Imam Jahfar Sadik (Raliyallahu Anhu)

இமாம் ஜஃபர் ஸாதிக் றலியல்லாஹு அன்ஹு.

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வழிவந்த ஜஃபர் ஸாதிக்  றலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஹிஜ்ரி 83 ரபியுல் அவ்வல் மாதம் பிறை 17 திங்கள் இரவு பிறந்தார்கள். இவர்கள் அன்னையின் பெயர் உம்முபர்வா என்பதாகும். அவர்கள் ஸெய்யிதினா அபுபக்கர் றலியல்லாஹு அன்ஹு அவர்களின் மகன் முகம்மதின் மகன் காஸமின் மகளாவார். காஸம் என்பார் ஸெய்யிதினா அபுபக்கர் றலியல்லாஹு அன்ஹு அவர்களின் மற்றொரு மகன் அப்துற்றஹ்மானின் மகள் அஸ்மாவை மணமுடித்தே உம்முபர்வாவை ஈன்றெடுத்தார்கள். தமது குழந்தைக்கு பெயர் சூட்டுமாறு தம் தந்தையாம் இமாம் ஜைனுல் ஆபிதீன் அவர்களை வேண்டி நின்றனர் முஹம்மது பாகிர் அவர்கள். அக் குழந்தைக்கு ஜஃபர் எனும் அழகுத் திருப்பெயரை சூட்டி மகிழ்ந்தனர். பிற்காலத்தில் உண்மைக்கு உறைவிடமாய் விளங்கிய இவர்களின் திருப் பெயரோடு சாதிக் என்னும்(உண்மையாளர்) என்ற பெயரும் ஒருங்கிணைந்து உலகம் முழுவதும் பெயர் பெற்றது.

தம்முடைய சிறு வயதில் தம் அருமை பாட்டனார் இமாம் ஜைனுல் ஆபிதீன் அவர்களிடமே இறைவனின் திருமறையையும், நபிகளாரின் அருள்மொழிகளையும் கற்றுத் தேர்ந்தனர். இவர்களுக்கு 11 ஆண்டும் 10 மாதமும் எட்டு நாட்களும் நிறைவுற்ற போது இவர்களின் பாட்டனார் இமாம் ஜைனுல் ஆபிதீன் அவர்கள் மறைந்தார்கள். இவர்களுக்கு இவர்கள் தந்தையே இறைஞான செல்வங்களை வாரி வாரி வழங்கினர். தமது 31வது வயதில் இமாமின் பீடத்தில் அமர்ந்த இவர்களின் புகழ் எட்டுத்திக்கும் பரவியது. இவர்கள் நடத்திவந்த கல்லூரியில்  பல்வேறு பகுதிகளிலிருந்தும் மக்கள் வந்து கல்வி பயின்றனர்.

தம் மாணவர்களை நோக்கி, ‘நீங்கள் பயபக்தியுடையவர்களாகவும், அமானிதத்தை நிறைவேற்றக் கூடியவர்களாகவும், மக்களிடம் நன்முறையில் பழகுபவர்களாகவும், சுருக்கமாகப் பேசக் கூடிய சன்மார்க்க பிரசாகர்களாகவும் திகழுங்கள்’ என்று கூறினர். அதற்கு மாணவர்கள், சுருக்கமாக கூறி மக்களின் மனதை எவ்வாறு தொடுவது?’ என்று கேட்டனர். அதற்கு இமாம் அவர்கள்’ நீங்கள் இறைகட்டளைக்கு பணிந்து நேர்வழியில் நடப்பின் அதிகமாகப் பேச வேண்டியதில்லை.உங்களின் செயலே பெரும் முழக்கம் செய்துவிடும். அதுவே பெரும் பிரகாசமாகிவிடும்’ என்று மறுமொழி கூறினர்.

இன்சொல்லும், இனிய பண்பும் வாய்க்கப் பெற்ற இவர்கள் தமக்கு தீங்கு செய்தவர்களுக்கும் நல்லதே செய்யும் பண்பு பெற்று விளங்கினர். தம் உறவினர் ஒருவர் தம்மை இழிவாகப் பேசிய போதும், அவர்களின் கஷ்டநிலைக்கு அவர்களுக்குத் தெரியாமலேயே உதவி செய்தனர்.

ஒருவர் வந்து தங்கள் சிறிய தந்தையின் மகன் தங்களை கண்டபடி ஏசுகிறான் என்று சொன்னார்கள். உடனே அவர்கள் இரண்டு ரக்அத் தொழுது இறைவனிடம், ‘இறைவனே நான் அவரை மன்னித்து விட்டேன். எனவே நீயும் அவரை மன்னித்துவிடுவாயாக! என்று வேண்டினர். இதுகண்டு அந்த நண்பருக்கு வியப்பு ஏற்பட்டது. இமாம் அவர்கள் அவரை நோக்கி, ‘நம்மை ஒருவர் ஏசிவிடின் அதற்கு நாம் எழுபது விதங்களில் நற்காரணங்களை கற்பிக்க வேண்டுமேயன்றி, அவரை நாம் திரும்பவும் ஏசி விடக் கூடாது. அதற்கு நற் காரணம் ஒன்றையேனும் நாம் காணவிடில் அதற்கு ஏதேனும் நாம் அறியாமல் நற்காரணம் இருக்கவேண்டும் என்று எண்ணிக் கொள்ள வேண்டும்’ என்று அருள்மொழி கூறினர்.

ஒருநாள் இமாம் அவர்கள் கப்பலோட்டி (நாத்தீகன்) ஒருவனுடன் உரையாடிக் கொண்டிருக்கும்போது, ‘நீ உன் கடற்பிரயாணத்தில் எப்போதாவது சிக்கியுள்ளாயா? என்று வினவினர். அதற்கு அவன் ஆம்! ஒரு தடவை நான் சென்ற கப்பல் புயலில் சிக்குண்டு உடைந்து, கடலில் மூழ்கிவிட்டபோது கப்பலில் உள்ள அனைவரும் இறந்துவிட நான் மட்டும் தத்தளித்து ஒரு மரத்துண்டை பிடித்துக் கரை சேர்ந்தேன் என்று விரிவாக எடுத்துரைத்தான். கப்பல் உன்னை கரை சேர்க்கும் என்று எண்ணியிருந்தாய். ஆனால் அந்த கப்பல் மூழ்கியபோது,நீ பிடித்த மரத்துண்டு உன்னை கரை சேர்க்கும் என்று எண்ணினாய். அதுவும் உன் கையைவிட்டு நீங்கிய போது, நிர்கதியாய் நீ தவித்துக் கொண்டிருந்த போது, எவரேனும் காப்பாற்றினால்தான் உயிர் பிழைக்க இயலும் என்று நீ நம்பினாயா? என்று வினவினர். அவ்விதமே நம்பினேன் என்று அவன் மறுமொழி பகர்ந்தான். அதற்கு அவர்கள் அவனை நோக்கி, ‘ அந் நம்பிக்கை உனக்கு எதன் மீது இருந்தது? உன்னைக் காப்பாற்றுபவர் யார்? என்று வினவினர்.அவன் பதில் சொல்லமுடியாமல் வாய்மூடி இருந்தான். ‘நிர்க்கதியாயிருந்த நீ உன் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்கு எதன் மீது நம்பிக்கை கொண்டாயோ, அவன்தான் அல்லாஹ்! அவனே உன்னைகக் காப்பாற்றியவனாவான்’ என்று இமாம் அவர்கள் சொல்லி வாய்மூடும் முன் அவன் கலிமா சொல்லி முஸ்லிமாக மாறினான்.

ஒருநாள் இமாம் அவர்கள் தங்களின் இல்லத்தில் அமர்ந்திருக்கும்போது, அவர்களை சந்திக்க இருவர் வந்தனர். வந்தவர்களில் ஒருவர் மற்றவரை இமாம் அவர்களுக்கு அறிமுகம் செய்துவைக்கும்போது ‘இவர்கள் இராக் நாட்டின் சட்டமேதைகளில் ஒருவர்’ என்று கூறி வாய்மூடும் முன் இமாம் அவர்கள் அவரை நோக்கி, ‘அப்படியா! பகுத்தறிவு ரீதியில் மார்க்கத்தை அணுகும் நுஃமான் இப்னு தாபித் தானே இவர்’ என்று வினவினர். ஆம் அதுதான் என் பெயர். மக்கள் என்னை அபுஹனீபா என்றழைப்பர்  என்றனர்.  இமாம் அவர்கள் அபுஹனீபா அவர்களை நோக்கி பல்வேறு கேள்விகணைகளைத் தொடுத்தனர். அதற்கு அவர்களும் பதிலுரைத்தனர்.

இமாம் அவர்கள் கேட்ட கேள்விகளில் முக்கியமானவை: மூத்திரம், விந்து இவற்றில் எது மிகவும் அசுத்தமானது? என்று இமாம் அவர்கள் வினவ, இமாம் அபூஹனீபா அவர்கள் மூத்திரம் என்றனர். மூத்திரம் பட்டால் அந்த இடத்தை கழுவினால் போதும். ஆனால் விந்து வெளிப்படின் அந்த இடத்தை கழுவினால் மட்டும் போதாது. குளித்து சுத்தமாகவும் வேண்டும் என்று இருக்க, நான் பகுத்தறிவு ரீதியாக பதிலளித்தால் இதற்கு மாற்றமாக அல்லவா நான் தீர்ப்புக் கூறியிருப்பேன் என்று இமாம் அபுஹனீபா அவர்கள் கூறினர்.

பின்னர், ஆணிலும், பெண்ணிலும் வலுவறறவர் யார்? என்று இமாம் ஜஃபர் சாதிக் அவர்கள் வினவ, ‘பெண்’என்று இமாம் அபுஹனீபா விடை பகர்ந்தனர். சொத்துரிமையில் பெண்ணுக்கு ஒரு பங்கு, ஆணுக்கு இரண்டு பங்கு என்பதை மாற்றி, பெண் வலுவற்றவளாகயிருப்பதால் அவளுக்கே சொத்துரிமையில் இரு பங்கு கிடைக்க தீர்ப்பளித்திருப்பேன். ஆனால் நான் அப்படி செய்யவில்லை என்று இமாம் அபுஹனீபா அவர்கள் கூறினர். இவ்வாறு தொழுகை,நோன்பு பற்றிய விளக்கங்களை கூறினர். இதுகேட்டு மகிழ்ந்த இமாம் ஜஃபர் சாதிக் அவர்கள் மகிழ்ந்து இமாம் அபுஹனீபா அவர்களைக் கட்டித் தழுவி நெற்றியில் முத்தமிட்டனர்.

அன்னவர்களை அணுகி அறிவுரை பெற்று ஆன்மீகப் பரிபக்குவம் பெற்றவர்களில் சுல்தானுல் ஆரிபீன் பாயஜீத் பிஸ்தாமி றலியல்லாஹு அன்ஹு அவர்களும் ஒருவர். நான் நானூறு ஆசிரியர்களை அணுகி ஆன்மீகக் கல்வி பயின்றுள்ளேன். ஆனால் நான் ஜஃபர் சாதிக் அவர்களை சந்திக்காவிடின் ஒரு முஸ்லிமாகி இருக்கமாட்டேன் என்று கூறியுள்ளார்கள்.

இவர்கள் பிற்காலத்தில் தம் இல்லத்தில் தனித்திருந்து இறைவணக்கத்தில் ஈடுபடவும், தம்மைக் காண வருபவர்களுக்கு அறபோதம் வழங்கவும் செய்து வந்தார்கள். விண்ணியியலிலும், மருத்துவ இயலிலும் , இரும்பைப் பொன்னாக்கும் கீமியா வித்தையிலும் இவர்கள் திறன் பெற்று விளங்கினார்கள். இவர்கள் பல நூல்கள் எழுதியுள்ளனர். இவர்கள் எழுதிய மார்க்கச் சட்டதிட்டங்கள் பற்றிய நூலே ஷியாக்களின் பிக்ஹு கலைக்கு மூல நூலாக அமைந்துள்ளது. கனவு விளக்கம் பற்றி ஒரு நூலும் தொகுத்துள்ளார்கள். இதுமட்டுமில்லாமல் இவர்கள் கவிஞராகவும் விளங்கினர்.

அப்பாஸியக் கலீபா மன்ஸூர் அவர்களுக்கு இமாம் அவர்களின் செல்வாக்கு உயர்ந்து வருவதைக் கண்டு அவர்கள் மீது வெறுப்பு ஏற்படலாயிற்று. அவர்களின் ஆதரவாளர்களில் சிலர் அப்பாஸியக் கிலாபத்தை எதிர்த்து புரட்சி செய்வதையும், ஈராக் மக்கள் ‘ஜகாத்’ பணத்தை சேகரித்து அவர்களுக்கு அனுப்பிவைப்பதையும் கண்டு மன்னர் பொறாமையால் வெந்து அவர்களை ஒழித்துக் கட்ட தீர்மானித்து, ஹிஜ்ரி 147ம் ஆண்டு ஹஜ் செய்ய மக்கா வந்தபோது ஹஜ் கடமையை முடித்துவிட்டு மதீனா நகரம் வந்தவுடன் இமாம் அவர்களை அழைத்து வர தம் அமைச்சர் ரபீஉவை அனுப்பினார். ஆனாலும் மன்னரால் அவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டதை நிரூபிக்க முடியவில்லை.

எனவே அவர்களின் மாண்பினைப் போற்றி, அவர்களுக்குப் பரிசுகள் கொடுத்து அனுப்பிவைத்தார். ஆனாலும் இமாம் அவர்கள் மீது மன்னர் கொண்ட குரோதம் நீங்கவில்லை. மதீனாவில் அமைதியாக வணக்கவழிபாடுகளில ஈடுபட்டிருந்த இமாம் அவர்களை பக்தாத் அழைத்து வரச் செய்தனர். இமாம் அவர்கள் அரண்மனைக்குள் நுழைந்ததும், மன்னர் அவர்களை வரவேற்று உபசரித்து அவர்களின் வேண்டுகோள்படி மதீனாவிற்பே அனுப்பி வைத்தார்.

மன்னர் சொன்னதற்கு நேர் மாறாக நடந்து கொள்வது பற்றி அமைச்சர் ரபீஉ கேட்டபோது, இமாம் அவர்கள் அரண்மனைக்குள் நுழைந்தபோது அவர்களின் தலைமேல்  பெரும் பாம்பு படம் எடுத்து என்னை எச்சரிக்கை செய்வது போல் இருந்ததை கண்டு மருண்டு விட்டேன் என்றார்.

பின்னர் ஒருநாள் ஒற்றர்படைத் தலைவன் முஹம்மது பின் சுலைமானை அழைத்து, அவன் காதோடு காதாக மன்னர் ஏதோ சொல்ல அவன் அடுத்த கணம் அவ்விடத்தைவிட்டு நகர்ந்தான். பின் மதீனா சென்று இமாம் அவர்களை அடிக்கடி சந்தித்து அறிவுரை கேட்கும் வழக்கமுடையவன் போல் மாறினான்.

ஒருநாள் ஹிஜ்ரி 148 ரஜப் பிறை 15 அன்று அவன் திராட்சைப் பழத்தை ஒரு தட்டில் கொண்டு வந்து அவர்களைத் அருந்தக் கேட்டுக் கொண்டான். அவர்கள் அதை ஒவ்வொன்றாக அருந்தினார்கள். அதன்பின் அவன் அவ்விடத்தைவிட்டு நகர்ந்தான். விஷம் வைத்து கொடுக்கப்பட்ட அந்த பழம் உள்ளே சென்றதும் தனது வேலையை செய்ய ஆரம்பித்தது. தாம் நஞ்சூட்டப்பட்டதை அறிந்து, தமது முடிவு நெருங்கிவிட்டதை அறிந்து தமது மகன் மூஸல் காளிமை அழைத்து அறிவுரை பகர்ந்தார்கள். தம் நண்பர்கள், மாணவர்களுக்கு நல்லுரைகள் நல்கி விடைபெற்றார்கள்.

அவர்கள் ஹஜ் செய்தபோது அணிந்த இஹ்ராம் துணி மற்றும் அவர்களிடமிருந்த இமாம் அலி றலியல்லாஹு அன்ஹு அவர்களின் தலைப்பாகைத் துணியையும் கொண்டு அவர்களுக்கு கபனிட்டு ஜன்னத்துல் பகீஃயில் அவர்களின் தந்தையார், பாட்டனார் ஆகியவர்களின் அடக்கவிடத்திற்கு அண்மையில் அடக்கம் செய்யப்பட்டார்கள்.

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *