Kuthubul Akthab Abdul Wahab Moulana (Raliyallahu Anhu)

அல்-குத்ப்,அஷ்-ஷெய்க்,அஸ்-ஸெய்யித் அப்துல் வஹாப் மௌலானா (றலி)

 அக்கரைப்பற்று சின்னப் பள்ளிவாசலில் நல்லடக்கம் செய்யப்பட்டிருக்கின்ற குதுபுனா அஷ்ஷெய்க் அப்துஸ்ஸமத் மௌலானா (றலி)ன் இரண்டாவது தாரத்திற்கு பொத்துவிலில் 1857ம் ஆண்டு பிறந்தவர்கள்தான்; ஷெய்க் அப்துல் வஹாப் மௌலானா (றலி) ஆவார்கள். மர்ஹபா ஹாஜ்ஜின் மகளே இவர்களின் தாய் ஆகும். பரிசுத்த அஹ்லுல் பைத்தில்  21வது தலைமுறையிலே இவர்கள் வருகின்றார்கள்.

சிறு வயதிலிருந்து ஆத்மீகத் மோகங் கொண்டவர்களாக இருந்து வந்ததுமட்டுமன்றி இத்துறையிலே தம் வாழ்வை முழுமையாக தானஞ் செய்துமுள்ளார்கள். தப்தர் ஜீலானி, கதிர்காமக் காடுகளில் தியான வாழ்வை நடத்தியுள்ளார்கள். தம் தந்தையின் வழிகாட்டலிலே ஞானப் பயிற்சிகளையும், ஞான முதிர்ச்சிகளையும் பெற்றுள்ளார்கள். மெஞ்ஞானிகளின் பரிசுத்த கோட்பாடுகளை தம் வாழ்வியல் கோட்பாடுகளாகக் கொண்டிருப்பதை அவர்களின் வாழ்வு முறை எடுத்து காண்பிக்கின்றது. ஒரு துறவிக்குரிய மனப்போக்கோடு ஷரிஅத்துடைய வரண்நெறிகளைப் பேணி ஆன்ம ஈடேற்றத்தை நடத்தியுள்ளார்கள். உலோகாயித எவ்வம்சத்திலும் பற்றுக் கொள்ளாது தெய்வீகத்தையே முதலிறுதி இலட்சியமாக கொண்டு ஆத்ம பாதையில் ஏற்படும் குறுக்கீடு, சோதனைகளைத் தாண்டி இறைத் தரிசனத்தில் அருள் நீராடும் அங்காலாய்ப்போடு இறை நம்பிக்கையின்  பக்கம் சகலதையும் ஒப்படைத்திருந்து; உத்தம நிலை ‘குத்பு’டைய தானத்தை தமதாக்கியுள்ள அவர்களின் வாழ்வியலிருந்து அறிய முடிகின்றது. (123.தகவல் : அஸ்-ஸெய்யித் ஏ. டபிள்யூ. சௌத்துன் உம்மா, மூதூர்).

இளம் பராயத்தில் ஷெய்க் அப்துஸ்ஸமத் மௌலானா (றலி)யிடமிருந்து காதிரிய்யி, ஜிஸ்திய்யி, றிபாஇய்யி, ஷாதலிய்யி, ஐதரூஸிய்யி தரீக்காக்களுக்கு ஷெய்க் அப்துல் வஹாப் மௌலானா (றலி) கலீபாவாக நியமிக்கப்பட்டிருந்துள்ளார்கள். இப்பருவத்திலேயே இஸ்லாமியப் பிரச்சாரங்களிலும் இஸ்லாமியப் போதனைகளிலும் ஈடுபட்டுள்ளதை அறிய முடிகின்றன.

நான்கு திருமணங்களை ஷெய்க் அப்துல் வஹாப் மௌலானா (றலி) முடித்துள்ளார்கள். பொத்துவில், அக்கரைப்பற்று, சாய்ந்தமருது, கிண்ணியா ஆகியவிடங்களில் மணஞ் செய்துள்ளார்கள். அத்திருமணங்களில் பல பிள்ளைகளைப் பெற்றெடுத்துள்ளார்கள். அப்துல் வஹாப் மௌலானாவின் சந்ததியினர்கள் அவ்விப்பிரதேசங்களில் இன்றுவரை வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.(124. தகவல் : அஸ்-ஸெய்யித் ஏ.டபிள்யூ. துஹ்பா உம்மா, அக்கரைப்பற்று).

அக்கரைப்பற்று தைக்காநகரில் ஸியாரங் கொண்டிருக்கும் அல்-குத்ப் யாஸீன் மௌலானா (றலி)யின் மகளை ஷெய்க் அப்துல் வஹாப் மௌலானா (றலி) திருமணஞ் செய்திருக்கின்றார்க்ள. அஸ்-ஸெய்யித் யாஸீன் மௌலானா (றலி) யெமன் நாட்டு ஐதரூஸிய்யி குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். இப்பெரியார் ஷெய்க் அப்துல்லாஹ் மௌலானா (றலி) மகள் அஸ்-ஸெய்யித் மூமினா உம்மா (வலி)யை விவாகஞ் செய்து. அஸ்-ஸெய்யித் புஆத்தும்மா (வலி)யை ஈன்றெடுத்தார்கள். இம்மாதுவை ஷெய்க் அப்துல் வஹாப் மௌலானா (றலி) வதுவை செய்துள்ளார்கள்.

அஸ்-ஸெய்யித் புஆத்தும்மா (வலி)யும் ஷெய்க் அப்துல் வஹாப் மௌலானா (றலி)யும் பொத்துவிலேயே தங்கள் தாம்பத்திய வாழ்வை நடத்தி வந்துள்ளார்கள். இவ்விறைநேசரால் இருவருக்கும் இரு குழந்தைகள் பிறந்துள்ளன. இவ்விருவருக்கும் முதற் குழந்தையாகப் பிறந்தவரே அல்-குத்ப், அஷ்-ஷெய்க் ,அஸ்-ஸெய்யித் அப்துல் வாஹித் மௌலானா (றலி) ஆவார்கள். இவர்களின் இரண்டாம் மகவாகப் பிறந்தவரே திருநிறை மாது அஸ்-ஸெய்யித் துஹ்பா உம்மா (வலி) ஆவார்கள். (125. தகவல் : அஸ்-ஸெய்யித் ஏ. டபிள்யூ. துஹ்பா உம்மா (வலி)).

பொத்துவில், அக்கரைப்பற்று, சாய்ந்தமருது, கிண்ணியா பகுதியில் ஷெய்க் அப்துல் வஹாப் மௌலானா (றலி) வாழ்ந்துள்ளார்கள். பொத்துவில் அல் இர்பான் மகாவித்தியாலய வீதியிலும் அக்கரைப்பற்றில் மக்கத்தார் வீதியிலும் (அஷ்-ஷெய்க் அப்துல் மஜீத் மக்கத்தார் (றலி)ன் வளவிலும்) கிண்ணியாவில் ஜாவாப் பள்ளி பகுதியிலும் இப்பெரியார் வாழ்ந்திருக்கின்றார்கள். இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளின் ஆத்ம சேவை புரிந்துள்ளார்கள். இவர்கள் இலங்கையின் பல் திசையிலும் நாடு தழுவிய சேவைகளைச் செய்துள்ளார்கள். குறிப்பாக கொழும்பு, திக்வெல்லை, பலாங்கொடை, மன்னார், கிண்ணியா, காத்தான்குடி, கல்முனை, சாய்ந்தமருது, அக்கரைப்பற்று, பொத்துவில் ஆகியவைகளைக் குறிப்பிடலாம்.

தம் முப்பத்து இரண்டாவது வயதில் ஷெய்க் அப்துல் வஹாப் மௌலானா (றலி) தரீக்கா கிலாபத் பொறுப்புக்களை ஏற்றுள்ளார்கள். அல்-குத்ப் அப்துஸ்ஸமத் மௌலானா (றலி) வபாத்தாவதற்கு சற்று முன்னர் இக்கிலாபத் பொறுப்புக்களை தம் மகனிடம் ஒப்படைத்துள்ளார்கள். இப்பெரியார் குடும்ப வழி காதிரிய்யி ஸில்ஸிலாவில் இருபத்து ஆறாவது ஷெய்க்காக இடம் வகிக்கின்றார்கள்.

இறைவனோடு மிக அன்னியொன்னியப்பட்ட ஷெய்க்கான அப்துல் வஹாப் மௌலானாவிற்கு ‘இன்ஸான் காமில்’ என்ற கௌரவத்தைச் சூட்டியுள்ளார்கள். இவர்கள் பல கறாமத்துக்களை வாழ் காலத்திலும், வபாத்திற்குப்பிற்பாடும் காண்பித்துள்ளார்கள். “றாதீப் மஜ்லிஸில் எண்ணெய் இன்றி விளக்கு அணைந்த போது தண்ணீரை ஊற்றி விளக்கு எரியச் செய்துள்ளார்கள். அவர்களின் மனைவி தென்னையில் தேங்காய் பறிக்க வேண்டுமென்றதற்கு தென்னையைப் பார்த்து தேங்காய் 10 போடு என்று கூறி இவர்கள் தேங்காய்கள் விழச்செய்துள்ளார்கள்”..

அருட்பேறுகளின் அரசனாக விளங்கிய இம்மகோன்னத மனிதர் தாம் மறைவிற்குப் பிற்பாடு பல கறாமத்துக்களை காட்டி நின்கின்றார்கள். இதற்கு காத்தான்குடியில் சில வருடங்களின் முன் நடைபெற்ற சம்பவத்தை மேற்கோளாக எடுக்கலாம். 2004 இலும் அதைத் தொடர்ந்தும் முஸ்லிம்களின் ஒரு சாரார் வரலாற்று பாரம்பரிய முக்கியத்துவமுடைய ஸியாரங்கள் மக்பராக்கள் அனைத்தையும் அழித்தொழித்தனர். அவ்வக்கிரம செயலிலிருந்து காப்பாற்றப்பட்ட ஒரேயொரு மக்பராவாக ஷெய்க் அப்துல் வஹாப் மௌலானாவின் மக்பரா இது நாள்வரை காணப்படுகின்றது.

உடல், உள, ஆன்ம சிகிச்சையாளராகவும், மருத்துவராகவும், ஹால் பைத், கஸீதா, முனாஜத், மௌலித்துகளை இனிமை ததும்பும் குரலோசையோடு பாடக்கூடியவராகவும், அதன் இராக தாளத்திற்கு ஏற்ப இசைக் கருவிகளை கையாளக்கூடிய ஒரு இசைஞானியாகவும் இஸ்லாமிய அறமுறையையும் அல்-குர்ஆன், அல்-ஹதீஸ், அத்-தஸவு ஞானங்களை மக்களுக்குப் போதிக்கும் போதகராகவும் பற்றுறை விற்பனராகவும் சமவேளையில் விளங்கியிருப்பது பெரியாரின் உன்னதத்திற்கு ஓர் எடுத்துக் காட்டாகும். றபான், ஆர்மோனிய கருவிகளை பயன்படுத்தியுள்ளார்கள். காத்தான்குடி தோனா கடற்கரையில் முரீத்தீன்களோடு பாடி ஆர்மோனியம் வாசித்திருப்பது இவர்களின் வழக்காகவிருந்துள்ளன. (126. தகவல்:  அல்-குத்ப் அப்துல் மஜீத் மக்கத்தார் (றலி), அக்கரைப்பற்று). இம்முறை ஜிஸ்திய்யி தரீக்குக்குரிய பண்பு வெளிப்பாட்டையே அடையாளஞ் செய்கின்றது.

வல்ல அல்லாஹுவில் அனுப்பிசகாமல் நித்தியமான வாழ்வில் சஞ்சாரித்த ஷெய்க் இஸ்மாயில் யமானி (றலி)ன் பேரர் ஷெய்க் அப்துல் வஹாப் மௌலானா (றலி) தம் தரீக்காக்களின் கலீபாவாக தம் மகன் அஷ்-ஷெய்க் அப்துல் வாஹித் மௌலானா (றலி)யை தெரிவு செய்திருந்தார்கள். தாம் நித்திய வாழ்வை தொடரப் போவதையறிந்து ஷெய்க் அப்துல் வாஹித் மௌலானா (றலி)க்கு கிலாபத் உத்தரவுகளை கி.பி. 1933ல் ஆண்டு கைமாற்றி சிலவாரங்களின் பிற்பாடு காத்தான்குடி, அமானுல்லாவீதியில் அமைந்திருக்கும் தம் மக்பராவில் நித்தியத்துவமடைகின்றார்கள்.

தந்தை ஷெய்க் அப்துல் வஹாப் மௌலானா (றலி) தம் வபாத்தைப்பற்றி தம்மிடம் ஏலவே சொல்லிவிருந்தாகவும் அதை தாம், பெரிதுபடுத்தாது வெளியூர் சென்றிருக்கும் வேளை செய்தியறிந்து காத்தான்குடிக்கு வருகை தந்து தந்தையின் அந்திமநிகழ்வில் 1933 மார்ச் 3ஆம் திகதியில் (ஹிஜ்ரி 1351 துல்கஃதா பிறை 06 வெள்ளிக்கிழமை) தாம் கலந்து கொண்டதாக ஷெய்க் அப்துல் வாஹித் மௌலானா (றலி) விபரித்துளார்கள். (127. தகவல்: எம்.சி. இப்றாலெப்பை, மனேஜர், சாய்ந்தமருது).

 Figure 33

சங்கைக்குரிய அல்-குத்ப் அப்துல் வஹாப் மௌலானா (றலி)ன் ஸியாரம், (கி.பி. 2008) Figure – 33

 ‘அல்-மதரஸத்துல் ஸமதிய்யா – வஹாப் மௌலானா மன்ஸில்’ என்ற பெயருடைய இப் பெரியாரின் மக்பராவில் குர்ஆன் மத்ரஸா நடைபெற்று வந்து கொண்டிருக்கின்றது. ஸவ்வால் பிறை 26ல் கந்தூரியும் நடைபெற்று வந்துள்ளது.

 

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *