவரது மாணவர் ஷகீக் அல் பல்கியை நோக்கிப் பின்வறுமாறு கூறினார்;

“எங்களைப் பொறுத்தளவில் ஹஜ்ஜையும் ஜிஹாதையும் விட ஒருவர் ஹலாலான வழியில் ஈட்டிய பணத்தினால் பெற்றுக்கொண்ட  இரண்டு ரொட்டித்துண்டுகள் தனது வயிற்றுக்குள் செல்வது பற்றி மிகக் கரிசனையோடும் அவதானத்துடனும் இருப்பதே மேலானது.

இவ்வடிப் படையிலேயே இப்றாஹீம் இப்னு அத்ஹம் தன்னைப் பின்ப்ற்றிய தோழர்களுக்கு ஒரு தடவை பின்வருமாறு அறிவுரை பகர்ந்தார்கள்:

அனுமதிக்கப்பட்ட வழிகளில் பொருள் தேடுவதும் அதனையே குடும்பத்திற்காக செலவழிப்பதும், உங்களது கடமையாகும்”.

பெரும்பான்மை ஸூபிகள் இந்தவாய்யிலேயே முயற்சியையும், உழைப்பையும் நோக்கினர். அவர்களுல் ஹத்தாத் (கொல்லர்கள்), அல்ஹஜ்ஜாம்(இரத்தம் குத்தி எடுப்போர்), அல்ஸஜ்ஜாஜ் (கண்ணாடி செய்வோர்), அல்கஸ்ஸார்(துணிகளை வெள்ளை நிறமாகப் பளிச்சிடச் செய்வோர்) போன்ற தொழில்களைப் புரிந்த் ஸூபிகள் பற்றி வரலாறு பதிவு செய்துள்ளது. ஹம்தூன் அல் கஸ்ஸார் அவரது மாணவர் அப்துல்லாஹ் அல்ஹஜ்ஜாமை நோக்கி பின்வருமறு கூறினார்;

“ நீர் உமது தொழிலில் தொடர்ந்து நிலைத்திருப்பதும், நீர் அப்துல்லாஹ் அல்ஹஜ்ஜாம் என அழைக்கப்படுவது, அப்துல்லாஹ் அல் ஆரிப் ( அப்துல்லாஹ் இறை ஞானம் பெற்றவர்) என அழைக்கப்படுவதைவிட மேலானது.

அவர்கள்  உழைப்பிற்கும் தொழில் புரிவதற்கும் கொடுத்த முக்கியத்துவம் காரணமாகவே பொருலீட்டுவதில் கடைபிடிக்கப் படவேண்டிய ஒழுக்க மாண்புகள் ( அதபுல் கஸப்) பற்றியும் பல்வேறு தொழில்களில் ஈடுபடுபவர்களில் அமைந்திருக்க வேண்டிய பண்புகள் பற்றியும் பொருலீட்டுதலுடன் தொடர்புடைய சட்டப் பிரச்சினைகள் பற்றியும் தங்களது நூல்களில் விளக்கியுள்ளார்கள்.

எனவே தஸவ்வுபை சோம்பல், தேக்க நிலை, சமூக விவகாரங்களில் இருந்து ஒதுங்கி வாழும் மனப்பான்மை, வாழ்க்கைப் போராட்டத்திலிருந்து விடுபட்டு துறவறம் மேற்கொள்ளல் போன்ற பண்புகளோடு இணைத்துப் பேசப்படுவது வரலற்று உண்மைகளுக்கு முற்றிலும் முரணானதாகும்.

ஸூபிகள் சமூகத்தில் மக்கள் மத்தியில் மிக கண்ணியத்தோடு மதிக்கக் காரணமாக அமைந்த்து அவர்கள் மக்களோடு இரண்டறக் கலந்து அவர்களை நெறிப்படுத்துவதில் ஈடுபாடு காட்டுவதேயாகும்.

“ஸூபிகள் மக்கள் சமூகத்தில் முக்கிய அம்சமாக வாழ்ந்து மக்களுக்கு அவர்கள் விளங்கும் மொழியில் சன்மார்க்கப் போதனைகளை விளக்கினார்கள்.  சாதாரண பாமர மனிதன் அவர்கள் அளித்த விளக்கத்தை எளிதாகப் புரிந்து அவனது வாழ்க்கையை சீர்படுத்திக் கொண்டான். இதனைத்தான் படித்தவர்கள் மத்தியில் அவர்கள் பெற்ற இடத்தை  பாமர மக்கள் மத்தியில் ஸூபிகள் பெற்றுக் கொண்டார்கள்”. என ஸூபிகளின் வரலாறு பற்றி ஆராய்ந்த ஒரு மேற்கத்திய அறிஞர் குறிப்பிடுகிறார்.

ஸுபிகள் மத்தியில் புகழ் பூத்த அறிஞர்கள்  காணப்பட்டனர். பல்வேறு இஸ்லாமிய கலைகளிலும் துறைபோகிய அறிஞர்களாக அவர்கள் விளங்கினர்.அபுல் காஸிம் இப்றாஹீம் பின் முஹம்மத் அந்நஸ்ராபாதி ஹதீஸ் துறையில் சிறந்த அறிஞராக விளங்கினார். அபூஹம்ஸா அல்பக்தாதி ‘  இலமுல் கிராஅத் துறையில் துறைபோகிய அறிஞராகக் கருதப்பட்டார். உமரிப்னு உஸ்மான் அல்மக்கி உஸூல் துறையில் புகழ்பெற்று விளங்கினார். ஹம்தூன் அல்கஸ்ஸார் ழாஹிரி மத்ஹப் பிரிவைச் சார்ந்த சட்ட அறிஞராக விளங்கினார். ஷெய்கு அப்துல் காதிர் ஜீலானி ஹம்பலி மத்ஹபைச் சார்ந்த சட்ட அறிஞராகப் புகழ் பெற்றிருந்தார்கள்.

ஸூபி மெய்ஞ்ஞானிகள் பல் துறை சார்ந்த அறிவுத்துறைகளிலும் சிறப்புற்று விளங்கியமை மட்டுமன்றி மக்களுக்கு அறிவுப் போதனை புரிவதிலும் பண்பாட்டு வளார்ச்சியை வழங்குவதிலும் ஈடுபட்டு அறிவிற்குப் பங்களிப்உப் புரிந்தார்கள். மக்களுக்கு அறிவு, ஆன்மீக வழிகாட்டுதலை வழங்குவதில் அல்முகாஸபியீன்’ அர்-ரிஆயா லிஹூகுக் இல்லா’ அல்மக்கியின் கூத்துல் குலூப், இமாம் கஸ்ஸாலியின் இஹ்யா உலூமுத்தீன், கதிரிய்யாத் தரீக்காவின் ஸ்தாபகரான செய்க் அப்துல் காதிர் ஜீலானியின் சொற்பொழிவுகளின் தொகுப்புகளான  ‘பத்ஹுர் ரப்பானி’,’புதூஹுல் கைப்’, ‘ஜலாஉல் காதிர்’ போன்ற நூல்கள் மக்களை ஆத்மீகப் பாதையில் நெறிப்படுத்துவதில் பாரிய செல்வாக்கைச் செலுத்தின.

ஸூபி ஆதம ஞானிகள் அவர்களது காலப் பிரிவில் சமூக சீர்கேடுகள், ஆட்சியாளர்களின் அநீதிகளை எத்தகைய பயமோ தயக்கமோ இன்றி விமர்சித்த்தோடு ஆட்சியாளர்களின் சமூகப் பொருளாதார அநீதிகளுக்கு எதிராகப் போராடினர். சஹ்ல் அத்துஸ்தரீ,  ஜுனைத் அல்பக்தாதி ஆகியோர் தமது காலத்துச் சமூக்ச் சீர்கேடுகளுக்கு எதிராகப் போரடியதோடு ஆட்சியாளர்களின் அரண்மைனையைத்தரிசித்து அவர்கள் சமூக அநீதிகளை அங்கீகரிப்பதையும் கண்டித்தனர். ஹஸனுல் பஸரீ அவர்களது காலப்பிரிபவில் உமையா கவர்ணராக இருந்த இப்னு ஹுபைராவை அவர் மக்களுக்கு எதிராகப் புரியும் அநீதிகளுக்கு எதிராக மிகக்கடுமையாக கண்டித்ததை வரலாறு பதிவு செய்துள்ளது. புளைல் பின் இயாழ்; நாட்டில் மக்கள் மத்தியில் நீதியை நிலைநாட்டும் படி கலீப ஹாறூன் றஷீதை எச்சரித்தார். ஸூனனுல் அல் பிஸ்-ரீ அப்பாஸீயக் கலீபா முத்தவக்கிலின் காலப்பிரிவில் சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு சிறையில் உணவுகொண்டுவரப்பட்டது. ‘இது அநியாயக் காரனின் உணவுத்தட்டில் கொண்டுவரப்பட்ட உணவாகும் எனக்கூறி அதனை சாப்பிட மறுத்துவிட்டார்கள்.  ஷெய்கு அப்துல் காதிர் ஜீலானியின் காலப்பகுதியில் அப்பாஸிய்யக் கலீபா அநியாயக்காரனான ஒருவனை மாகாண அதிபதியாக நியமித்தார். அப்துல் காதிர் ஜீலானி மஸ்ஜிதில் குத்பா சொற்பொழிவு நிகழ்த்திக் கொண்டிருந்த் போது அங்கு கலீபா சமூகமளித்திருப்பதைக் கண்டதும் கலீபாவை நோக்கி  நீர் மக்களுக்கு அநீதியும் கொடுமையும் இழைக்கும் ஒருவனை ஆட்சிப் பொறுப்புக்கு நியமித்துள்ளீர்  மறுமையில் நீர் இறைவனின் சந்நிதானத்தில் இதற்கு எப்படிப் பதிலளிப்பீர் எனக் கேட்டபோது கலீபா அதிர்ச்சியடைந்தார். உடனே அந்த மாகாண அதிபதியை பதவியிலிருந்து நீக்கிவிட்டார். இது போன்ற எண்ணற்ற நிகழ்வுகளை வரலாறு பதிவு செய்துள்ளது.  அநீதிக்கும் கொடுமைக்கும் எதிராக க் குரல் கொடுத்த ஸூபிகளின் இச்செயற்பாடு தஸவ்வுபின் வரலாற்றில் ஒரு முக்கிய அங்கமாக உள்ளது.

ஆத்ம ஞானிகளான ஸூபிகள் மக்கள் மத்தியில் அறிவைப் பரப்புவதிலும் மக்களோடு இரண்டறக் கலந்து அவர்களது கவலைகள் துயரங்களைப் போக்குவதிலும் கவலையால் உடைந்து நொறுங்கிய உள்ளங்களுக்கு ஆறுதல் வழங்குவதிலும் பெரும் பங்களிப்புச் செய்தனர். ஆபிரிக்காவில் தரீகா ஸனூஸியா மக்கள் மத்தியில் அறிவைப் பரப்புவதிலும்  இஸ்லாமிய அழைப்புப் பணியிலும் காத்திரமான பங்களிப்பைச்செய்தது. ஒருவன் அறிவின்றி இறைவனை அறிய முடியாது என்பது அவர்களது உறுதியான நிலைப்பாடாக விளங்கியது. எனவேதான் ஸூபிகளது ஸாவியாக்கள், தக்கியாக்களோடு இணைந்து கல்விக் கூடங்கள் நிறுவப்பட்டதை வரலாற்றில் காணமுடிகின்றது.

இந்தவகையில் இலங்கையில் யெமன் ஹழ்றமௌத் பிரதேசத்திலிருந்து வருகை தந்த ஸூபி மகான் களும் கனிசமான பங்களிப்புச்செய்துள்ளனர். ஷெய்க் இஸ்மாயில் இஸ்ஸதீன் யெமானி, அவரது புதல்வர் ஷெய்க் யெஹ்யா அல்யெமானி, ஷெய்க் அப்துல்லாஹ் இப்னு உமர் பாதீப் அல்யெமானி ஆகியோர் இத்துறையில் குறிப்பிடத்தக்கோர் ஆவர். 1880 ஆம் ஆண்டு இலங்கைக்கு  வருகை தந்த பாதீப் மௌலானா அவர்கள் சிலகாலம் இலங்கையில் தங்கிய பின்னர். யெமன் நாட்டுக்குத் திரும்பினார்கள். 1888 ஆம் ஆண்டு மீண்டும் இலங்கைக்கு வருகை தந்த அவர்கள் 1892ஆம் ஆண்டு  அவர்களது மறைவுவரை ஆத்மீகப் பணி புரிந்தார்கள்.மத்திய மாகாணத்தில் ஹெம்மாதகமையில் எல்லமடுல்போவ கிராமத்தை மையமாக வைத்தே அவர்களது அறிவுப்பணியின் பெரும்பங்கு அமைந்தது.  இலங்கையில் அராபிபாஷா , சித்திலெவ்வை ஆகியோரின் கல்வி மறுமலச்சிப் பணிக்கு, எகிப்து அல்அஸ்ஹர் பல்கலைக்கழகப் பட்ட்தாரியான பாதீப் மௌலானா மிக உறுதுணையாக விளங்கினார்கள். தங்களது வாழ்வின் இறுதிக்கட்டத்தில்  கஹட்டோவிட்ட கிராமத்தை வந்தடைந்து பள்ளிவாசலுக்கு அண்மையில் ஒரு மத்திய தளத்தை அமைத்து மக்களை ஆத்மீகப் பாதையில் நெறிப்படுத்தியதோடு கஹட்டோவிட்ட கிராமத்தில்  முதன் முதலாக  தமிழ் பாடசாலையொன்றை அமைத்து கல்விப் பணிக்கு பங்களிப்புச்செய்தார்கள்.

வாழ்க்கைப் போராட்டத்தில் சிக்கி  கவலையாலும் துக்கத்தாலும் பாதிக்கப்பட்ட உள்ளங்களின் நம்பிக்கையையும் ஆறுதல் அளிக்கும் பணியில் ஈடுபட்ட ஆத்மீக மருத்துவர்களாக  ஸூபிகள் வரலாற்றின் எல்லாக் காலகட்டங்களிலும் விளங்கியுள்ளனர். “ படைப்பினங்கள் அனைத்தும் அல்லாஹ்வின் குடும்பமாகும். அவனது குடும்பத்திற்குப் பயன் நல்குபவர்களே அவனுக்கு மிக விருப்பமானவர்கள்.”

என்ற நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் வாக்கிற்கு ஏற்ப அவர்களது வாழ்வும் பணிகளும் அமைந்தன.  அவர்களது ஸாவியாக்கள் தக்கியாக்கள், காண்காக்கள் வறூமையில் கோரப்பிடியில் சிக்கி நலிவுற்ற, கவலையாலும் துக்கத்தாலும் மனமுடைந்த மக்களின் தஞ்சகமாக அமைந்தது. குறிப்பாக இந்தியத் துணைக் கண்டத்தில் இந்த மரபு பரவலாகக்  காணப்பட்டதையும் முஸ்லிம்கள் மட்டுமன்றி முஸ்லிமல்லாதவர்கள் கூட அமைதியும் நிம்மதியும் தேடி அங்கு வந்ததையும் ஷெய்கு அபுல் ஹஸன் நத்வி அவர்கள் ‘றப்பானியா லா றஹ்மானியா’ எனும் நூலில் மிக விரிவாக விளக்குகின்றார்.மேலும் இது தொடர்பான பல சம்பவங்களைக் குறிப்பிடுகிறார். இந்தியாவின் புகழ் பூத்த சூபிமகானான ஷெய்கு நிலாமுத்தீன் அவர்களது ஷெய்காக விளங்கியவர் அவரி டில்லிக்கு ஆத்மீகப் பணிக்காக வழியனுப்பும் போது பின்வருமாறு கூறினார்கள்,” நீர் எங்கும் கிளைபரப்பி நிழல் வழங்கும் ஒரு மரமாக இருப்பீராக. இறைவனின் படைப்பினங்கள் அந்த மரத்தின் கீழ் நிழலும் அமையும் பெறட்டும்’. இந்த வகையில் ஸூபிகள் அனைத்துப் படைப்பினகளையும் இறைவனின் குடும்பமாக நோக்குகின்ற இஸ்லாத்தின் மனிதாபிமானக் கோட்பாட்டைப் பிரதிநிதித்துவப் படுத்தினார்கள்.ஸூபிகளின் இந்தமனித நேயமும், இறை நம்பிக்கையால் போசிக்கப்பட்ட ஆத்மீக ஆளுமையின் ஆகர்சிப்புமே கிழக்காபிரிக்கா தென்,தென்கிழக்காசியாவில் மத்திய ஆசியப் பிரதேசங்களிலும் இஸ்லாத்தின் பரம்பலில் முக்கிய பங்கை வகித்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *