அஸ்- ஸெய்யிதா பஸ்லூனும்மா (வலி)
இவர்கள் செல்வச் செழிப்புமிக்க ஒரு குடும்பத்தில் 1950 ஜுலை 22ல் பிறக்கின்றனர். ஆறு சகோதரிகளையும் ஐந்து சகோதரர்களையுமுடைய இப்பெரிய குடும்பத்தின் இரண்டாவது பிள்ளையாக விளங்கினர். தந்தை காத்தான்குடியைச் சேர்ந்த முஹம்மது ஹனிபா என்பவரும் தாய் அப்துஸ் ஸமது மௌலானா (றலி)யின் நான்காவது தலைமுறையுடைய சக்கினா உம்மா என்பவருமாவார்கள். அதனால் தாய் முறை ஸெய்யித்தாகக் காணப்படுகின்றனர்.
அதாவது; அப்துஸ் ஸமது மௌலானா (றலி), பாத்திமா (வலி) என்பவர்களின் மகள் ஸித்தீ றபியத்துலாஸரா உம்மா ஆவார். ஸித்தி றபியத்துலாஸராஉம்மா, அப்துர்றஹுமான் மௌலானா (காத்தான்குடி) என்ற இருவரினதும் மகள் பல்கீஸும்மா ஆவார்.
பல்கீஸும்மா, ஏ. முஹம்மது தம்பி (கணக்கப்பிள்ளை) ஆகியவரின் மகள் சக்கினா உம்மா ஆவார். சக்கினா உம்மா, முஹம்மது ஹனிபா ஆகியவரின் மகள் பஸ்லுனும்மா ஆவார்கள்.( 146. தகவல் : திருமதி எம்.எச். சக்கினா உம்மா, அக்கரைப்பற்று.)
இவர்களின் இயற்பெயர் ஆயிஷா உம்மாவாகும். பஸ்லூனும்மா என்ற பெயராலே அழைக்கப்பட்டு வந்தனர். தந்தையின் விஷேட விருப்பத்திற்குரிய ஒருவராக விளங்கினர். மேலும் குடும்பத்தின் எல்லோரையும் அனுசரித்து வாழ்ந்ததனால், சகலரின் அன்புக்குரியவராக விளங்கினார்கள். தனது சகோதரர்களின் குழந்தைகளின் மீது மட்டற்ற பாசத்தை சொரிந்து வாழ்ந்தவார்கள்.
செல்வந்தக் குடும்பத்தில் பிறந்தாலும் ஏழ்மையான வாழ்வையே நேசித்தவர்கள். ஆடம்பர மோகமோ, நவ நாகரீக வாழ்வின் ஈர்ப்போ அவர்களிடம் காணப்படவில்லை. எளிமையான வாழ்வில் ஆர்வங் கொண்டவராக விளங்கியவர்களும், வாழ்ந்தவர்களும், செல்வங்களையும் சொத்துக்களையும் தள்ளியே வைத்ததனால் எதையும் பிறருக்காக விட்டுக்கொடுத்து அவர்களின் நல்வாழ்வினை கண்ணாரக் கண்டு இரசித்து குதூகலித்தனர்.( 147. தகவல் : திருமதி ஏ.டபிள்யு. ஸாஹினா, அக்கரைப்பற்று.)
ஆரம்ப மார்க்கக் கல்வியை குர்ஆன் மதரஸாவில் பெற்றுக் கொண்டனர். ஐங்காலத் தொழுகைகளை பேணுதலோடு நிறைவேற்றி வந்தவர்கள். ஸுப்ஹான, முஹையதீன், மீரா, பத்ர் முதலான மௌலித்துக்கள், வித்ரியா, தலைப்பாத்திஹா, ஹம்து ஸலவாத்து, புர்தா போன்றவைகளை ஓதுவதில் பேரார்வம் கொண்டவர்கள். அவ்லியாக்களின் ஸியாரங்களை தரிசித்தல், அவர்கள் பெயரால் ஹதியாக்களை வழங்கல் முதலானவைகளும் அவர்களின் வாழ்வோடு கலந்திருந்தன.
ஏழை எளியோர்களை ஆதரித்து வந்தனர். அவர்களின் வாழ்வுக்குத் தேவையான பணம், பண்டங்கள், துணிமணி என்பவைகளை கொடுத்துதவி வந்தனர். உதவி கோருபவர்களின் தேவைகளை இயன்றளவு நிறைவேற்றி வந்தனர். வெளிநாடு செல்வதற்கு பணம் கேட்டதற்காக கழுத்திலணிந்திருந்த மாலைகளை கழற்றி கொடுத்திருக்கின்றனர். பிறருக்கு கொடுப்பதிலும், பிறருக்கு உதவுவதிலும் ஆத்ம திருப்தி கண்டனர். யாசகர்களோடு ஒட்டியுறவாடுவதிலும் சுகங்கண்டனர். அவர்களின் இன்பதுன்பங்களை வினவியும், விசாரித்தும் அவர்களின் ஏற்றத்திற்காக பல உதவிகளை செய்தும் வந்தனர். இவர்களின் வீட்டில் தங்கி வெளியூர் யாசகர்கள் தமது பிழைப்பை நடத்தினர்.( 148. தகவல் : எம்.பீ. நியாஸ், அக்கரைப்பற்று.)
1969 ம் ஆண்டு பஸ்லுனும்மா (வலி) அவர்களுக்கும் அல் – குத்ப் அப்துல் மஜீத் மக்கத்தார் (றலி) அவர்களுக்கும் திருமணம் நடைபெற்றது. இவ்விருவர்களின் சிறுபராயத்திலே இருவீட்டு தாய், தந்தையர்களும் பேசி நிச்சயித்துக் கொள்ளப்பட்ட திருமணம்தான் அது. இஸ்லாமிய பாரம்பரியங்களை தழுவிக் கொண்ட திருமணமாக அது அமைந்தது.
குத்புனா அப்துல் மஜீத் மற்றும் பஸ்லூனும்மா அவர்களின் திருமண அழைப்பிதழ் (கி.பி. 1969 மார்ச்) Picture – 04
இவர்கள் இருபிள்ளைகளின் தாயாக இருந்துள்ளனர். 1970 ஆம் ஆண்டு ஸெய்யிதா பாத்திமத்துஸ் ஸஹறா என்ற பெண் குழந்தையையும் 1973 ஆம் ஆண்டு அஸ்ஸெய்யித் திஷ்ஷிமாலைன் என்ற ஆண்குழந்தையையும் பெற்றெடுத்தனர். மேலும் அப்பிள்ளைகளை உயர்ந்த மனம் படைத்தவர்களாக வளர்த்தெடுப்பதில் கவனஞ் செலுத்தினர். அந்நோக்கை அடைவதற்காக பிள்ளைகளோடு கண்டிப்புடன் நடந்து கொண்டனர். பிள்ளைகளின் விருப்பங்களினை நிறைவேற்றுவதில் ஆர்வங்கொண்டாலும் அவை பிள்ளைகளின் நல்வாழ்விற்கு ஊறு செய்யக்கூடியதாகவிருப்பின் அதை முற்றாக வெறுத்தனர். மறுபுறம் பிள்ளைகளின் ஆத்ம வளர்ச்சிக்கு தேவையான அன்பு, பாசம், நேசம் என்ற தாய்மை குணங்களையுஞ் சொரிந்து நின்றனர்.
இவர்களின் ஆத்மீக குருவாக சங்கைக்குரிய குத்புனா ஹல்லாஜுல் மன்ஸூர் (றலி) விளங்கினர். இப்பெரியார் 1977 ஆம் ஆண்டு இவர்களுக்கு (பைஅத்) செய்தனர். தம் குருநாதரின் இஸ்லாமிய அறப்போதனைகளின் அடிப்படையில் ஆன்மீக, அநித்திய வாழ்வினை அமைத்து கொண்டனர். இறைகாதலும், இறைபக்தியும் ஆன்மீக உயர்ச்சிக்கு கொழுகொம்பாயிற்று. திருக்காட்சிகளில் அவர்களின் மனம் ஒன்றிவிட்டன.
கணவருக்கு சிறந்த மனைவியாக இல்லற வாழ்வில் இன்பங் கண்டனர். கணவரினது ஒவ்வொரு சுகதுக்கங்களிலும் பங்கு கொண்டனர். கணவரோடு அதிக அன்பு பூண்டு கணவரின் உயர் வாழ்விற்கு ஊன்றுகோலாய் அமைந்தனர். கணவருக்காக எத்தகைய துன்பங்களையும் சகித்துக் கொண்டனர். சுற்றியிருப்போரும் உறவினர்களும் கணவரைப்பற்றி தப்பாக விமர்சித்தபோதும் அதைக்கண்டு கலங்காது பொறுமையுடனும் கணவரின் ஆத்மீக வாழ்வுக்கு உரஞ்சேர்த்து நின்றனர். கணவரிடமிருந்து செல்வத்தையோ, பணத்தையோ எதிர்பார்த்து நின்றவரல்லர்.
கணவரின் பணமும் உழைப்பும் தரீக்கா வளர்ச்சிக்காக செலவிடப்பட்டது. தம் புற வாழ்வைப் பற்றி எவ்வித கவலையுங் கொள்ளாதவர்கள். காதிரிய்யியா, ஜிஸ்திய்யியா தரீக்காக்களின் வளர்ச்சிக்காக எதையும் தியாகம் செய்யத் துணிந்தனர். “ஹல்லாஜ் மகாம்” இனைக் கட்டுவதற்காக தந்தையால் தமக்கு வழங்கப்பட்ட காணியை வழங்கி ஊக்குவித்தனர். பொத்துவில் வீதி, அக்கரைப்பற்று – 01 ல் அமைக்கப்பட்டிருக்கும் இம்மகாம் கட்டுமானத்திற்காக பல பவுன் தங்க நகைகளை கொடுத்துதவினர். கணவரின் உழைப்பை இஸ்லாமிய பணிக்காக செலவிட அனுமதித்த இம் மஹானி தையல் தொழிலை மேற்கொண்டு அதிலிருந்து கிடைக்கும் வருமானத்தை தம்குடும்பத்திற்காக செலவிட்டனர்.( 149. தகவல் : எம்.ஏ. ஆதம்லெப்பை, அக்கரைப்பற்று.)
‘ஹல்லாஜ் மகாம்’ கட்டுவதற்கு முன் . 1977 – 1981 ஆம் ஆண்டு வரை இவர்களின் இல்லத்திலேயே காதிரிய்யா றாதீப் மஜ்லிஸ்கள் நடைபெற்று வந்தன. பிரதி வெள்ளிக்கிழமைதோறும் நடைபெற்று வந்த ‘திக்ர்’ மஜ்லிஸிற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் மனநிறைவுடன் மேற்கொண்டனர். மஜ்லிஸ் முடிவுற்றதும் தேநீர், சிற்றுண்டி, விருந்துபசாரங்களையும் வழங்கி கௌரவித்தனர். தரீக்கா முரீத்தீன்கள், முஹீப்பீன்களைத் தம்பிள்ளைகளைப் போல் வழிநடத்தி தாய்மைக் குணங்களை வெளிப்படுத்தி நின்றனர்.(150. எம்.ஏ. றஸாக், அக்கரைப்பற்று.)
குடும்பம் ஒரு பல்கலைக்கழகம் என்பதற்கொப்ப இவர்களின் குடும்ப வாழ்வும் சிறந்தோங்கிற்று. கணவரின் மீது நீங்காத அன்பும், அவர்களின் பிள்ளைகளின் மீது கொண்டிருந்த பற்றும் நேசமும் குடும்ப பந்தத்தை அமைதி நிறைந்த வாழ்வாக அமைத்தது. சிறு சலனமோ, சச்சரவோவின்றி 29 வருடங்கள் சந்தோஷத் தென்றலின் வருடலில் காலம் கழித்தனர். இவர்களின் வாழ்வில் ஒரு நாள்கூட கணவன் மனைவி உறவில் பிணக்குகள் ஏற்பட்டது கிடையாது. எல்லா ஸூஃபிகளின் வாழ்வில் ஏற்பட்ட வேதனைகளும் சோதனைகளும் இவர்களுக்குமிருந்தன. குடும்பம் புனித ஆலயம் போலிருந்ததால் அத்தனையையும் சுலபமாக தள்ளிவிடவும், அல்லாஹூவின் பக்கம் பரஞ்சாட்டவும் முடிந்தன.
அவர்களின் தெய்வ நம்பிக்கையினாலும் இறை பக்தியினாலும் நாட்களும் வாழ்வும் நகர்ந்தன. அல்லாஹூவின் மீது கொண்டிருந்த அன்பு, கண்மணி நாயகம் (ஸல்) அவர்கள் மீது ஏற்பட்ட அளவற்ற நேசம் ஆத்மீக வாழ்வில் ஏற்பட்ட சோதனைகளை எரித்து நின்றன. அது இறை தரிசனங்களுக்கு வழிகோலின. புண்ணிய சீலர்களின் தரிசனங்கள் அவர்களை சூழ்ந்து கொண்டன. ஓர் உண்மையான ஆத்மீக குருநாதரினால் கிடைக்கும் அரும்பேறுகள் அளவிடமுடியாதவை. அவை மொழி எனும் ஊடகத்தினால் விளக்க முடியாதவை. அவரவர் அனுபவங்களே அவைகளை உணர்த்தக்கூடியவை. அது ஒரு பரமானந்த நித்திய வாழ்வாகும். அப்புனித வாழ்வை ஒரு சிலருக்குத்தான் அல்லாஹூ வழங்கி வருகின்றான். இவ்வருள் வாழ்வை சுகித்த ஒருவர்தான் பஸ்லூனும்மா (வலி) ஆவார்கள்.
இப்புனித மஹானி பல வலிமார்களின் ‘குருபத்தை’யும் ஆசிர்வாதங்களையும் பெற்றுள்ளனர். குத்புல் அக்தாப் முஹ்யித்தீன் அப்துல் காதிர் (றலி), நாகூர் மீரா ஷாஹுல் ஹமீத் (றலி), முத்துப்பேட்டை ஷெய்க் தாவூத் (றலி) முதலான அவ்லியாக்களின் தரிசனங்களைப் பெற்ற பாக்கியவான்; அல்- குத்ப் அப்துல் வாஹித் (றலி) யின் அருளுக்கும் பிரார்த்தனைக்கும் உட்பட்டவர்கள்.
மனோபலமும், திடகாத்திரமும் உடைய இவர்கள் சுகதேகியாக வாழ்ந்தாலும் 1989 தில் பாரதூரமான நோய்க்கு உட்பட்டனர். இடுப்பில் திரட்டியெழுந்த கட்டியை சத்திர சிகிச்சை செய்து அகற்றுவதற்காக மகரகம புற்றுநோய் வைத்தியசாலைக்கு சென்றபோது இவர்கள் என்பு புற்றுநோயால் பீடிக்கப்பட்டுள்ளனர் என கிழக்காசியாவில் புகழ்பெற்ற புற்றுநோய் வைத்தியர் ‘ஜெயத்திலக்க’யினால் மருத்துவப் பரிசோதனையின் மூலம் கூறப்பட்டது. கட்டியகற்றப்பட்டாலும் அவ்வைத்தியசாலைக்கு மாதாந்த மருத்துவ பரிசோதனைக்காக செல்ல வேண்டியேற்பட்டது. அவ்வாறு அவ்வைத்தியசாலைக்கு 1994ல் சென்றபோது கடுமையான என்பு புற்றுநோய்க்குட்பட்டிருப்பதாக கூறி வைத்தியசாலையில் அனுமதித்தனர். ஒரு சில வாரங்கள் கடந்த நிலையில், இன்னும் சில நாட்களில் இவர்கள் மரணித்து விடுவார்கள் என புற்றுநோய் வைத்திய நிபுணர் ‘ஜெயத்திலக்க’ கூறி மருத்துவ மனையிலிருந்து வீடு கொண்டு செல்லுமாறு அறிவுறுத்தியதற்கு அமைவாக வீட்டுக்கு அழைத்துக் கொண்டு வரப்பட்டனர்.
அவர்களுக்கு மக்கத்தார் வாப்பாவால் அஸ்மா, இஸ்ம் எழுதிக் கொடுக்கப்பட்டது. இஸ்மையும் ஓதிய தண்ணீரையும் குடித்த பஸ்லூனும்மா சிறிது நேரத்தில் கட்டி கட்டியாக வாந்தியெடுத்ததுடன் புற்றுநோய் படிப்படியாகக் குறையத் தொடங்கியது. இதற்கு நான்கு மாதங்களுக்குப் பிற்பாடு ‘மகரகம’ வைத்தியசாலைக்கு வைத்தியர் ‘ஜெயதிலக்க’விடம் கொண்டு சென்றபோது வியப்புடன் நோக்கி, “இவர் இன்னும் உயிரோடு இருக்கின்றாரா?” என வினாவெழுப்பி பரிசோதித்த போது புற்று நோய்க்கான எவ்வித அறிகுறிகளும் அவர்களின் உடலில் தென்படாததனால் அவருக்கு அது ஆச்சரியத்தின் மேல் ஆச்சரியமாகவிருந்தது. இருந்தும் அவர் மனம் அதனை நம்ப மறுத்தது.
அதனால் முழுமையான வைத்தியப் பரிசோதனைக்குட்படுத்தி, மருத்துவ பரிசோதனைச் சான்றிதழைக் கொண்டு காண்பிக்குமாறு வேண்டியதற்கு அமைவாக மருத்துவச் சான்றிதழ் அவர்முன் சமர்ப்பிக்கப்பட்டது. அச்சான்றிதழ் புற்றுநோய் இல்லையென்பதைத் தெரிவித்தது.
அம்மருத்துவ பரிசோதனை தவறாக செய்யப்பட்டிருக்குமோ? ஏன சந்தேகித்து, தான் நேரடியாக பரிசோதித்தறிய விரும்பி என்புப்புற்று நோய்க்கான மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொண்டார். 15 நாட்களின் பிற்பாடு புற்றுநோய் இல்லை எனக் கூறி அதற்கான மருத்துவச் சான்றிதழ் வழங்கினர்.(151. எம்.ஏ. அப்துல் வாஹித் MSc, அக்கரைப்பற்று.)
புற்றுநோயிலிருந்து முற்றாக விடுபட்ட பஸ்லூனும்மா (வலி) தனது மகளுக்கு 1994 ம் ஆண்டு திருமணம் செய்து வைத்தனர். மறுவாண்டு (ஸெய்யிதா லம்றத் ஹாத்தூன்) பேத்தியொன்றையுங்கண்டனர். தம் மகனை மேற்படிப்புக்காக ‘ரஷ்யா’ அனுப்பினர், தம் மகனின் திருமணத்திற்காக பெண்பார்த்துத் திட்டமுங்கட்டினர்.
தங்கை ஸாஹினாவின் மீது அதிக அக்கறை கொண்டிருந்த இவர்கள் தங்கையின் வாழ்க்கை துணைவரையும் பேசினார்கள், அவர்களின் திருமண நிச்சயதார்த்தத்தின் மூன்று நாட்களுக்கு முன்…
அது ஒரு மிஃறாஜ் இரவாகும். கணவரை அழைத்து கணவரின் மடியில் சாய்ந்தவர்களாக ஈஸா (அலை) அவர்கள் வருகை தந்து தன் உடலை தடவியதையும் மலக்குகள் சமுகம் தந்திருப்பதையும் விளக்கி, தம் பயணத்தை முன்னறிவித்தனர். பின் 8 பவுண் நகையை தம்பி கலீலுக்கும், தாலியை தன் மகனுக்கும் கொடுக்குமாறு வேண்டி, சில மணிநேரம் கணவரோடு கலசமறப்பேசி இரவு 11.30 மணியளவில் இறை தரிசனத்திற்காக தம் வாழ்வை நிறைவு செய்தனர்.
மகாத்மீகம் பொருந்திய இவர்களின் வாழ்வு ஹிஜ்ரி 1418 றஜப் பிறை 25 (1997.11.25 செவ்வாய்க்கிழமை) ஆம் நாள் மறுவாழ்வின் துவக்க நாளாகிவிட்டது. ஸூஃபித்துவ மேதைகளின் சரித்திரம் சிறப்புப் பண்புகளை உதிரிச் சென்றது போல் இவர்களின் வாழ்வும், மரணமும் பல சிறப்புக்களால் ஓங்கிற்று. ஆத்ம குரு நாதரினால் கை, வாய் கட்டப்பட்ட பெருமைக்குரியவர்கள்.
மத்ரஸா கட்டுவதற்காக மக்கத்தார் வாப்பா வாங்கிய ‘மஹ்ழறத்துல் காதிரிய்யா’ தைக்காவுக்கு ‘வக்பு’ செய்யப்பட்ட காணியில், தனது குருநாதர் ஹல்லாஜ் மன்ஸூர் (றலி) ஆல் காட்டப்பட்ட இடத்தில் கபுறு தோண்டப்பட்டு, அவ்விடத்தில் பஸ்லூனும்மா (வலி)யை அடக்குமாறு பணிக்கப்பட்டதற்கு இசைவாகவே அக்காணிக்குள் அடக்கப்பட்டுள்ளனர்.
1. அஸ்-ஸெய்யித் பஸ்லுனும்மா (வலி)ன் ஸியாரம்
2. அஸ்-ஸெய்யித் துஹ்பா உம்மா (வலி)ன் ஸியாரம்
Figure – 51
இப்புனித அருள்நேசரின் மக்பரா வங்காளவிரிகுடா கடல் தொட்டு துலவும் அக்கரைப்பற்றுக் கடற்கரையிலிருந்து 150 மீற்றர் தொலைவிலும் சேர் றாஷிக் பரீத் வீதியின் மேற்காகவும் ஸாவியா வீதியின் வட புறமருங்காகவும் அமைந்துள்ளது.
இவர்கள் பிரத்தியேகமாக அடக்கப்பட்டதையிட்டு, அப்பகுதிவாழ் மக்கள் பலத்த எதிர்ப்புக்களை வெளிக்காட்டினர். விமர்சனங்களையும், கண்டனங்களையும் செய்தனர். கபுறைத் தோண்டுவதற்கு வேறொரு கூட்டத்தினர் பலத்த முயற்சிகளை மேற்கொண்டனர். ஆரம்பத்தில் இவ்வாறிருந்தாலும் நாளாக நாளாக இம்மக்கள் இம் மக்பறாவை நேசிக்கத் தொடங்கினர். இப்போது இதன் வளர்ச்சியைக் கண்டு பூரிப்படைவோர்களாகவும், இதனை ஆதரிப்போர்களாகவும் மாறியுள்ளனர். காலமாற்றங்கள் கனிந்த பதிலையும் உண்மையின் தெளிவுகளையும் கொடுக்கவல்லது என்பது மேற்போன்ற சம்பவங்களிலிருந்து அறிய முடிகிறது.(152. தகவல் : N.P. மஜீத், நீதிமன்ற உத்தியோகத்தர், அக்கரைப்பற்று)
“பஸ்லுன் தெய்வீக அனுகிரகம் கிடைக்கப்பட்ட காமில் வலியாகத் திகழ்ந்தவர். பெருமானார் (ஸல்) அவர்களின் வாழ்வின் ஏற்றத்திலும், இறக்கத்திலும் கதீஜா நாயகி (றலி)ன் பங்களிப்பை எவ்வாறு மதிப்பிட முடியாதோ அவ்வாறு பஸ்லூனின் பங்களிப்பை அளவிட முடியாது. கதீஜா நாயகியைப் போல் மஜீதின் வாழ்வில் இடம்பிடித்த ஒரு பெண்மணி பஸ்லூன் ஆவார்” என ஹல்லாஜ் மன்ஸூர் (றலி) விளக்கியுள்ளனர்.
இவர்களின் கணவர் (மக்கத்தார் வாப்பா) அவர்கள், “என் வாழ்வின் முன்னேற்றத்திற்கும் ஆத்மீக உயர் பதவிகளைப் பெறுவதற்கும் சகல வழிகளிலும் ஒத்தாசை புரிந்தவர் பஸ்லூன்” என அவர்களின் நற்பண்புகளை நினைவு கூர்ந்து விபரிப்பார்கள்.
பஸ்லூனும்மா (வலி) விட்டுச் சென்ற இஸ்லாமிய அகவியல் சற்குணங்கள், வாழ்வு நெறி ஒழுக்கங்கள் என்பன போன்ற உயர் படிவுகள் ஸூஃபிகளின் உள்ளங்களை நெகிழச் செய்யக் கூடியவைகள். இவர்கள் ஸூஃபிகளால் என்றும் நினைவு கொள்ளப்படுவார்கள். ஆண்டுதோறும் றஜப் மாதம் மிஃறாஜ் தினத்தில் இவர்களின் ‘நினைவு விழா’ கொண்டாடப்பட்டு கந்தூரி வழங்கப்பட்டு வருகின்றது.
Leave a comment