Kuthubuna Kethal Bawa Valiyullaah- Nawala, Rajagiriya

முஹம்மது சீனி அப்துல் காதிர் ஆலிம் ஸாஹிப் ( கேத்தல் பாவா அஜ்மீர் வாலா) வலியுல்லாஹ் கதஸல்லாஹு ஸிர்ரஹுல் அஸீஸ்

( ஆக்கம் ஆசிரியர் எம்.ஏ.சீ.எம்.ஜுஹைஸ்)

மேதகு முஹம்மது சீனி அப்துல் காதிர் ஆலிம் ஸாஹிப் வலியுல்லாஹ் கதஸல்லாஹு ஸிர்ரஹுல் அஸீஸ் அவர்கள் இந்தியாவை ஆங்கிலேயர் ஆட்சி செய்த ஒரு காலப்பகுதியில் இந்தியா, தமிழ் நாட்டில் கிழக்கே அமைந்துள்ள இராமநாதபுரம் மாவட்ட த்தைச் சேர்ந்த புதுப்பட்டின கிராமத்தில் கி.பி. 1905 ஜூன் மாதம் முதலாம் திகதி ( ஹி 1323 றபியுல் அவ் 27) வியாழன் அன்று பிறந்துள்ளார்கள்.

தந்தை ஸெய்யத் முஹம்மத் ஆலிம் ஸாஹிப், காஞ்சிபுற மாவட்ட புதுப்பட்டினத்தைச் சேர்ந்தவர்கள். சன்மார்க்க அறிஞர் ‘குர்-ஆன் மத்ரஸா’ ஆலிமாகவும் கதீபாகவும் விளங்கியவர்கள். “ அஹ்லுஸ் ஸுன்னா அகீதா’ உடைய இவர்கள் ஷாஃபி மத்ஹபைப் பின்பற்றியவர்கள். தரீக்கா வழிமுறையில் வளர்ந்தவர்கள். இவர்களின் மனைவியின் பெயர் முஹம்மது ஸுலைஹா உம்மா.  இவர் இந்தியா இராமநாதபுற மாவட்ட வேதாளை எனும் கிராமத்தில் பிறந்தவர்கள். இவ்விரு தம்பதிகளின் மகனே, முஹம்மது சீனி அப்துல் காதிர் ஆலிம் ஸாஹிப்.

இவர்களின் தாயும் தந்தையும் மிக எளிமையாக வாழ்க்கை நடாத்தியவர்கள். இறைப் பொறுத்தத்தை நாடி நின்றவர்கள். ஸூஃபித்துவ வாழ்வோடு ஒட்டிக் கலந்தவர்கள். “அஹ்லுல் வல் ஜமா” கொள்கைகையில் கூடி மகிழ்ந்தவர்கள். இவையெல்லாம் அவர்களின் வீட்டையும் வாழ்வையும் அலங்கரித்தன. நாளும் தரீக்கா மணங்கமலும் இல்லமாக ஜொலித்தது. இவ்வாறான தரீக்கா சூழலில் ஜனனமான கேத்தல் பாவா அஜ்மீர் வாலா வலியுல்லாஹ் நாயகத்தில் குழந்தைப் பருவத்திலிருந்து உள்ளச்சம், இறைபக்தி கொண்டவர்களாக விளங்கியுள்ளார்கள்.

Kethal Bawa Raliyallahu Anhuஷெய்க் முஹம்மது சீனி அப்துல் காதிர் ஸாஹிப்( வலி) ஆரம்ப மார்க்கக் கல்வியை தந்தையின்  மூலம் கற்றுள்ளார்கள். ‘அல் குர்-ஆனை’ தந்தை ஓதிக் கொடுத்துள்ளார்கள். இளம் பராயத்தில் இவர்கள் சன்மார்க்கக் கல்வியை திண்டுக்கல், பேகம்பூர் அறபு மதரஸாவில் கற்றுத்தேர்ந்தார்கள். ஆலிம் பேகம்பூரி என்ற பட்டத்தைப் பெற்றுக் கொண்டார்கள். ‘ தஸவ்வுபு ’ ஞான அறிவில் மேலோங்கி நின்றுள்ளார்கள்.

அல்குத்ப் சதகத்துல்லா அப்பா (வலி), குத்பு ஸமான் அல்லாமா மாப்பிள்ளை ஆலிம்(வலி), ஆரிபுபில்லா கல்வத் நாயகம்(வலி), ஜல்வத் நாயகம்(வலி) போன்ற மகான்களின் பொற்பாதம் பதிந்த புனித மண்ணில் பிறந்து வளர்ந்து அவர்களின் வழியிலே தம்மைப் புடம் போட்டுக் கொண்டார்கள் சங்கைக்குரிய கேத்தல் பாவா அஜ்மீர் வாலா (வலி) அவர்கள்.

இம்மகான் ஆரம்பம் தொட்டு இஸ்லாமிய ஏவல், விலக்கல்களை பேணி; இஸ்லாமிய கடமைகளை கரிசனையோடு மேற்கொண்டவர்கள். மௌலித்து, பாதிஹா ஓதல், தௌபா, ஸலவாத்து, ஸியாரம் செய்தல், திக்ர் பிக்ர்களில் அதிகம் ஈடுபட்டு வந்துள்ளார்கள். ஐங்காலத்தொழுகையை உரிய நேரத்தில் நிறைவேற்றுகின்ற ஒருவராக விளங்கியுள்ளார்கள். ‘வுளூச்’ செய்வதற்கு கேத்தலைப் பயன்படுத்தியதால் “கேத்தல் பாவா” என்று மக்கள் அழைத்து வந்தனர். இவர்களை அழைப்பதற்கும் அடையாளப்படுத்துவத்ற்கும் அவர்கள் இப்பெயரையே கையாளுகின்றனர்.

இம்மகான் அறபு மதரஸா வாழ்வில் தம்மோடு மார்க்கக் கல்வி கற்றுக்கொண்டிருந்த சக மாணவர்களுக்கும், கீழ் வகுப்பு மாணவர்களுக்கும் சேவகம் புரிந்துள்ளார்கள். அவர்களின் ஆடைகளைச் சலவை செய்து கொடுத்தல், கடைக்குச் சென்று தேவையான பொருட்களை வாங்கிக் கொடுத்தல், காலை, மதிய, இரவு உணவுகளை எடுத்துக் கொடுத்தல் போன்ற அறவாழ்வுத்தொண்டுகளை செய்துள்ளார்கள்.

இப்பெரியார் சிறுவயதில் பாட்டாளியாக வாழ்ந்த ஒருவர். தாம் உழைப்பால் தாம் வாழவேண்டும் என்ற கொள்கைப்பிடிப்புள்ளவர்களாக இருந்துள்ளார்கள். ஆடுகளை மேய்த்தும், கூலிக்கு சுமைகளைச் சுமந்தும் மரக்கறிகளை வாங்கி விற்றும் வாழ்ந்துள்ளார்கள். உடலோடு சேருகின்ற எல்லாம் ‘ஹலாலா’க சம்பாதிக்கிறவையாக இருக்க வேண்டும் என்ற பரிசுத்த எண்ணத்தை இவர்களில் அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது.

சன்மார்க்க அறிஞராக கேத்தல் பாவா (வலி) அறபு மத்ரஸாவில் “பேகம்பூரி’ பட்ட்த்தைப் பெற்றுக் கொண்டதன் பிற்பாடு சிறு பிள்ளைக்குக்கு குர் ஆன் ஓதிக்கொடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்கள். இந்தியாவில் பல பாகங்களிலும் இப்பணியைச் செய்துள்ளார்கள். புது மடம், தங்கச்சிமடம், திருப்பாலைக்குடி போன்ற ஊர்களிலும் இலங்கையிலும் சிறுவர்களுக்கு ‘குர் ஆன்’ ஓதிக் கொடுத்துள்ளார்கள்.

“பின்னர் தம் தந்தையைப் போன்று இவர்கள் திருப்பலைக் குடியில் பத்து ஆண்டுகளும் தங்கச்சி மடத்திலும் புதுமடத்திலும்  சில ஆண்டுகளும் சிறுவர், சிறுமியருக்கு “குர் ஆன்” ஓதிக் கொடுத்துள்ளார்கள். இரண்டாம் உலகப் போருக்கு முன் இலங்கை சென்ற இவர்கள் அங்கும் ஓதிக் கொடுத்துள்ளார்கள்”  இ.க.க. பக்கம் 281

ஸூஃபிஸ வாழ்வியலோடு…………….

உலகில் மகோன்னத மனிதர்களை உருவாக்கி தெய்வீகத்தில் முக்குளிக்கச் செய்து வல்ல றஹ்மானின் மேன்மக்களாக சமுதாயத்திற்குத் திருப்பி மனிதகுல வாழ்வை சீர் செய்து கொண்டிருக்கின்றது “ஸூஃபிஸம்”; உயிர்களின் ஜீவியத்திற்கு காற்று எவ்வளவு எவ்வளவு அவசியமாகுமோ? அதைவிடப் பன்மடங்கு இன்றியமையாதது  “ஸூஃபிஸம்”. காற்றின் அசைவு, ஒடுங்கல், விரிதல், நிரம்பல், எழல் என்பவைகளை சூரியனி செயற்பாடு நிர்ணயம் செய்கின்றது. இப்பிரபஞ்ச இயக்கத்திற்கு சூரியன் அடிப்படையாக விளங்குகின்றது. இவை எல்லாவற்றினோடும் ஒன்றி கலந்து அவைகளுக்குரிய இயக்க சக்தியை ‘ ஸூஃபிஸம்’ வழனிக் கொண்டிருக்கின்றது. அஸ்மா ஸிபாத்துக்கள் எனும் பேரியக்க சக்தியை ‘ ஸுஃபிஸம்’ தாங்கி நிற்கின்றது. இச்சக்தியை நிலைப்படுத்தல், வெளிப்படுத்தல், புதுப்பித்தல் ஆகிய மேன்மையான புனித பணியை செய்து கொண்டிருப்பவர்கள் ‘வலியுல்லாஹ்’கள் என்று அழைக்கப்பட்டுவரும் உயர்குல மாந்தர்களான காலத்திற்குக் காலம் தோன்றும்  ‘குத்பு’க்கள் செய்து கொண்டிருக்கின்றனர். சங்கைக்குரிய முஹம்மது சீனி அப்துல் காதிர் ஆலிம் ஸாஹிப்  (வலி)ம் இப்பணியில் இணைந்து கொண்ட மகானாவார்கள்.

 அதிஉத்தம சீலர் கேத்தல் பாவா அஜ்மீர் வாலா (வலி) மழலைப் பருவத்திலிருந்து தெய்வீகக் காதலில் பேரவா கொண்டவர்களாக விளங்கியுள்ளார்கள். முஹம்மத் றஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களில் அளவிறந்த அன்பு உள்ளவர்களாக இருந்து வந்துள்ளார்கள்.  அவர்களின் ‘ஸலவாத்துக்களை’ இரந்து வருபவராகவும் அல்லாஹ்வின் நினைவில் இதயத்தை உருட்டி வருபவராகவும் அவன் தியானத்தில் திளைப்பவர்களாகவும் இருந்து வந்துள்ளார்கள்.

 வலிமார்களின் ஒருசாரார் பிறப்பிலிருந்து இந்த மாண்புயர் வாழ்வை தொடர்ந்தவர்கள். இமாமுனா ஜஃஃபர் ஸாதிக் (றலி), இமாமுனா குத்ப் முஹ்யத்தீன் அப்துல் காதிர் ஜீலானி (றலி) இமாமுனா ஸெய்யத் அஹ்மத் கபீர் றிபாஇ (றலி), குத்புல் ஹிந்த காஜா முஈனுத்தீன் ஜிஷ்தி (றலி) போன்ற எண்ணற்றோர் இந்த சாராராகும். இன்னுமொரு சாரார் வாழ்வின் இடையில் ஆத்மீகத்தைத் தொடர்ந்தவர்கள்.  இமாமுனா ஜுனைதுல் பக்தாதி (றலி), இமாமுனா இப்றாஹீம் இப்னு அத்ஹம் (றலி), இமாமுனா மாலிகிப்னு தீனார் (றலி) போன்றோரை இதில் குறிப்பிடலாம்.

 ஓர் அரசானாக இருந்தவர்கள் இப்றாஹீமிப்னு அத்ஹம் (றலி) ஆவார்கள். ஒரு நாள் அரண்மனை மஞ்சயத்திற்குச் சென்றார்கள். தாம் உறங்கும் பஞ்சனையில் சேவகம் செய்யும் அடிமைப்பெண் உறங்கிக் கொண்டிருப்பதைக்கண்டு; ஆத்திரமுற்று தாம் சாட்டையால் நிலைதடுமாறி அப்பெண்மணியை தாக்குகிறார்கள். இவற்றை அசிரத்தையாக எடுத்து அப்பெண்மணி முகமலர்ச்சியுடன் வாய்விட்டு சிரிக்கின்றார். பேரதிர்ச்சியுடன் அரசர்; “ ஏய் பெண்ணே! நீ கதறி அழாமல் ஏன் சிரித்துக் கொண்டிருக்கின்றாய்? என இமைகளை உயர்த்தி வியப்போடு விளக்கம் கோரினார்கள். அதற்கு அப்பெண்மணி, சில வினாடிகள் உறங்கிய எனக்கு இத்தனை இத்தனை தண்டனைகள்  என்றால், வாழ்க்கை பூராக இதில் உறங்கிய உங்களுக்கு அல்லாஹு எத்தகைய தண்டனையை நிர்ணயித்துள்ளான்! என்று சிந்தித்தே சிரித்தேன்” என விளக்கினார்.

 இதைக் கேட்ட இப்றாஹீமிப்னு அத்ஹம் (றலி) அரச வாழ்வைத் துறந்து ஸூஃபியாகியுள்ளதை அவர்களின் வாழ்வியல் தூசுதட்டுகிறது. நுண்சாதாரண சம்பவம் பேரதிர்ச்சிக்குள் தள்ளி, பன்னூறு மனிதர்களை ஸூஃபிகளாக வடிவமைத்துள்ளன. பெருமகன் கேத்தல் பாவா நாயகம் இவ்வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் அன்று. பிறப்பிலே ஸூஃபியாகப் பிறந்தவர்கள். முன்னுள்ள சாராரிலுள்ளவர்கள்.

இவர்கள் பசித்திருத்தல், தனித்திருத்தல், விழித்திருத்தல் போன்ற ஸூஃபிஸ உயர் வரம்புகளை கடைபிடித்து ஒழுகியுள்ளவர்கள். றமழான் காலத்தில் இறுதிப் பத்து நாட்களில் ‘இஃதிகாப்’ இருந்து வரும் வழக்கமுடையவர்களாகக் காணப்பட்டுள்ளார்கள். மௌனத்தையே கடைபிடிப்பார்கள். பேசுவதற்கு தேவை ஏற்படின் எழுதிக் காட்டித் தேவைகளை நிறைவு செய்துள்ளார்கள்.

இறையருள் ஞானி………

சங்கைக்குரிய கேத்தல் பாவா அஜ்மீர் வாலா (வலி) அவர்கள் இளமையிலே இறை நெருக்கத்தை உடைமையாக்கிக் கொண்டவர்களாக இருந்துள்ளார்கள். “விலாயத்” மேலாம்பர அந்தஸ்த்தைப் பெற்றுள்ளார்கள். ‘வஹ்பியான இல்ஹாம், கராமத்து’ முதலான மஹாவ்ஷேட ஆற்றலுள்ளவர்களாக பிரகாசித்திருக்கின்றார்கள். மனித நோய்கள், மனிதன் எதிர்நோக்கும் பிரச்சினைகள், ‘அலாய் பலாய் முஸீபத்துக்களை நீக்கியுள்ளார்கள். வறட்சி மிகுந்த காலத்தில் மழைபொழியச் செய்துள்ளார்கள். இவைகளுக்கு மேல் மக்களுக்கு ஆத்மீக வழிகாட்டியாக இருந்து சேவை புரிந்துள்ளார்கள்.

“இவர்களுக்கு இளமையிலே இறைவனின் அருள் அருளப்பட்டிருந்தது. திண்டுக்கல் ‘டவுன் மஸ்ஜிதில்’ அறபு மதரஸாவில் மார்க்கக் கல்வி பயிலும் காலத்தில் நேபாளிகள் பலர் நோய் நிவாரணம் பெற வருவார்கள். பாவா அவர்கள் ஓதிப் பார்க்க இறைவன் அருளால் நோய் குணமாகிவிடும்.

இந்தியாவிலும் இலங்கையிலும் மாறிமாறி வாழ்நாளைக் கழித்து ஆத்மீக பணிசெய்த இவர்கள் இந்தியா, திருப்பாலை மக்கள் 1970களில் அம்மை, கொலறா நோய்கள் பீடித்து துயருற்றனர். அப்போது கேத்தல் பாவா நாயகமவர்கள் அவ்வூர் மக்களனைவரையும் ஓரிடத்தில் ஒன்று கூட்டி அவர்களுக்காக மனம் கசிந்து துஆச் செய்தார்கள். இறையருளால் நோய்கள் விலகி, சுகம் கண்டுள்ளனர். மீண்டும் இந்நோய் அவ்வூராரைப் பீடிக்காமலிருக்க வருடம் தோறும் “பத்ர் ஸஹாபாக்கள் ”பெயரில் மௌலிது ஓதி கந்தூரி கொடுத்துவருமாறு பணித்தார்கள்.

திருப்பாலையில் ஏற்பட்ட பெருவரட்சி காரணமாக கிணறுகளிலும் குளங்களிலும் நீரற்று மக்கள் அல்லோல கல்லோலப்பட்டபோது, சங்கைக்குரிய கேத்தல் பாவா அஜ்மீர் வாலா (வலி) ஊரார்களை அழைத்து ; வீதி, வீதியாக ‘அதான்’ அழைப்பு விடுத்து பொதுமைதானத்தில் கூடி ‘துஆ’ இரந்து மழைபொழியச் செய்து பஞ்சம் போக்கியுள்ளார்கள்.

மக்கள் தங்கள், தங்கள் தேவைகள் நிறைவேறி வாழ்வு புதுப்பொழிவு பெறவேண்டும் என்ற நோக்கோடு இம்மஹானின் சந்நிதானத்திற்கு வந்து நிற்கும்போதே அவர்களது வேண்டுதலை கூறுவதற்கு முன்னே “தேவை நிறைவேறிவிடும் செல்லுங்கள்!” சில பொழுது “ தேவை நிறைவேறாது செல்லுங்கள்!” என்று கூறியுள்ளார்கள். அவ்வாறே தேவைகள் நிறைவேறியுள்ளன.

“கேத்தல் பாவா நாயகம் வாழும் காலத்தில் ‘காமில் வலியுல்லாஹ்வாக விளங்கி; கராமத்துக்கள் பலதை வெளிப்படுத்திய ஓர் உள்ளமையான மஹானாக இருந்துள்ளார்கள்” என குத்புனா, அஷ்ஷெய்க் அப்துல் மஜீத் மக்கத்தார் (றலி) அவர்கள் கூறிவருவது இவர்களின் வாழ்வியல் நிகழ்வுகள் அனைத்தும் வெளிப்படையான உண்மை என்பதை சுட்டி நிற்கின்றது.

1960தில் செல்வந்தர் ஒருவர் இவர்களை அனுகி; தம் பெண்பிள்ளைகளுக்கு விரைவில் திருமணம் நிகழவேண்டும் என்று கூறி ‘துஆ’ச் செய்யுமாறு வேண்டி நின்றார்கள். அதற்கு இவர்கள் “இன்னும் ஆறு ஆண்டுகள் கழித்துத்தான் உங்கள் பெண்மக்களுக்கு திருமணம் நிகழும். அதன் பின் தான் தாங்கள் ‘ஹஜ்ஜுக்கு’ச் செல்வீர்கள்” என்றனர். அதைக் கேட்ட செல்வந்தர் பாவனையாக பாவா! மிகவும் தாமதமாக கூறுகிறீர்களே! விரைவில் நிகழக்கூறுங்கள்! என்று வேண்ட “ அப்படியா! 1961ல் தங்களின் இரண்டு பெண்பிள்ளைகளுக்கும் திருமணம் நிகழ்விறும். அதற்கு அடுத்த வருடம் தங்களின் உறவினர் ஹஜ்ஜுக்குச் செல்வார். அதற்கு அடுத்த ஆண்டு தங்கள் ஹஜ்ஜுக்குச் செல்வீர்கள்” என்றனர். உண்மையில் அவ்வாறே நிகழ்ந்துள்ளது.

இம்மஹான் வாழும் போதே அப்தால்களில் ஒருவராக நிகழ்ந்துள்ளார்கள். கால நேர, தூர வேறுபாடுகளைக் கடந்து நிற்பவர்கள் “அப்தால்” எனும் பரமாத்ம நிலையில் உள்ளவர்கள். இவர்கள் சம நேரத்தில் பலவிடயங்களில் சஞ்சரிக்கக்கூடிய வலுவுடையவர்கள். கி.பி. 1974 டிசம்பரில் கேத்தல் பாவா அஜ்மீர் வாலா (வலி) வாழ்வியல் காலத்தில் நோயுற்றிருந்த போது நடைபெற்ற ஒருசம்பவம் இதற்கு ஆதாரமாக விளங்குகின்றது.

இவ்வாண்டு சுஹைப் ஆலிம், அப்துல் காதிர் ஆலிம் ஆகிய இருவரும் மக்கா சென்று ஹஜ் செய்து கொண்டிருக்கும் போது மக்கா, மினா, அரபாவில் கேத்தல் பாவா (வலி)யைக் கண்டுள்ளார்கள். பின் அவர்கள் இவர்களைப் பற்றி விசாரித்தபோது நோயுற்று இந்தியா, சென்னை மருத்துவமனையில் இருந்ததாக கேள்வியுற்று ஆச்சரியப்பட்டுள்ளார்கள்.

உத்தம உயர் குல மாண்புத்துவம்

இவர்கள் மகோன்னத மஹான்கள் வழ்ந்த ஒரு காலப்பகுதியில் வாழ்ந்திருப்பது வெகு சிறப்புக்குரிய விடயமாகும். இந்தியா, இலங்கையைச் சேர்ந்த பல ‘குத்பு’கள் வாழ்ந்த பகுதியோடு இவர்களின் வாழ்வு பிணைந்து வந்திருக்கின்றது. இம்மனித மகத்துவர்களின் அருட்பார்வை அகங்குளிக்கச் செய்திருக்கும். அவர்களின் சகவாசம் பரிசுத்த தீயை மூட்டி இறைகாதலை கொழுந்துவிட்டெரியச் செய்திருக்கும். உலகப் பெருஞ்சோதிகளாக ஒளிசிந்திய அம்மஹான்களின் நிழல் சங்கைக்குரிய கேத்தல் பாவா அஜ்மீர் வாலா (வலி) யை தொடர்ந்திருக்கும். இந்தியாவைச் சேர்ந்த குத்புல் அக்தாப் ஷெய்க் ஷாஹ் அப்துல் காதிர் மஜ்தூபி ஹைதராபாத்தி ஸூஃபி(றலி), அல்குத்ப் பக்ருத்தீன் படேஷா மாஞ்சேரி ஜிஷ்தி(றலி), இன்ஷானுல் காமில் அப்துல் கரீம் ஜீலி(றலி), குத்புல் அக்தாப் ஷெய்க் ஷாஹ் முஹம்மத் ஜான் கூத்தாரி (றலி), குத்புல் அக்தாப் முஹம்மது ஜலாலுத்தீன் (றலி), குத்புல் அக்தாப் அப்துல் வாஹித் யெமானி அஸ்ஸெய்லானி(றலி போன்ற இலட்சனை பதிக்கப்பட்ட குத்புகள் வாழ்ந்த ஒரு பசுமையான காலப்பகுதியில் இவர்களின் வாழ்வு அமையப்பெற்றுள்ளது.

பாவா (தந்தை) என சங்கையாக உரிமையோடு அழைக்கும் பெயரால் பியபல்யம் பெற்ற இப்பெரியார்; எப்பொழுதும் தூய வெண்ணிறத் தலைப்பாகை(18’ நீளம்)யையும் அணியும் நடைமுறையுடையவர்களாக காட்சியளித்துள்ளார்கள். சதா ‘மௌத்தை’ எதிர்பார்த்த வன்னம் அதற்கான தயார் நிலையிலிருந்து வந்துள்ளார்கள்.

சிறு பராயமுதல் அவ்லியாக்கள் மீது பற்றும் நேசமும் கொண்டவர்களாக விளங்கியுள்ளார்கள். வலிமார்களின் ஸியாரங்கள், மக்பராக்களுக்கு நாளாந்தம் தாம் சென்று அங்கு ஓதி ‘துஆ’ச்செய்யும் பழக்கமுடையவர்களாக இருந்து வந்துள்ளார்கள். இந்தியா, ஏர்வாடி இப்றஹீம் பாதுஷா(றலி) நாகூர் குத்புல் மஜீத் மீரான் ஸாஹிப்(றலி), அஜ்மீர் குவாஜா முஈனுத்தீன் ஜிஷ்தி(றலி), இலங்கையில் ஷெய்க் உஸ்மான் (வலி), மீரா மகாம் (வலி), அஷ்ரப் (வலி) போன்ற வலிமார்களின் ஸியார்ங்களுக்கு தொடராக்க் சென்று வந்துள்ளார்கள். அஜ்மீர் குவாஜா முஈனுத்தீன் ஜிஷ்தி(றலி)யில் அதிகம் அன்பு செலுத்தியுள்ளார்கள். இவர்களின் பின் அந்திம காலத்தில் ஐம்பது தடவைகளுக்கு மேல் அஜ்மீர் ஷரீஃப் சென்றுள்ளார்கள்.

“வலிமார்களை நேரடியாகத் தரிசிப்பவர்களாகவும் அவர்களோடு அலவலாவக் கூடியவர்களாகவும் கேத்தல் பாவா அஜ்மீர் வாலா(றலி) அவர்கள் இருந்துள்ளார்கள். இவர்கள் இந்தியா, அஜ்மீர் தர்கா கொடியேற்றத்திற்கு வருடா வருடம் செல்பவர்கள். குவாஜா முஈனுத்தீன் ஜிஷ்தி(றலி) அவர்களின் அழைப்பை ஏற்றே அங்கு செல்பவர்களாக இருந்துள்ளார்கள்”.

இப்புனிதர் இலங்கையில் பாவா ஆதம் மலை, தப்தர் ஜீலானி, கதிர்காமம்  ஆகிய தளங்களுக்கும் சென்றுள்ளார்கள். தப்தர் ஜீலானியில் இறை தியானத்தில் சிலகாலங்களைக் கழித்துள்ளார்கள். “கொழும்பிலிருந்து இரத்தினபுரிக்குச் சென்று சுல்தான்பாவா (காட்டு பாவா) வீட்டில் தங்கி; பின் சுல்தான் பாவாவின் காரில் கேத்தல் பாவா நாயகம் தப்தர் ஜீலானி சென்று தியானத்தில் ஈடுபட்டு மீண்டும் தலைநகர் திரும்புவார்கள்.”

சுல்தான் பாவா இந்தியா, திருபாலைக்குடியைச் சேர்ந்தவர். இவர்களின் நெருங்கிய முரீத் ஆவார்கள். இலங்கையில் இரத்தினபுரியில் வசித்தவர். ஆட்டு, மாட்டு இறைச்சி விற்பனையில் ஈடுபட்டவர். பல இறைச்சிக் கடைகளின் சொந்தக்காரராக விளங்கியவர். வாகங்களும் இவர்களிடம் காணப்பட்டன. கேத்தல் பாவா அஜ்மீர் வாலா(வலி)ல் நேசம் வைத்த ஒருவர். காட்டு பாவா என்றும் காட்டு சுல்தான் என்றும் அழைக்கப்பட்டவர்.

இம்மாமேதை தப்தர் ஜீலானியில் பகீர் மகாமுக்கு அடிக்கல் நாட்டியுள்ளார்கள். இவ்வடிக்கல் நாட்டும் வைபவத்தில் அக்கரைப்பற்று காதர் முஹையத்தீன் பாவா, இரத்தினபுரி சுல்தான் பாவா, கொழும்பு பிலால், காஜா, முதலானோர்கள் பங்குபற்றியுள்ளார்கள்.

சங்கைமிகு “அஹ்லுல் பைத்துக்களை” தம் உயிரிலும் மேலாகப் போற்றி தம் வாழ்வை அமைத்துக் கொண்டார்கள். எக்காரியங்களிலும் அந்த உத்தமர்களுக்கு முதன்மையான முன்னுரிமை வழங்கி வந்துள்ளார்கள். அவர்களின் நேசத்தை பெறுவதைப் பிரதானப்படுத்தி இவர்கள் செயல்பட்டார்கள். அப்புண்ணியாத்மாக்களை நேசிப்பதை முக்கிய கடனாக…………..அவர்களின் நேசம் தெய்வீகப் பொருத்தத்தில் சேர்த்துவைக்கும் என்பதில் ஐயமற செயற்பட்டுள்ளார்கள். அவர்களின் தரிசனத்தில் தினம் சஞ்சரித்துள்ளார்கள். “ஸாதாத்”மார்களுக்காக மாதாந்தம் ஒரு தொகைப்பணத்தைக் காணிக்கையாக வழங்கி வந்துள்ளார்கள்.

“இவர்களுக்கு ஆண்டொன்றிற்கு ஏறத்தாள ஐம்பதாயிரம் வரை வந்துகொண்டிருந்தது. அவற்றையெல்லாம் இவர்கள் ஸாதாத்துக்கள், உலமாக்கள், மார்க்கக் கல்வி பயிலும் மாணவர்கள் ஆகியோருக்கு மாதந்தோரும் இவ்வளவு என்று கணக்கிட்டு கொடுத்து வந்தனர். சின்ன சிறு ஊர்களுக்குச் சென்று அங்கு சில நாட்கள் தங்கி பள்ளிவாயல்களையும் குர் ஆன் ஓதிக்கொடுக்கும் பள்ளிகளையும் ஏற்படுத்தி வந்தனர்”

தமது வாழ்க்கைக்குத் தேவையான எதையும் சேர்த்து வையாது உயர் பற்றற்ற வாழ்வில் ஆனந்திப்பவர்களாக என்றும் மிளிர்ந்துள்ளார்கள். இவர்களுக்கு காணிக்கையாக பொருட்கள், ஆடைவகைகள், பணம் போன்றவை கிடைத்துள்ளன. அவைகளை உடனுக்குடன் பகிர்ந்தளித்துள்ளார்கள். வறியவர்களின் மனம் நெகிழ்ச்சியடையும்வகையில் தானதர்மங்களைச் செய்துள்ளார்கள்.

ஏழ்மைத்துவ வாழ்வில் இன்பம் கண்டுள்ளார்கள். ஏழைகளின் மீது அன்பு செலுத்தினார்கள். ஏழைகளுக்கு தினமும் உதவிபுரிந்துள்ளார்கள். ஏழையோடு ஏழையாக வாழ்ந்தார்கள். ஊரங்குவதற்குக் கூட தலையணையோ, விரிப்போ அவர்கள் வைத்திருக்கவில்லை. மாற்றி அணியும் தலைப்பாகையை தலையணையாகவும் விரிப்பாகவும் பயன்படுத்தியுள்ளார்கள்.

முஹம்மது சீனி அப்துல் காதிர் ஆலிம் ஸாஹிப்(வலி) ஷரியத்துடைய வக்புரில் நிலைபெற்ற ஒருவராவார்கள். தொழுகை, ஸகாத், நோன்பு, ஹஜ் இஸ்லாமிய கடமைகளை பரிபூரணமாக நிறைவேற்றியவராக விளங்கியுள்ளார்கள். பர்ளான தொழுகையின் நேரம் தவறாது தொழுது வந்துள்ளதோடு முன் பின் ஸுன்னத்துக்களையும் நிறைவேற்றியுள்ளார்கள்.

கொழும்பு, சம்மாங்கோட்டுப் பள்ளிவாசலில் தஹஜ்ஜத் ஸுஃப்ஹ் தொழுகைளை நிறைவேற்றி காலையில் கொள்ளுப்பிட்டி மஸ்ஜிதிற்குச் சென்று ளுஹா, ளுஹர் தொழுகைகளை தொழுதுவிட்டு அஸர் தொழுவதற்காக சம்மாங்கோட்டுப்பள்ளிக்கு வந்து அஸர், மஃரிப், இஷா ஆகிய தொழுகைகளை இம்மஸ்ஜிதில் நிறைவேற்றியுள்ளார்கள். நபிலான வணக்கங்களிலும் ஸுன்னத்தான அமல்களிலும் ஈடுபாடுடைய ஒருவராக இருந்து வந்துள்ளார்கள்.இரவு நேரங்களில் வீதிவழியே நடப்பார்கள். தொடர்ச்சியாக அவர்களின் இடக்கையில் ‘வுளூ’ செய்யும் கேத்தல் காணப்படும். இவ்வாறு அவர்களின் வாழ்வு கழிந்தது.

“ஷாஃபிஈ மத்ஹப்பை பின்பற்றி வாழ்ந்த இம்மஹான் ஸுப்ஹான, முஹைதீன், மீரா, பத்ர் போன்ற மாண்புயர் விழுமிய பொக்கிச மௌலித்களை உரிய, உரிய காலங்களில் ஓதி “தமாம்” செய்து கந்தூரி வழங்கி கௌரவப்படுத்தியுள்ளார்கள்.

“இவர்கள் ஒவ்வொரு ஆண்டிலும் பல நபிமார்கள், குத்ப்மார்கள், வலிமார்கள் பெயரால் மௌலித்துகள் ஓதி ஆயிரக்கணக்கான மக்களுக்கு உணவளிப்பார்கள். அதனால் இஸ்லாமிய சமுதாயத்துடன் எவ்வித தொடர்பும் இல்லாமல் தொழுகை, நோன்பு என்ற நாட்டமில்லாமல் இருந்துவந்த முஸ்லிம்கள் பலர் பாவா சொல்லுக்காக கந்தூரிகளில் கலந்து, திக்ருகளில் ஈடுபட்டு சன்மார்க்க நல்லுபதேசங்களைக் கேட்டு தொழுகையாளிகளாகவும் மார்க்கக் கடமைகளை நிறைவேற்றுகின்ற முஸ்லிம்களாக மாறியுள்ளார்கள்”.

“கொழும்பு கொள்ளுப்பிட்டி ‘ஜும்ஆ மஸ்ஜி’தில் ஸியாரங்கொண்டிருக்கும் இரு வலிமார்களுக்கும் வருடா வருடம் சங்கைக்குரிய கேத்தல் பாவா நாயகம் கந்தூரி கொடுத்து வருவார்கள். அக்கந்தூரிக்காக ஆடுகளை இவர்கள் தக்பீர் செய்வார்கள். அங்கு ஆடுகள் ஆடுகள் தக்பீர் செய்யும் பணியில் நானும் அவர்களோடு ஈடுபட்டு வந்துள்ளேன்” என அன்ஸார் தெரிவித்தார்.

இவர்கள் தொடராக பொறுமை காத்து வந்துள்ளார்கள். சகலரோடும் பொறுமையாக நடந்து கொள்பவராக இருந்துள்ளார்கள். ஒரு போதும் கோபம் கொள்வதில்லை. கோபப்படும் விதமாக யாரும் நடந்தால் சில வேளை அமைதியாக “ கூழைக் காய்ச்சி உன் வாயில் ஊற்ற வேண்டும், போ” என்று மட்டும் கூறியுள்ளார்கள்.

சங்கைக்குரிய கேத்தல் பாவா (வலி)யை எழுதிக் கொண்டிருக்கும் போது நண்பர் ஒருவர் இவர்களைக் கனவில் கண்டதாக 2013.07.02 ஆம் திகதி காலை 10:00 மணியளவில் கீழ்வருமாறு கூறினார்கள்.

“2013 ஜூலை 01 செவ்வாய் இரவு அதிகாலை 03.00 மணியளவில் சந்திர வெளிச்சத்தில் வெண்ணிற ஜுப்பாவும் தலையில் தொப்பியும் அணிந்து அந்தரத்தில் சம்மானமிட்டு ஒருவர் வந்து “ நான் கேத்தல் பாவா” என்று தன்னுடைய பெயரைக் கூறி மறைந்தார். பின் இனிய குரலில் ஒரு தமிழ் கவிதையைப் பாடினார்”. என கண்டதாக கூறி, ‘அக்கவிதை மனைவி, மக்கள், பிள்ளை, வீடு, பொருட்கள், செல்வம் எல்லாம் தேவையற்றது. அல்லாஹ் அளவில் மாத்திரமே எம் தியானம் போய்க்கொண்டிருக்க வேண்டும்” என்ற கருத்துக்களைத் தாங்கிய கவிதையாக அது இருந்தது. அவர்கள் பாடிய அக்கவிதையை ஞாபகப்படுத்த முடியாதுள்ளது எனக் விளக்கினார்.

“பிரகாச முகம், நீண்ட முகமும், மூக்கும் மெலிந்த தோற்றமும், நடுத்தர உயரம், பொது நிறம்” கனவில் கண்ட கேத்தல் பாவா நாயகத்தின் பொலிவைக் குறிப்பிட்டார்.

இக்கனவு கண்ட நண்பர் அக்கரைப்பற்றைச் சேர்ந்தவர். கேத்தல் பாவா (வலி)பற்றி முன் எதுவும் அறியாதவர். இருந்தும் தரீக்காவை பின்பற்றுகின்ற ஒருவர்.

இவர்களிடம் மனிதர்களின் உள்ளத்தை அறியும் ஆற்றல் இருந்துள்ளது. இதை உறுதிப்படுத்துவதற்காக பின்வரும் நிகழ்வு அமைந்துள்ளது.

“எவ்வித மார்க்கக் கல்வியுமில்லாத ஒருவர் ஜுப்பாவும், தலைப்பாகையும் அணிந்து கொண்டு மக்களை ஏமாற்றுகிறார் என்று தரக்குறைவாக ஏண்ணீயவரை அழைத்து இவர்கள் ‘நான் மார்க்கக் கல்வியில்லாதவன்தான், ஜுப்பாவும் தலைப்பாகையும் அணிந்து மக்களை ஏமாற்றுகிறவன்தான்’ என்று கூறி அரபியில் உள்ள ஞானப்பாடல்களைப் பாடி அவற்றிற்கு மார்க்க விற்பன்னர்களைவிட மேலான முறையில் விளக்கம் பகர்ந்தனர்.

“இஸ்லாத்தைக் கற்றுத்தேர்ந்த அறிஞராக கேத்தல் பாவா அஜ்மீர் வாலா (வலி) விளங்கினார். அல்குர்ஆன், அல்ஹதீஸ், இஜ்மா. கியாஸ், பிக்ஹ், தஸவ்வுஃப் ஞானங்களில்  நிறைவுடையவராகக் காணப்பட்டனர். அரபு, தமிழ் மொழி ஞான இலக்கியங்களில் கைதேர்ந்தவர். பஹா ஆலிம்”

இவர்கள் இறுதிவரை திருமண பந்தத்தில் இணைந்து கொள்ளவில்லை. கஞ்ஞஸவாஹி, குத்புல் மஜீத் ஷாஹுல் ஹமீத் மாணிக்கப்பூரி நாயகத்தைப் போல கண்டிப்பான பிரம்மச்சாரியாக வீற்றிருந்தனர். அதனால் இவர்களுக்கு எவ்வித வாரிசுகளுமில்லை. ஹாபில் முஹம்மது இப்றாஹீம் ஆலிம் இவர்களின் வளர்ப்புப் பிள்ளை ஆகும். இவர் கேத்தல் பாவாவின் சகோதரர் அபூபக்கர் நாஹ்ஸியாவின் மகளின் மகனாவார்”

வழிகாட்டல்கள்……………

அஜ்மீர் ஷரீபை பின்பற்றியவராக இருந்ததனால் ‘ அஜ்மீர் வாலா’ என்ற பெயர் உரித்தாயிற்று. ஜிஸ்திய்யா, தியான பயிற்சி முறைகளை மேற்கொண்டு வெற்றிகண்ட இம்மாத்மீகப் புனிதர் இஸ்லாமிய  மார்க்க உபந்நியாசங்களைச் செய்து பலரை சன்மார்க்க கடமைகளில் ஆர்வத்தோடு ஈடுபடுவதற்கு துணைபுரிந்துள்ளார்கள். பல தீயவர்களை சமூகத்திற்கு உதவும் நற்பிரஜைகளாக மாற்றியுள்ளார்கள். ‘ஸலாவாத்து நாரியாவை’ அதிகம் ஓதிவருமாறு கூறியுள்ளார்கள். துன்பங்கள், கஷ்டங்கள் ஏற்படும் போது பின்வரும் ‘துஆ’வை ஓதிவருமாறு பணித்துள்ளார்கள்.

“யா அல்லாஹ்ல் மஹ்மூது ஃபிகுல்லி ஃபீஆலிஹி யா ஸாகியத்தாஹிரு மின் குல்லி ஆஃபத்தின் பி குத்ஸிஹி’

புகழுக்குரியவன் அல்லாஹ்வே! அனைத்தும் அவனைக்கொண்டே நிகழ்கின்றன. தன் புனிதத்தினால் எல்லாவித ஆபத்துக்களிலிருந்தும் பரிசுத்தமாக்கும் தூயவனே.

இவர்கள் திங்கள், வெள்ளி இரவுகளில் ‘ஜிஷ்திய்யி றாத்தீப்’களை நடாத்தியுள்ளார்கள்.  ‘றாதீப்’ செய்யும் பொழுது கேத்தல் பாவா நாயகம் உச்சநிலையை அடைந்து மெய்மறந்து தன்னுணர்வற்றுவிடுவார்கள். அவ்லியாக்களின் பெயரில் ‘பாத்திஹா’ கூறி துவங்கி செல்லும் போதே இவர்களின் உடல், முகம் படிப்படியாக புனித மாற்றத்திற்குட்பட்டு செல்லும். இப்புனித மாற்றங்கள் சூழவுள்ளவர்களை பக்தி பரவசமூட்டி நிற்கும்.

இவர்கள் கி.பி. 1930களில் இலங்கை வந்துள்ளனர். அப்போது இலங்கை பிரித்தானியரால் ஆளப்பட்டுக் கொண்டிருந்தது. டொனமூர் சீர்திருத்தம் அமுல் படுத்தப்பட்டு பிரித்தானியரின் பிரதிநிதியாக தேசாதிபதி, “அன்ரூ கல்டேகொட்” போன்றோர் ஆட்சி செய்த காலப்பகுதியாகும். முஸ்லிம்களின் அரசியல் பொருளாதார சமய எழுச்சிக்காக அறிஞர் சித்திலெவ்வை, ஸேர் றாஸிக் பரீத், அறிஞர் அஸீஸ் போன்ற தலைவர்கள் யராது உழைத்துக் கொண்டிருக்கும் ஒரு காலகட்டம்.

இந்தச் சூழ்நிலையில் தான் கேத்தல் பாவா அஜ்மீர் வாலா(வலி) இலங்கைக்கு வருகை தந்துள்ளார்கள். வருகை தந்த இவர்கள் கொழும்பு புதுக்கடை சிறிபுன முடுக்கில் வசித்துள்ளார்கள்.

கொழும்பு நாவல பள்ளித்தோட்ட மக்களோடு  இரு தசாப்தங்களுக்கு மேல் இவர்கள் உறவு பூண்டுள்ளார்கள். மர்ஹூம் ஏ.எல்.எம்.முஹம்மது ஹனீஃபா, பிலால் ஹோட்டல் முதலாளி முதலானோர் அழைப்பின் பெயரில் நாவலைக்கு கேத்தல் பாவா (வலி) சென்றுள்ளார்கள். இலங்கையில் பெரும்பாலான வாழ்வைக் கழித்த இம்மஹான் தமது வாழ்வை இங்கேயே முடித்துக் கொண்டார்கள்.

“இவர்கள் சிறிது காலம் உடல் நலம் குன்றி கொழும்பு, மருதானை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கி.பி. 1976 ஏப்ரல் 28 ஆம் திகதி (ஹிஜ்ரி 1396 ரபீஉல் ஆகிர் பிறை 28) புதன் கிழமை அதிகாலை சுமார் 04.00 மணியளவில் தமது 71வது வயதில் நித்தியானந்த வாழ்வில் சேர்ந்தார்கள்”.

கொழும்பு நாவலை வீதியின் மேற்புறமாக, பள்ளித்தோட்டத்தில் அமைந்துள்ள ‘அல்மஸ்ஜிதுல் பத்ரிய்யீன் ஜும்ஆ பள்ளிவாசலில்’ வடபுறமாக இம்மஸ்ஜிதின் ஸ்தாபகர் ஏ.எல்.எம்.முஹம்மது ஹனீபா அவர்களின்  அருகில் முஹம்மது சீனி அப்துல் காதிர் ஆலிம் ஸாஹிப் கேத்தல் பாவா அஜ்மீர் வாலா நாயக வலியுல்லாஹ் நல்லடக்கம் செய்யப்பட்டார்கள்.

இவர்களை ஸியாரத் செய்வதற்காக இலங்கையின் பல பாகத்தவர்களும் சென்று கொண்டிருக்கின்றனர். இலங்கை அக்கரைப்பற்றைச் சேர்ந்த குத்புனா அப்துல் மஜீத் மக்கத்தார் (றலி) கேத்தல் பாவா(வலி)ந் ஸியாரத்தோடு நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளார்கள். அவர்கள் கொழும்பு செல்லும் போது இம்மக்பறாவுக்குச் சென்றுவருவது வழக்கமாகும். இங்கு நடைபெறும் ‘குத்பா’ பலதில் பங்குபற்றியுள்ளார்கள். இவர்களின் பெயரையும் நினவு கூர்ந்து பாத்திஹா கூறி றாத்தீபுகளும் செய்துவரும் நடைமுறை காணப்படிகின்றது.

“இம்மஹான் ஜிஷ்திய்யாவைச் சேர்ந்த ஒரு குத்ப்” என அவர்கள் கூறியுள்ளார்கள். இந்தியாவில் கிழக்கு பகுதியில் பிறந்த இவர்கள் இலங்கையின் மேற்குப்புறமாக ‘மக்பறா’ கொண்டிருப்பது சொந்த ஊரையும் வந்த ஊரையும் இணைக்கும் விஷேட பண்பாக அமைந்துள்ளது.

Nawala Masjidh- DargahsBawa Nayahan Pavitththa Porutkal

Dargah Map

 

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *