Kuthubul Akthab As-Seyyidh Abdul Waahid Moulana (Raliyallahu Anhu)

அல்-குத்ப் அஷ்-ஷெய்க் அப்துல்வாஹித் மௌலானா ஸபீதிய்யி யமானிய்யி வல்அப்பாஸிய்யி வஸித்தீக்கிய்யி (றலி)

 சமூகத்தில் ஆழிய தாக்கத்தை உண்டுபண்ணிய மாமனிதராக, வீரமிகு செயல்களில் மகா பராக்கிரமவானாக குத்பியத்தை சுமந்த குத்பாக, றப்பிலாலமீனின் இறுக்கமான ஒண்டுதலை தனதாக்கி ‘விலாயத்’ எனும் இலட்சினை பொறிக்கப்பட்ட மாபெரும் வலியுல்லாஹ்வாக கறாமத்துக்கள் களைகட்டி சோபித்த அற்புத பெரும் ஸூஃபியாக அஷ்-ஷெய்க் அப்துல்வாஹித் மௌலானா (றலி) அவர்கள் கொலுவீற்றிருப்பதை ஆழமாகப் புதைக்கப்பட்ட அவரது வரலாறுகள் அத்தாட்சிப்படுத்திக் கொண்டிருக்கின்றன.

 Figure 46

சங்கைக்குரிய அல்-குத்ப் அப்துல் வாஹித் மௌலானா (றலி), (கி.பி. 1982) ,Figure  – 46

பரிசுத்தவான்களிடம் குடிகொண்டிருக்கும் அதியுயர் நான்கு நற்குணங்கள் இப்பெரியாரின் தாய்மடி துவக்கம் மண்முடிவரை நின்று நிலைத்து அடையாளப்படுத்தப்பட்டிருக்கின்றன. சத்தியம், நேர்மை, நீதி, வீரம் ஆகிய நற்குணங்களின் உறைவிடமாக அஷ்-ஷெய்க் அப்துல்வாஹித் மௌலானா (றலி) அவர்கள் விளங்கியிருக்கின்றனர். இந்நான்கு பண்புகளும் ஒருவருக்குள் குடியிருப்பது அபூர்வத்திலும் அபூர்வமாகும். இவர்களுக்கு பரம்பரை ரீதியாக வாரிஸுடைமையாக்கப்பட்டு வந்த பூர்வீகப் பண்புகளிவை. இப்பண்புகள் மூலம் இப்பெரியார் புனிதத்துவக் குடும்பத்தினரை சேர்ந்தவர் என நாம் அறிந்து கொள்ள உதவுகின்றன.

‘அப்துல்வாஹித்’ என்ற நாமத்திற்கு ஏற்ப வாஹித் ஆகிய அல்லாஹூவின் அடிமையாகவே அவர்களுடைய வாழ்க்கை அமைந்திருந்தது. பாமரர்களுக்கு ஒரு சாதாரண அப்துல் வாஹிதாகத்தான் அவர்கள் தோற்றமளித்தார்கள். அத்தனை அடக்கம் அவர்களில் குடி கொண்டிருந்தது. ஆனால் அவர்களின் உள்ளம் வாஹிதைச் சுற்றி வந்தது. (135. ஆதாரம் : வெற்றி சஞ்சிகை).

பிறப்பு:

1908 இல் பொத்துவில் கிராமத்தில் பிறந்த இவர்கள் தாய் தந்தை இருவழியிலும் தூய ’அஹ்லுல் பைத்’ குடும்பத்தையுடையவர்கள். ’இன்ஸான் காமிலாக’ விளங்கிய அஷ்-ஷெய்க் அப்துல்வஹாப் மௌலானா (றலி) அவர்களின் மூத்தமகனாக முதல் குடும்ப பந்தத்தில் பிறந்தவர்கள். ‘இல்ஹாம்’ என்ற தெய்வீகச் சுடரை மழலைப் பருவத்திலிருந்து சுகித்து வந்துள்ளார்கள்.

சர்வ சக்தன் அல்லாஹூவின் அசையா நம்பிக்கையில் கைவரப்பெற்றவராக, இறை பக்தியிலும், வழிபாட்டிலும் காலத்தை செலவு செய்துள்ளார்கள். ஸெய்யிதினா முஹம்மது நபி (ஸல்) அவர்களில் அளவற்ற  ஹுப்புடையவராக வாழ்ந்திருக்கின்றார்கள்.

முழுப் பணிகளிலும் ஸலவாத்துக்களைக் கூறிவந்துள்ளார்கள். குளிப்பது முதல் குடிப்பதுவரை ஸலவாத்துக்களை சொல்கின்றவராக இருந்துள்ளார்கள். ஒவ்வொரு அள்ளுத் தண்ணீருக்கும் உரத்து ஸலவாத்தை மொழிந்து குளிக்கும் வழக்கமுடையவராக இருந்துள்ளதை அறிய முடிகின்றது.

கல்வி :

இவர்கள் அஷ்-ஷெய்க் யாஸீன் மௌலானா (றலி) அவர்களின் அரவணைப்பில் வளர்ந்திருக்கின்றார்கள். தந்தையிடமும் தன் தாயின் தந்தையிடமும் கல்வி ஞானங்களை கற்றுள்ளார்கள். குர்ஆன், ஹதீஸ், பிக்ஹு, தஸவ்வுஃப் போன்ற துறைகளில் வல்லவர்களாக கிரீடம் கொண்டிருந்தார்கள். காலி- ஹபீப் முஹம்மது (றஹ்), இந்தியா- பல்லாக்கு (வலி), கல்வத்து நாயகம், அல்லாமா அப்துல் ஹமீது பாகவீ (வலி) முதலான மார்க்க ஞானமேதைகளிடத்திலும் கல்வி கற்று பேரறிஞராகவும் பெரும் ஆலிமாகவும், தலைசிறந்த முப்தியாகவும் விளங்கியிருக்கிருக்கின்றார்கள் என்பதை வரலாறு காட்டி நிற்கின்றது.

ஞான மேதையாக விளங்கி தம் தந்தையாரிடத்திலும் கிழக்கிலங்கையில் சிறப்புற்று விளங்கிய இதர ஆலிம்களிடத்திலும் அல்-குர்ஆன், அறபுத் தமிழ்மொழியையும் கற்றார்கள். பின்னர் காலிக்குச் சென்று ஹபீப் முஹம்மது ஆலிம் (றஹ்) யிடம் தப்ஸீர், ஹதீஸ், பிக்ஹு, தஸவ்வு போன்ற அறிவுகளைப் கற்றுந்தேர்ந்தார்கள்.( 136. ஆதாரம் : மே.பா, சஞ்சிகை, பக் – 50)

சட்டம், தத்துவம், அரசியல், மொழிபெயர்ப்பு, மருத்துவம், அறபு, தமிழ், சிங்களம், ஆங்கிலம் முதலான கலைகளிலும் மொழிகளிலும் வியாபகமான அறிவு படைத்தவர்கள். சிறந்த எழுத்தாளர். கதிர்காம பள்ளிவாயிலின் தர்மகர்த்தா உரிமைக்காக அம்பாந்தோட்டை நீதிமன்றில் தொடுக்கப்பட்ட வழக்கில் பிரபல சட்டத்தரணியாகவும், தமிழரசு கட்சியின் ஸ்தாபகரும் தலைவராகவுமிருந்த எஸ்.ஜே.வி. செல்வநாயகத்திற்கு எதிராக ஆஜராகி வழக்காடி கதிர்காம பள்ளியின் தர்மகர்த்தா உரிமையை வென்றெடுத்தது இவர்களுக்கு சட்டத்துறையிலிருந்த புலமைக்கு தக்க சான்றாகும்.

ஆளுமைமிக்க முஸ்லிம் அரசியல் தலைமைத்துவம் உருவாக்கப்பட வேண்டும் என்பதிலும் கரிசனை கொண்டிருந்தனர். சேர் ராஸிக் பரீட், கலாநிதி பதியுத்தீன் மஹ்மூத், எம்.எஸ். காரியப்பர், ஏல்.எல். அப்துல் மஜீத் போன்ற தலைசிறந்த அரசியல்வாதிகளும் இவர்களின் ஆன்மீகப்புலத்தில் இடம்பெற்றுள்ளனர்.

கல்வத் :

அல்-குத்ப், ஷெய்க் இஸ்மாயீல் யமானி (றலி) அவர்களின் குடும்பத்தினர், தவ வாழ்க்கைக்காகப் பாரம்பரியமாகப் பயன்படுத்தி வந்த கதிர்காம வனத்தில் இப்பெரியார் 10 வருடங்கள் தவமிருந்தனர். தவவாழ்வு பற்றிய அனுபவங்களை முரீத்தீன்கள், முஹீப்பீன்கள் மத்தியில் விபரிக்கையில், “நான் தவத்திலிருக்கும்போது வனத்தில் ஜீவிக்கும் ஐவாய் விலங்குகளான கரடி, சிங்கம், பாம்பு, வேங்கை முதலானவைகள் தன்னைச்சுற்றி மர்ந்திருந்து பார்த்துக்கொண்டிருக்கும். அக்காடுகளில் காணப்படும் கனிகள் சுவர்க்கத்து கனிகளைப்போல் அமுதூட்டும்.  இவ்வாறு நாட்களும், வருடங்களும் நகர்ந்து கொண்டிருக்கையில் ஒருநாள், ஓ மனிதா! மனித வனத்தில் வாழும் கரடி, புலி, சிங்கம் போன்ற விலங்குகளோடு வாழ்ந்து தனித்திருப்பதே உண்மையான துறவி என்று எனக்குள் ஓர் உதிப்பு தோன்றியதால் வனத்தவ வாழ்வை நிறைவு செய்தேன்” என்று விளக்கியதாக அவர்களின் முரீத்தீன் இப்றாலெப்பை (மனேஜர்) கூறினார்.

1908ல் பொத்துவில் கிராமத்தில பிறந்த இவர்கள் குர்ஆன், ஹதீஸ்களைக் கற்றுத் தேரி பெரும் ஆலிமாகவும் மாணிக்க வியாபரியாகவும் விளங்கினார்கள். கதிர்காமப் பள்ளிவாசலில் 10ஆண்டுகள் இறைதியானத்தில் கழித்தார்கள். (137. அம்பாறை மாவட்ட முஸ்லிம்கள், பக்-142)

கிலாபத் :

குத்பு நாயகங்களை நேரடியாக தரிசிக்கும் பேறுடையவர்கள். அவர்களிடம் ‘பைஅத்’ செய்து தந்தையின் கிலாபத்தை பொறுப்பேற்குமாறும் வழிகாட்டப்பட்டு, அல்-குத்ப் அஷ்-ஷெய்க் அப்துல் வஹாப் மௌலானா (றலி) அவர்களிடமிருந்து கிலாபத்தையும், காதிரிய்யி, ஐதரூஸிய்யி, ஷாதுலிய்யி, ஜிஸ்திய்யி தரீக்காக்களை நடத்துவதற்கான உத்தரவுகளையும் 1933 ல் பெற்றுக் கொண்டுள்ளனர். ஜலாலியத்திற்கான உத்தரவுகளை அஷ்-ஷெய்க் யாஸீன் மௌலானா (றலி)யிடமிருந்து பெற்றிருக்கின்றார்கள். (138. ஆதாரம் : ஸமதிய்யா றாதீப் கிதாப், பக்- 13).

சேவைகள்:

பல பிரதேசங்களில் ஆன்மீக, சமூக சேவைகளை செய்த இப்பெரியார், பல மஸ்ஜித்துக்களையும், ஸாவியாக்களையும், மதரஸாக்களையும் ஸ்தாபித்திருக்கின்றனர். பல ஸியாரங்களைப் பராமரித்திருக்கின்றனர். அங்கெல்லாம் திக்ர் மஜ்லிஸ்களையும், றாதீப்புக்களையும் உபந்நியாசங்களையும் நடத்தியும் செய்தும், நேர்வழியில் மக்களை வழிநடத்தி ஜெயமூலராக விளங்கியுள்ளனர்.

பொத்துவில், அக்கரைப்பற்று, கல்முனை, சாய்ந்தமருது, காத்தான்குடி, கிண்ணியா, வெலிகாமம், கொழும்பு முதலான பகுதிகளில் தீனுல் இஸ்லாமிய பணிகள் செய்துள்ளனர். காத்தான்குடியில், மதரஸதுல் ஸமதனிய்யியா, கிண்ணியாவில், ஷெய்க் அப்துல் காதிர் மக்பறா, கந்தளாயில் போட்டாறு மஸ்ஜித், சாய்ந்தமருதில், சற்குரு மகாம், பத்ரிய்யா, மஸ்ஜித்துல் அக்பர் போன்றவைகளை உருவாக்கியுள்ளனர்.

இலங்கையில் மாத்திரமின்றி இந்தியாவிலும் நாகூர், காயல் பட்டினம் சென்று அதிக ஆன்மீகப் பயிற்சிகளும் பெற்றுக் கொண்டனர். காத்தான்குடி, கிண்ணியா, கந்தளாய், முள்ளிப் பொத்தானை முதலான இடங்களில் பள்ளிவாசல்களையும் நிறுவக் காரணமாக இருந்தார்கள்.(139. ஆதாரம் :  அம்பாறை மாவட்ட முஸ்லிம்கள், பக்-142).

ஷெய்க் அப்துல் காதர் (வலி) நடுப்பள்ளி (வலி) (கிண்ணியா) சற்குரு அப்பா (வலி) (சாய்ந்தமருது) பால்குடி பாபா (வலி) (கதிர்காமம்) மெஹர்பான் அலிஷா கலீபா கலாபத் (வலி) (காரைதீவு முச்சந்தி) முதலான வலிமார்களின் ஸியாரங்களையும் பராமரித்து கந்தூரிகளும் வழங்கியுள்ளனர்.

இஸ்லாத்திற்காகவும், நீதிக்காகவும் பலரோடு சண்டையிட்டிருக்கின்றனர். கந்தளாய் போட்டாறு மஸ்ஜித்தை அமைக்கும் போது வேற்றினத்தவர்கள் முஸ்லிம்களை எதிர்த்துத் தாக்கினர். இம்மஹான் அம் மூர்க்கர்களோடு எதிர்த்துப் போரிட்டு மஸ்ஜித்தை அமைத்தனர். 1951ல் இப்றாஹிம் சுப்ரிண்டரின் அரசியல் கும்பல் அக்கரைப்பற்றில் அடாவடித்தனங்களில் ஈடுபட்டனர். நீதிக்கு விரோதமாக செயற்பட்டனர். இவர்களுக்கு எதிராக சண்டை செய்தனர் என்பதனால் பாராளுமன்ற உறுப்பினர் இப்றாஹிம் சுப்ரீண்டர் வாஹித் மௌலானா நாயகங்களை கைதுசெய்ய மட்டக்களப்பு காவல்துறையினருகு;கு உத்தரவிட்டனர். அக்காவல் துறையினர் இவர்களின் வீட்டிற்கு முன் ஜீப்வண்டியை நிறுத்தி இறங்குவதற்குள் ‘யாஅலி’ என்ற சத்தத்துடன் சுமார் ஆறடி வேலியின் மேல் பாய்ந்தனர். ஒரே தூசி மண்டலம் அடிதடி சத்தமும், பந்தை சுழட்டி எறிவதைப்போல் இரு கால்களையும் பற்றி தூக்கி அவர்கள் வீசி எறிந்தார்கள். 16 காவல்துறை உத்தியோகத்தரும் இடுப்புடைந்தவர்களாக கைகால் அடிபட்டவர்களாக பூமியில் விழுந்து கிடந்தனர்.

சினிமாவில் கற்பனையாக சித்தரிக்கும் காட்சிகளைப் பார்த்துப் பழக்கப்பட்ட நான் நிஜமாக நேரில் கண்டு வியந்தேன். அஷ்-ஷெய்க் அப்துல் வாஹித் மௌலானாவின் வீரமிகு பராக்கிரமத்தை என்னவென்று சொல்வேன். என நேரில் கண்ட ஒரு சண்டைச் சம்பவத்தை ஒருவர் விளக்கினார். இவ்வாறு நீதிக்காகவும் சத்தியத்திற்காகவும் அஞ்சா நெஞ்சத்தோடு போராடிய மகா பராக்கிரமவானாக இவர்கள் விளங்கி இருக்கின்றார்கள்.

நபி மூஸா (அலை) அவர்களின் வழிமுறையை பின்தொடர்ந்த இவர்கள், நபி மூஸா (அலை) போல் நீதியையும் எதிர்பார்த்தார்கள். ஒரு சிறு அம்சத்தைக்கூட நீதியின் அடிப்படையில்தான் செய்தார்கள். அவர்களின் ஒவ்வொரு அசைவும் நீதியை வெளிப்படுத்தி நின்றது. தர்மங்களை இருட்டடிப்புச் செய்யும் எவரையும் இவர்கள் அங்கிகரிக்கவில்லை. தமக்கெதிராக படைப்பலம், ஆயுதப்பலம் இருந்தபோதும் அவைகள் பற்றி கிஞ்சிற்றும் கவலைப்படாமல் எதிர்த்து போரிட்ட அதி வீரமிகு மனிதர். ஸெய்யிதினா அப்பாஸ் (றலி) அவர்களின் வாரிஸு. அலிய்யின் கர்ரமல்லாஹு வஜ்ஹஹூ (றலி) அவர்களின் உரூஜோடும், பலத்தோடும் செயற்பட்ட மகாவீரர் எனலாம்.

அவர்கள் சோதனைகளைக் கண்டு சோர்ந்து போனது கிடையாது. இன்ப துன்பங்களின் திளைத்து ஏமாந்து போனதுமில்லை. நன்மையை நாடி எக்காரியங்களிலும் துணிந்து நின்றார்கள். வீரம் அவர்களின் பிறவிக் குணம்! என்பது அவர்களின் வாழ்க்கைப் புத்தகத்தை வாசிக்கும் ஒவ்வொருவருக்கும் விளங்கும்.(140. ஆதாரம் : மே.பா, சஞ்சிகை பக்-51).

முதுமைப் பருவத்திலும் ஆரோக்கியமான இளைஞனைப் போன்று எண்பத்து மூன்று வருடங்கள் வாழ்க்கை நடத்திய இப்பெரியார், தரீக்காக்களினதும், அஹ்லுல் வல் ஜமா அமைப்புக்கும் ஏற்பட்ட பேராபத்துக்களை தடுத்துக் காக்கும் பெருஞ்சுவராகவிருந்துள்ளார்கள். இவர்கள் ஜமாஅத்து ஸுன்னா என்ற அமைப்பை 1976ல் உருவாக்கினார்கள்.

திருமணம் :

வெலிகாமத்தில் தன் மைத்துனி முறையுடைய அஸ்-ஸெய்யித் மூமினா (வலி) அவர்களை மணந்து ‘முயீனுத்தீன்’ என்ற ஆண்மகவை பெற்றெடுத்தனர். மனைவியும் இறைகாதலில் மூழ்கியிருந்ததனால், தன் கணவரின் ஆன்மீக வாழ்வுக்காக தன்னையே தியாகித்திருந்தனர். இதனால், ஐந்து வருடத்திற்கு ஒருமுறை கணவனை சந்திக்கும் நிலை ஏற்பட்ட போதிலும் அல்லாஹ், றஸூலுக்காக எதையும் செய்யத் துணிந்தனர்.

பைஅத்து வழங்குதலும் வபாத்தின் முன்னறிவிப்பும் :

குடும்பம், அரசியல், சமூகம், ஆன்மீகம் என படர்ந்து வேருற்ற இம்மாமனித பரிசுத்தவானின் பார்வை வல்ல றஹ்மான் அல்லாஹூவின் அழைப்பிலும் கண் குத்தியது. தன் சிஷ்ய பிள்ளைகளை அழைத்து, “என் தந்தை பயணம் செல்ல ஆயத்தமாகு வாஹித்” என்றனர். என் பிள்ளைகளான முஹீப்பீன்களுக்கு செய்ய வேண்டிய சில பணிகளிருக்கின்றன. ஒரு மாதம் எனக்கு அவகாசம் தாருங்கள் என வேண்டியுள்ளேன்” என்பதால் உங்களனைவருக்கும் தப்தர் ஜீலானி அழைத்துச் சென்று ‘பைஅத், நஸீஹத்’ தர வேண்டியுள்ளது. ஆயத்தமாகுங்கள் என்று கூறி தனது வபாத்தை முன்கூட்டி அறிவித்தார்கள்.

தப்தர் ஜெய்லானி பயணம் :

பத்தொன்பது சிஷ்யர்களை அழைத்துச் சென்றனர். தப்தர் ஜீலானிக்கு ஏறும் பாதைவழியில் சென்றுகொண்டிருக்கும்போது, மேலிருந்து கந்தூரி உணவை எடுத்து ஒரு சிறிய பாலத்தின் வழியே குழந்தையோடு சிங்கள தாயொன்று வருகையில் பெருங்குரங்குகளின் கூட்டம் அத் தாயிடமிருந்து உணவை பறிக்க எத்தனித்துக் கொண்டிருந்தது. குரங்குகளிலிருந்து தப்ப தாயும் போராடிக்கொண்டிருப்பதை அவதானித்த அஷ்-ஷெய்க் அப்துல் வாஹித் மௌலானா (றலி) அவர்கள் குரங்குகளைப் பார்த்து ‘கிட்டே நெருங்க வேண்டாம்’ என கட்டளையிட்டார்கள். அக்கட்டளையை அனுசரித்தாற்போல் சுற்றிவளைத்த குரங்குகள் அருகிலுள்ள மரத்தை தாவின. அம்மாது ஆபத்திலிருந்து காப்பாற்றப்பட்டாள்.

மலைமுகடுகளின் வழியே மேல்நோக்கிச் செல்கின்றனர். பக்கீர் ஒருவர் மேலிருந்து ஓடிவந்து வழிமறித்துப் பெரியாரைக் கட்டியணைத்து என் கண்மணி நாயகமே! என் சீதேவி நாயகமே! குத்பு முஹையதீன் அப்துல் காதிர் ஜீலானி (றலி) அவர்கள் ‘பைஅத்து’  எடுக்கச் சொன்ன நாயகமே! என்று விளம்பி மீண்டும் மீண்டும் கட்டியணைத்து முத்தமிட்டார். வாஹித் மௌலானா வாப்பா, பக்கீரிடம் என் பிள்ளைகளுக்கு தேவையான உணவைத் தயார் செய்யுமாறு வேண்டினர். அத்துறவி மீண்டும் ஆரம்ப  வாக்கியங்களையே கூறி நின்றார். உணவை தயார் செய்யுமாறு மீளவும் வலியுறுத்தினர். மூன்றாம் தடவையும் வலியுறுத்தினர். பக்கீர் பெரியாரை நோக்கி, நாயகமே! ஆலத்து உணவெல்லாம் உங்களுடையதே என சூட்சுமமாக விடை பகர்ந்து நின்றார். எல்லோருமாய் ஒன்றுகூடிச் செல்கின்றனர்.

தப்தர் ஜீலானியை அடைந்தனர். தாம் எடுத்துச்சென்ற ஒரு மரைக்கால் அரிசியையும், ஒரு கோழியையும் கொண்டு சமைத்து அங்குள்ள எல்லோருக்கும் கந்தூரி வழங்கினர். இருநூறுக்கு மேற்பட்டவர்கள் அவ்வுணவை சாப்பிட்டதாகவும், தாங்கள் இதுவரை அனுபவித்திராத சுவையுடைய உணவாகவுமிருந்ததாகக் கூறினர்.

கந்தூரியை முடித்துக்கொண்டு அல்-குத்ப், அஷ்-ஷெய்க் அப்துல் வாஹித் மௌலானா யமானி, காதிரிய்யி, ஷாதலிய்யி, றிபாஇய்யி, ஜிஸ்திய்யி(றலி) அவர்கள் தம் தோழர்களை நோக்கி “முஹையதீன் அப்துல் காதிர் ஜீலானி (றலி) பக்தாத் சென்றுள்ளனர். அவர்கள் இங்கு வந்ததன் பிற்பாடே உங்களுக்குரிய உத்தரவுகளை வழங்கமுடியும்” என நவின்றார்கள்.

இவ்யாத்திரையில் இப்பெரியாரின் மகன் அஸ்-ஸெய்யித் முயீனுத்தீனும், அவர் மகன் சிறுமழலை அஸ்-ஸெய்யித் யெஹ்யாவும் இடம்பெற்றிருந்தார்கள். ஜீலானில் உள்ள உப்பு மலையடிக்குச் சென்று எல்லோரும் நீரருந்தி இயற்கையை இரசித்துக்கொண்டிருக்கும் வேளை மரத்தில் தொங்கியிருக்கும் தேன்கூட்டில் ஒரு முகம் தெரியிது என அஸ்-ஸெய்யித் யெஹ்யா கூறினார். இதைத் தொடர்ந்து தாமும் தம் முஹீப்பீன்களும் ஒலு செய்து கொண்டு அங்குள்ள பள்ளியினுள் நுழைந்தனர். பள்ளி நிருவாகிகளை அழைத்து இந்நிகழ்வுகள் நிறைவு பெறும்வரை எவரும் நுழைய வேண்டாம் எனக் கோரினார்கள். பத்தொன்பது சிஷ்யர்களோடு இன்னுமொருவர் நுழைந்தார். அவர் பற்றிய விபரம் தெரியாது. பள்ளி கதவுகள் அடைக்கப்பட்டு தாழிடப்பட்டன. அப்துல் வாஹித் மௌலானா நாயகம் அவர்கள் தொழுது, முரீதீன்களை நோக்கி அமர்ந்தவர்களாக ‘தௌபாவில்’ ஈடுபட்டு ‘திக்ர்’ செய்தார்கள். அவர்களின் கண்கள் அகல விரிந்து சிவந்தது. முகமும் சிவந்தது. ஜலாலியத்தின் தன்மைகள் பளிச்சிட்டன. முரீத்தீன்கள் அவர்களின் கரத்தையும், உடலையும் பற்றினர். அல்லாஹ்வின் ‘றஹ்மத்’ எனும் தீட்ஷையை இவர்கள் வழங்கினார்கள்.

இவ்வழிமுறையில் இறுதிவினாடி வரை நிலைத்திருக்குமாறும் பித்னாக்கள் நிறைந்த காலமொன்றை சந்திப்பீர்கள் எனவும் வேறு எந்தக் கொள்கைகளையும் பின்பற்ற வேண்டாம். இதுவே நேரான பாதையாகும். தப்லீக் அமைப்பினர் நரகவாதிகளாகும். அது வழிகேட்டிற்குரிய துர்மார்க்கமாகும் என உபநியாசம் செய்து பிராத்தனையோடும் நிறைவு செய்தார்கள். மறுநாள் அனைவரும் தம்மில்லம் திரும்பினர்.(142. தகவல் : எம்.சி. இப்றாலெப்பை மனேஜர், சாய்ந்தமருது).

இவர்களை எல்லோரும் தந்தையின் அந்தஸ்த்தில் நோக்கினர். ‘மௌலானா வாப்பா’ என்றே அழைத்து வந்தனர். சகல காரியங்களையும் இவர்களின் அனுமதியுடனேயே செய்து வந்தனர். மற்றவர்களின் இன்ப துன்பங்களில் பங்கெடுத்தனர். அஸ்மா இஸ்மு வைத்தியராகவும், யூனானி வைத்தியராகவும் விளங்கினார்கள். ஏழைகளின் துயரங்களைப் போக்குவதில் விருப்பம் கொண்டார்கள்.

கராமத்துக்கள் :

இவர்கள் மூலம் அல்லாஹ் பல நூறு கறாமத்துக்களை வெளிப்படுத்தியிருந்தான். கறாமத்துக்களை மறைத்து வாழும் ஒருவராகவே பிறருக்குத் தோன்றினார்கள். ஒருமுறை ‘இப்றாலெவ்வை’ அவர்கள் ஷெய்க் அப்துல் வாஹித் மௌலானா (றலி) அவர்களிடம் அஸாவைப் பயன்படுத்தி பறவை சுட்டுத்தருமாறு பிடிவாதத்துடன் கூறினார். அதற்கு அவர்கள் இது எங்கள் குடும்பத்தினர் செய்திருக்கின்றனர். மகனே! இதை நான் செய்தால் அல்லாஹூவின் கட்டளையை புறக்கணித்தவனாகிவிடுவேன். எனக்கு வல்லநாயன் முத்திரை பொறித்துள்ளான் என விளக்கி தன் தலைப்பாகையை கழற்றி தலையைக் காட்டினர். என்ன அதிசயம்! முன் நெற்றிப் புருவத்தில் முனை ஆரம்பித்து பின் புறமாக வளைந்து மறுபுருவம் வரை ஒரு அழகான பிறையொன்று அவர்களின் தலையில் காணப்பட்டது. இப்பிறையை பல முரீத்தீன்களும் கண்டுள்ளனர். என அனுபவ வாயிலான சாட்சியத்தை அவர் பகர்ந்தார்.

காத்தான்குடியில் அமைந்திருக்கும் தன் தந்தையின் மக்பறாவை தீவிரமாகக் கட்டிமுடித்தார்கள். பல பணிகளை அவசரம் அவசரமாகச் செய்தார்கள்.

வபாத்து :

அவர்கள் முன்னறிவித்தபடி சரியாக ஒரு மாதமுடிவில் சாய்ந்தமருது தஹ்யத்துல் அக்பர் மஸ்ஜித்தில் ஹிஜ்ரி 1404 ஜமாதுல் அவ்வல் பிறை 27 (1984.03.01) ஆம் நாள் மஹ்ரிப் நேரத்தில் ஒலுவெடுத்துக்கொண்டு தன் அறைக்குள் நுழைந்து திக்ர் செய்வதில் ஈடுபட்டார்கள். திக்ர் சப்தம் வெளியில் கேட்டுக் கொண்டிருந்தது. திடீரென அமைதி நிலவியது. அறையை திறந்து பார்த்த பின்னர்தான்  அப்பெரியார் இவ்வுலக வாழ்வுக்கு விடைசொன்ன சேதி தெரிய வந்தது.(143. தகவல் : எம்.சி. இப்றாலெப்பை மனேஜர், சாய்ந்தமருது, அஸ்-ஸெய்யித், எம்.எம்.யெஹியா மௌலானா, சம்மாந்துறை).

 

 Figure 47

சங்கைக்குரிய அல்-குத்ப் அப்துல் வாஹித் மௌலானா (றலி)ன் ஸியாரம்,(கி.பி. 2010 நவம்பர்) Figure – 47

 அவர்களால் முன் தெரிவிக்கப்பட்ட இடத்தில் மஸ்ஜித்தின் அருகில் (தெற்கு) முன்பக்கமாக அப்பெரியாரின் பொன்னுடல் நல்லடக்கம் செய்யப்பட்டு ஸியாரம் அமைக்கப்பட்டது.

 கந்தூரி :

அன்றிலிருந்து ஜமாஅத்துல் அவ்வல் பிறை 27ல் அவர்களின் ஞாபகர்த்தமாக கந்தூரி நடைபெற்று வருகின்றது. மௌலித்து, றாதீப்பு, மீலாத்துந் நபி விழா முதலான மார்க்க நிகழ்வுகளும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்தியா அந்திரோத்தீவு படையான் பள்ளியில் அஷ்-ஷெய்க், அல்-குத்ப் ஹல்லாஜுல் மன்ஸூர் (றலி) அவர்களின் பணிப்புரைக்கு அமைவாக அஷ்-ஷெய்க், அல்-குத்ப் அப்துல் வாஹித் மௌலானா (றலி)கும் இவர்களின் தந்தை அஷ்-ஷெய்க், அல்-குத்ப் அப்துல் வஹாப் மௌலானா (றலி)கும் இவர்களின் தந்தை அஷ்-ஷெய்க், அல்-குத்ப் அப்துஸ் ஸமது மௌலானா (சின்னமௌலானா) (றலி)க்கும் பிரதி அஸருக்குப் பிற்பாடு யாஸீன் ஓதி வரப்பட்டு வருடாந்த கந்தூரியும் வழங்கப்பட்டு வருகின்றது.

சாய்ந்தமருது மஸ்ஜிதுல் அக்பர் பள்ளியில் அப்துல் வாஹித் மௌலானா நூலகம், மத்ரஸதுல் வாஹிதியா, மதரஸதுல் ஹிப்ழுல் வாஹிதியா என்பனவும் அமைக்கப்பட்டுள்ளன.

 Figure 48

  மஸ்ஜிதுல் அக்பர், சாய்ந்தமருது. (கி.பி. 2010 நவம்பர்),Figure – 48

 இம்மஹான் அல்-குத்ப் அப்துஸ்ஸமத் மௌலானா(றலி)ன் பேரரும், அல்-குத்ப், ஷெய்க் இஸ்மாயீல் யமானி (றலி)ன் பேரனின்மகனுமாவார்கள். ஷெய்க் அப்துல் வாஹித் மௌலானா (றலி) தன் குடும்ப ரீதியாக தமக்கு வந்த காதிரிய்யி தரீக்கா கிலாபத்தை எவர்களுக்கும் வழங்கவில்லை. தமக்குரிய கலீபாவாக எவரையும் காட்டவோ அத்தாட்சிப்படுத்தவோவில்லை. அந்நிலையிலேயே இவர்களும் வபாத்தாகியுள்ளார்கள்.

உடலமைப்பு :

இவர்கள் ஐந்தே முக்காலடி உயரமும், அகன்று பெருத்த உடலும் வெண்மை கலந்த முடியும், தலைமுடிகளை நடுவாக வகுந்தெடுத்து காதுகளின் மேற்புறமாக ஒதுக்கி பின் புறமாக விடப்பட்டும், நீளமான முன்நுனி சற்றுப்பெருத்த மூக்கும், மூன்று இஞ்சு தாடியும், Full Sleev Shirt சரமும் வலக்கையில் Walking Stick உம்  கொண்டவர்களாக விளங்கினார்கள். ஷெய்க் அப்துல் வாஹித் மௌலானா(றலி) ஒரு மஹா வீரங் கொண்ட கம்பீரத் தோற்றமுடையவர்களாகக் காணப்பட்டார்கள்.

குடும்ப வழி காதிரிய்யியா ஸில்ஸிலாவில் அல்-குத்ப், அஷ்-ஷெய்க், அஸ்-ஸெய்யித் அப்துல் வாஹித் மௌலானா காதிரிய்யி, ஜிஸ்திய்யி, றிபாஇய்யி, ஷாதலிய்யி, ஐதரூஸிய்யி(றலி) இருபத்து ஏழாம் ஷெய்க்காக பெயர் வழங்கப்பட்டுள்ளார்கள்.

 குடும்ப வழி காதிரிய்யி ஸில்ஸிலா 

01. ஸெய்யிதுல் கவ்னைனி முஹம்மது முஜ்தபா (ஸல்)
02. ஸெய்யிதினா அலி (றலி)
03. ஸெய்யிதினா ஹஸன் ஹுஸைன் (றலி)
04. ஷெய்க் ஹஸனுல் பஸரி (றலி)
05. ஷெய்க் ஹபீபுல் அஜமி (றலி)
06. ஷெய்க் மஹ்றூபில் கர்ஹி (றலி)
07. ஷெய்க் தாவுத் தாயி (றலி)
08. ஷெய்க் ஸிர்ரிய்யிஸ் ஸிக்தி (றலி)
09. ஷெய்க் ஜுனைதுல் பக்தாதி (றலி)
10. ஷெய்க் அப்துர் றஹுமான் யமானி (றலி)
11. ஷெய்க் யூஸுப்புல் தர்தூஸி (றலி)
12. ஷெய்க் அபுல்ஹஸன் அபூபக்காரி (றலி)
13. ஷெய்க் அபி ஸஹதினில் முபாரஹில் மக்ரமின் அலியுல் மஹ்ஸமி (றலி)
14. கௌதுனா முஹையதீன் அப்துல் காதிர் ஜீலானி (றலி)
15. ஷெய்க் அப்துர் றஸாக்குல் காதிரிய்யி (றலி)
16. ஷெய்க் அஹமது நஸலுல்லாஹி காதிரிய்யி (றலி)
17. ஷெய்க் றஜபுல் காதிரிய்யி (றலி)
18. ஷெய்க் பைறுல்லாஹில் காதிரிய்யி (றலி)
19. ஷெய்க் மஹ்மூதுல் காதிரிய்யி (றலி)
21. ஷெய்க் அலியுல் காதிரிய்யி (றலி)
22. ஷெய்க் அப்துல் றஹுமானுல் காதிரிய்யி (றலி)
23. ஷெய்க் ஹஸனிப்னு ஸெய்யிதுல் அலியுர் றிபாஇய்யி காதிரிய்யி (றலி)
24. ஷெய்க் இஸ்மாயீல் யமானியுல் காதிரிய்யி (றலி)
25. ஷெய்க் அப்துஸ்ஸமத்யமானியுல் காதிரிய்யி (றலி)
26. ஷெய்க் அப்துல் வஹாப் யமானியுல் காதிரிய்யி (றலி)
27. ஷெய்க் அப்துல் வாஹித் யமானியில் காதிரி (றலி)

இரு வழிமுறை ஸில்ஸிலாக்கள் 

குத்புனா ஹல்லாஜுல் மன்ஸூர் (றலி)ன் கிலாபத் வழிமுறை காதிரிய்யி ஸில்ஸிலாவும் ஷெய்க் அப்துல் வாஹித் மௌலானா(றலி) ன் குடும்ப வழிமுறை காதிரிய்யி ஸில்ஸிலாவும் சேர்ந்தும் பிரிந்தும் வந்திருப்பதை அவ்விரு ஸில்ஸிலாக்களிலிருந்து நோக்க கூடியதாக உள்ளது. ஸெய்யிதினா, முர்ஷிதினா முஹம்மது நபி (ஸல்) அவர்கள் காதிரிய்யிக்குரிய உத்தரவை பிரதான, குடும்ப கிலாபத் உத்தரவை தம் மருமகன் ஸெய்யிதினா அலிய்யுன் கர்ரமல்லாஹு வஜ்ஹஹூ(றலி)க்கு வழங்கியுள்ளனர்.

ஸெய்யிதினா ஹுஸைன் (றலி) தன் மகன் ஸெய்னுலாப்தீன் (றலி)க்கு பிரதான கிலாபத்தையும் ஷெய்க் ஹஸனுல் பஸரிக்கு குடும்ப வழி கிலாபத்தையும் வழங்கியுள்ளனர். இரு வழி கிலாபத்தை முதல் அறிமுகஞ் செய்துள்ளனர்.

பிரதான கிலாபத்தில் 43ஷெய்களும். குடும்ப கிலாபத்தில் 27 ஷெய்க்களும்(2010) பதிவு செய்யப்பட்டுமுள்ளனர். இமாமுனா ஜுனைத்துல் பஹ்தாதி(றலி) குடும்ப ஸில்ஸிலாவை அப்துர் றஹுமான் யமானி (றலி)க்கும் பிரதான கிலாபத்தை இமாமுனா அபூபக்கரிஷ் ஷிப்லி(றலி)க்கு கொடுத்துள்ளனர். இமாமுனா அப்துர் ரஹுமான் யமானி (றலி) இவர்களிடம் மீண்டும் ஒப்படைக்கின்றனர். இவ்விரண்டும் இரண்டாம் தடவை பிரிந்து சேர்ந்துள்ளன.

குடும்ப வழியில் 13மிடமும் கிலாபத் வழியில்16மிடமும் வகிக்கும் இமாமுனா அபூஸஈதினில் முபாறக் (றலி) கௌதுனா முஹையதீன் ஜீலானி (றலி)க்கு இரண்டையும் வழங்கியுள்ளனர். இவர்கள் தன் மகனுக்கு இரண்டு உத்தரவுகளையும் கொடுத்துள்ளனர். இமாமுனா அப்துர் றஸாக்குல் காதிரிய்யி குடும்ப வழிமுறையை ஷெய்க் அஹமது நஸ்லுல்லாஹி (றலி)க்கும் வழங்கி மூன்றாம் முறையாகப் பிரிந்துள்ளன.

ஷெய்க் றஜபுல் காதிரிய்யி (றலி)ன் வழியில் வந்த குடும்ப கிலாபத் ஷெய்க் மஹ்மூதுல் காதிரிய்யி (றலி) ஷெய்க் அலிய்யுல் காதிரிய்யி (றலி)யிடம் ஒப்படைத்து ஐந்தாவது தடவை சேர்ந்திருக்கின்றன.

ஷெய்க் அலிய்யுல் காதிரிய்யி (றலி) குடும்ப வழியை ஷெய்க் பைஜுல்லாஹில் காதிரிய்யி (றலி)க்கும் பிரதான கிலாபத்தை ஷெய்க் மூஸா கதஸல்லாஹு (றலி)க்கும் வழங்கியுள்ளனர். இவர்களிடமிருந்து பெற்ற குடும்ப வழி காதிரிய்யி ஷெய்க் அப்துல் வாஹித் மௌலானா (றலி) வரைக்கும் ஒன்று சேரவில்லை.

மேல் விளக்கிய வழிமுறைகளை அடிப்படையாகக் கொண்டு ஆராய்கின்ற போது இக்குடும்ப ஸில்ஸிலா குத்புனா ஹல்லாஜுல் மன்ஸூல் (றலி)ன் பிரதான கிலாபத்தோடு இணையப்படுதல் வேண்டும். ஷெய்க் அப்துல் வாஹித் மௌலானா (றலி) அக்கரைப்பற்றுக்கு பலதடவை வருகை தந்திருக்கின்றார்கள். இவ்விரு மஹான்களும் நேரிலும் சந்தித்துள்ளார்கள். ஷெய்க் அப்துல் வாஹித் மௌலானா (றலி) குத்பான அப்துல் மஜீத் மக்கத்தார் (றலி)க்கு கிலாபத் வழங்க உத்தேசித்து பயிற்சியுமளித்ததுள்ளார்களென்பது தெரியக்கிடக்கின்றது.

பெருக்கெடுத்து ஓடும் பிரதான நதி பாய்ந்து வரும் திசையில் குறுக்கிடுகின்ற உயர்ந்த கற்பாறையில் நதிமோதி இரண்டாகப் பிளந்து பாறை கடந்த பின்ஒன்று சேர்ந்து நதிபாய்வதைப் போல் காலத்தின் தேவை கருதி இக் காதிரிய்யி ஸில்ஸிலா பிரிந்தும் சேர்ந்தும் பயணித்து; கொண்டிருகின்றது. இதிலிருந்து இவ்விரு ஸில்ஸிலாக்களும் சத்தி வான்களின் வழித்தொடரை காட்டுகின்ற உண்மையான ஸில்ஸிலா என்பதை உணர்ந்து கொள்ளக்கூடியதாக உள்ளது. இம்மரபு வழியில் ஷெய்க்மார்கள் மக்களை நேர் வழி நடத்திருக்கின்றார்கள். இவர்களே ஸூஃபிஸஞானிகளையும் இறை நேசச் செல்வர்களை உருவாக்கியுள்ளதை ஷெய்மார்களின் வாழ்வியல் சரித்திரங்கள் சான்றுப்படுத்துகின்றன என்பதால் இவர்கள் வழி தொடர்வது நேர்வழியன்றோ!

நபி முஹம்மத் (ஸல்) அவர்களின் குடும்ப ஸில்ஸிலாவில் இறுதியாக உதயமாகும் ஒருவரே மஹ்தி(அலை) அவர்கள். கிலாபத் வழிமுறை ஸில்ஸிலாவில் அறுபத்து மூன்றாவது ஷெய்க்காக மஹ்தி (அலை) இடம் பெறலாம். பரிசுத்த அஹ்லுல் பைத்தின் குடும்பத்தில் பிற்கால மக்களுக்காக வருகின்ற ஒருவரே மஹ்தி (அலை) அவர்கள். இவர்களின் வருகை கியாமத்து அடையாளங்களில் ஒன்றாகும்.

– கியாமத் அண்மிக்கின்ற நேரத்தில் என் குடும்பத்தைச்சார்ந்த ஒருவர் நீதத்தை நிலைநாட்டி நேர்மையான ஆட்சி நடத்துவார். 

– மஹ்தி (அலை) என் பிச்சளத்தைச் சார்ந்தவர், பாத்திமாவின் பிள்ளைகளிலிருந்து உதிப்பவர். (144.ஆதாரம் : மிஷ்காத் 470)

 முஸ்லிம் சமுதாய வரலாற்றில், ஆத்மீக நெறி ஸுஃபித்துவம் என்பது இஸ்லாமியக் கலாசாரத்தின் அதன் வாழ்க்கை முறை இன்றியமையாததான ஓர் அம்சமாக இருந்து வந்துள்ளதையும் அல்லது ஸூஃபியாக்கள் என்றழைக்கப்படும் ‘ஆத்மீக வாதிகள்’ முஸ்லிம் சமுதாயங்களின் அதி கௌரவத்துக்குரிய இறையடியார்களாகவும் வழகாட்டிகளாகவும் இருந்துள்ளார்கள் என்பதைம் குறிப்பிட்டுக் கூறுவதில் எவ்வித ஆச்சரியமுமில்லை.(145. ஆதாரம் : வளம், 2010, பக்-4; கலாநிதி, அல்-ஹாஜ் எம்.எம். தீன் முஹம்மத், இணைப்பீடாபதி இஸ்லாமியப் பல்கலைக்கழகம், கட்டார்).

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *