குத்புஸ்ஸமான் கலீபத்துல் ஹல்லாஜ், அஸ்-ஸெய்யித் அஷ்-ஷெய்க், அப்துல் மஜீத் பின் அப்துஸ்ஸமது ஆலிம் மக்கத்தார் (ஸபீதி அல் யெமனீ) காதிரி, ஜிஸ்தி, றிபாஇ, நக்ஷபந்திய்யி
அவர்கள் குத்புனா பாதீப் மௌலானா அவர்களுடைய நூற்றி ஐம்பதாவது நத்ர் கந்தூரி மலருக்கு வழங்கிய ஆசியுரை.
அல்-அமான்
வபில்லாஹி தவ்ஃபீக்
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்
அக்கரைப்பற்று
12-02-2011
சர்வ உலகங்களையும் ஹக்கைக்கொண்டு படைத்து இரட்சித்துக் காப்பாற்றுகின்ற அல்லாஹ் ஒருவனுக்கே சர்வ புகழும் உண்டாகட்டும், படைப்புகளின் ஆதாரமாய் அமைந்து நிலைபெற்ற எங்கள் இறைத்தூதர் றஸுல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கும் அவர்கள் கிளையார்கள் ஸஹாபாக்கள் மற்றும் உலகம் முடியும் வரை நிலைபெறும் ஔலியாக்கள் அனைவர் மீதும் அருள் உண்டாவதாக.
குத்புனா அஷ்-ஷெய்கு அப்துல்லாஹ் பின் உமர் பாதீப் அல் யெமானி நாயகம் அவர்கள் றஸூல் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களால் நன்மாராயம் கூறப்பட்ட யெமன் நாட்டைச்சேர்ந்தவர் என்பது நினைவு கூறப்படவேண்டியதாகும்.
தனக்கென மட்டும் வாழாது பிறருக்காய் தன்னை அர்ப்பணிக்கும் பண்பினைக் கொண்ட இறைநேசர்கள் பட்டியலில் சேர்ந்தவர் என்பது அவர் இலங்கையில் வாழ்ந்த காலத்தில் செய்த சேவைகள் சான்றாகும். லோகாயத, ஆன்மீக முன்னேற்றத்திற்கு அவர் அளித்த சேவை அக்காலத்தில் வாழ்ந்த கல்விமான்களை சிந்திக்க வைத்தது என்பது ஒன்றே இதற்கு சான்றாகும். தேசிய வீரர் பட்டியலில் இடம் பெற்ற அறிஞர் சித்திலெப்பை இவரால் ஈர்க்கப்பட்டு முரீதாகி இணைந்து செயல்பட்டார் என்பது இங்கு நினைவு கூறப்பட வேண்டியதொன்றாகும்.
யார் அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் கீழ்படிந்து நடகின்றாரோ அவரை அல்லாஹ்வின் அருள் பெற்ற நபிமார்கள், ஸித்தீகீன்கள், ஷுஹதாக்கள், ஸாலிஹீன்கள் என்பவர்களோடு சேர்த்து வைப்பான். இவர்கள் தான் மிக அழகிய தோழர்கள் ஆவார்கள்.
– ஸூரத்துன் நிஸா 69 ( அல்குர் ஆன்)
மிகத்தெளிவான இவ்விறை வசனத்திற்கு தகுதி வாய்ந்தவர்கள் எக்காலமும் இருக்க இதில் குறைகாண முயற்சிப்பவர்கள் தனக்குத்தானே தீங்கிளைத்துக் கொண்டவர்கள் பட்டியலில் சேர்வர் என்பது தெளிவு.
கொழும்பு மாநாகரை நிர்மாணம் செய்த அரபி பாட்சா என்பவரும் பாதிபில் யெமானி நாயகம் அவர்களும் இலங்கைக்கு இற்றைக்கு 130 வருடங்களுக்கு முன் வந்தவர்கள் என்பதைச்சிந்திக்கும்போது இலங்கை மாநாகரின் சகல முன்னேற்றங்களிலும் பங்கெடுத்துக் கொண்ட தியாகிகள் என்பது தெளிவானதொன்றாகும்.
அருள் பெற்ற கஹடோவிட்ட கிராமத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டு வாழ்ந்து கொண்டிருக்கும் குத்புனா பாதிபுல் யெமானி அவர்களின் 150 வது வருடக்கந்தூரி வைபவ நிகழ்வில் வெளியிடப்படும் இந்நினைவு மலருக்கு வாழ்த்துரை வழங்குவதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன். எனக்கு வாழ்த்துரை கூறும் தகுதி இருக்கிறதோ, இல்லையோ இந்நிகழ்வில் என்னை இணைத்து அந்த பாதீபில் யமானி நாயகத்தின் பேரருள் என்று கூறி முடிக்கின்றேன். வஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுகு.
ஹாதிமுல் ஹவாம்,
கலீபத்துல் ஹல்லாஜ்,
அஸ்-ஸெய்யித் அஷ்-ஷெய்க் அப்துல் மஜீத் பின் அப்துஸ்ஸமத் ஆலிம் மக்கத்தார் (ஸபீதி அல்-யெமானி)
(காதிரி, ஜிஸ்தி, றிபாஇ, நக்ஷபந்தி)
பாதீப் மௌலானா நாயகம் அவர்களின் வாழ்க்கை வரலாற்றின் சுருக்கம்;
(தொகுப்பு : MFM பயாஸ் BSc, கஹட்டோவிட்ட)
——-****——-
அல் ஹம்துலில்லாஹ்
அஸ்ஸலாது வஸ்ஸலாமு அலா றஸூலில்லாஹ்
அல்லாஹும்ம ஸல்லி அலாமுஹம்மதின் வ-அலா-ஆலிஹி வஸஹ்பிஹி வஸல்லிம்
முஃமின்களின் உயிரினும் மேலான கண்களின் ஒளியான கருணைக்கடல் முஹம்மது முஸ்தஃபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நெருங்கிய தோழர் ஸித்தீகுல் அக்பர் ஹழ்ரத் அபூபக்கர் ஸித்தீக் றலியல்லாஹு அன்ஹு அவர்கள். எவ்வாறெனில்,
اِلَّا تَنۡصُرُوۡہُ فَقَدۡ نَصَرَہُ اللّٰہُ اِذۡ اَخۡرَجَہُ الَّذِیۡنَ کَفَرُوۡا ثَانِیَ اثۡنَیۡنِ اِذۡ ہُمَا فِی الۡغَارِ اِذۡ یَقُوۡلُ لِصَاحِبِہٖ لَا تَحۡزَنۡ اِنَّ اللّٰہَ مَعَنَا ۚ : سُوۡرَۃُ التَّوۡبَۃِ
“நிராகரிப்போர் அவரை ஊரைவிட்டு வெளியேற்றிய சமயத்தில் (தவ்ர்) எனும் மலைக்குகையில் இருவருள் ஒருவராக அவர் இருந்த ”தோழராகிய அபூபக்கரை நோக்கி ‘நீர் கவலைப் படாதீர்; நிச்சயமாக அல்லாஹ் நம்மோடு இருக்கின்றான் என்று ஆறுதல் கூறியபோதும் அல்லாஹ் அவருக்கு தன்னுடைய சாந்தியை அளித்தான்’ என்று இறைவனாலேயே நற்சான்று பகரப்பட்டவர்.
அதுமட்டுமல்ல “முன்நூற்றி அறுபது வகையான நற்குணங்கள் இருக்கின்றன, அல்லாஹ் தன் அடியார்களின் ஒருவரை சுவனத்தில் புகச்செய்ய நாடுவானாகில் அவற்றுள் ஒன்றை அவரில் அமைத்துவிடுகின்றான்” என்று தாஹா நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறக்கேட்டு அடக்கத்துக்கு அணிகலனாகத் திகழும் ஹழறத் அபூபக்கர் ஸித்தீக் றலியல்லாஹு அன்ஹு அவர்கள் “பெருமானே ! அவற்றுள் ஒன்றையேனும் தான் அடையப்பெற்றுள்ளேனா? ” என்று ஏக்கத்துடன் கேட்டார்கள். இன்முகம் காட்டிய நன்னபி ஸல்லலாஹு அலைஹிவஸல்லம் அவர்கள், “ அபூபக்கரே! உம்மிலே அவை அனைத்தையையும் அடையப்பெற்றுள்ளீர். எனினும் அவற்றில் மேலானது வள்ளன்மை” என தாஹா நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களினால் திருச்சான்று பகரப்பட்வர் நன்னபித்தோழர் ஹழரத் அபூபக்கர் ஸித்தீக் றலியல்லாஹு அன்ஹு அவர்கள்.
இன்னும் ஹழ்ரத் இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் இறைவனின் கட்டளைப்பிரகாரம் கஃபாவை நிர்மாணித்து; ஸஃபா மலைகுன்றின் மீதேறி நின்றவர்களாக நாமங்கு திசைகளையும் நோக்கியவர்களாக ஹஜ்ஜுக்கு வரும்படி அழைப்பு விடுத்தபோது லப்பைக் லப்பைக் ( அடிபணிகிறோம்) என்று முதலாவதாக கூறியவர்கள் யெமன் தேசத்தவர்கள்.
மெய்நபியின் பேரன்புக்காதலர் ஹழரத் உவைஸுல் கர்னீ றலியல்லாஹு அன்ஹு அவர்கள் வாழ்ந்ததும் இதே யெமனில் தான் இன்னும் அல்லாஹும்ம பாரிக் லனா பீ யெமனினா என்று தாஹா நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களால் பர்க்கத்துக்காக துஆ செய்யப்பட்டதும் இதே யெமனுக்குத்தான்.
ஆம் இத்தகைய சிறப்புக்களை உடைய யெமனிலே ஹழரத் அபூபக்கர் ஸித்தீக் றலியல்லாஹு அன்ஹு அவர்களின் வழித்தோன்றலிலே பிறந்தவர்கள் தான் இலங்கயிலே கம்பஹா மாவட்டத்தின் கஹட்டோவிட்டவில் குடிகொண்டு ஆன்மீக ஆட்சிபுரிந்து கொண்டிருக்கின்ற பாதீப் மௌலானா என அன்போடு அழைக்கப்படும் அஷ்-ஷெய்கு அப்துல்லாஹ் பின் உமர் பின் அப்துல்லாஹ் பின் இவழ் அப்துல் காடிர் றலியல்லாஹு அஸ்-ஸித்தீகுல் யெமனிய்யி அவர்கள். யெமனின் முகாவா எனும் கிராமத்திலே அப்துல் காதிர் பாதீப் மௌலானா நாயகம் அவர்களின் குடும்பத்திலே பிறந்தார்கள்.
முற்று முழுதாக இறைவைனைப் பயந்து வாழும் இறை நேசர்களுக்கு மிருகங்களும் பறவைகளும் மற்றுமுண்டான இறைவனின் படைப்புகளும் பணிந்து நடப்பது என்பது ஒன்றும் ஆச்சரியப்படக்கூடிய விடயமல்ல. இந்த வகையில் மௌலானா நாயககம் அவர்களின் முன்னோரான உமர்பாதீப் றலியல்லாஹு அன்ஹு அவர்கள் காட்டிலே விறகு வெட்டி வரும் போது அந்த விறகை காட்டிலே இருக்கும் ஓநாய்கள் ஊருகு சுமந்துவந்து கொடுகுமாம். இதுவே அன்னாருக்கு பாதீப் என்ற சிறப்புப் பெயர் வருவதற்குக் காரணமாக இருந்தது
மேலும் மௌலானா நாயகம் அவர்கள் சிறிய காலங்களில் அதிக அமல் இபாதத்து. செய்யக்கூடியவர்களாகவும் பெற்றோருக்கு முன் பணிந்து நடக்கக் கூடியவர்களாகவு இருந்தார்கள்.
மௌலானா நாயகமவர்களைப்பற்றி ஹதிய்யது ஸரந்தீப் ஃபீ மத்ஹி அப்துல்லாஹி பாதீப் றலியல்லாஹு அன்ஹு என்ற அன்னாரின் புகழ் பாடும் மனாகிப் கிதாபிலே இலங்கையின் அக்குரணையைச் சேர்ந்த அல்லாமத்துல் முமஜ்ஜத் அச்-ஷெய்கு முஹம்மத் லெப்பை ஆலிம் அவர்களின் தன்மைகளைப் பற்றி விவரிக்கும் போது அவரது கொள்கை அஷ்-அரீயாகவும் தரீக்கா காதிரிய்யாவாகவும் ஷாபிஈ மத்ஹபை பின்பற்றக்கூடியவராகவும் இருந்தார்கள் என்று விவரிக்கின்றார்கள்.
கல்வி
தன் ஆரம்பக் கல்வியை தம் சொந்த ஊரிலே கற்றுத்தேறியபின் உயர் கல்வியைப் பெருவதற்காக அக்காலத்திலும் சிறந்து விளங்கிய எகிப்தின் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த அல்=அஸ்ஹர் சர்வ கலாசாலைக்கு அன்னாரின் குடும்பத்தினரால் அனுப்பி வைக்கப்பட்டார்கள்.
அங்கு சென்ற மௌலானா நாயகமவர்களுக்கு, இன்றும் கூட அதிகமான அரபுக்கலாசாலைகளில் படிப்பித்துக் கொடுக்கும் நூற்களின் ஆசிரியரான இமாம் பாஜூரீ றலியல்லஹு அன்ஹு அவர்கள் போன்ற சிறந்த ஆசிரியர்களிடம் கல்வி கற்கும் பேறு அன்னாருக்குக் கிட்டியது.
நல்லறிவு வாய்க்கப் பெற்று சிறன்டதொரு அறிஞராக வரவேண்டும் என்ற மௌலானா நாயகமவர்கள் அறபு மொழியிலே பாண்டித்தியம் பெற்றது மட்டுமல்லாது தஸவ்வுஃப், ஹதீஸ், இஸ்லாமிய நாகரிகம் ஆகிய தூரைகளில் பட்டப்படிப்பை பூர்த்தி செய்து சிறப்புடன் விளங்கினார்கள். அத்தோடு அரசியல், பொருளியல், சமூகவியல் போன்ர துறைகளிலும் தேரி பல்களை வித்துவானக திகழ்ந்தார்கள்.
ஹிழ்ர் அலைஹிஸ்ஸலாம் அவர்களைச்சந்தித்தல்
ஒரு நாள் மௌலானா நாயகமவர்கள் கடலோரம் வழியாகப் பிரயாணம் செய்து கொண்டிருகின்றார்கள். அப்போது நபி ஹிழ்ர் அலைஹிஸ்ஸலாம் அவர்களைச் சன்திக்கின்றார்கள்.அவர் நாயகமவர்களை வர்வேற்று முஸாபஹாச்செய்து நீண்ட நேரம் அலவலாவியபின் எனது சிறிய மகனே நீர் இன்று நான்கு அவ்தாதுகளில் எங்களில் ஒருவராகக் கணிக்கப்படுகின்றாய்.
என்று நன்மாறாயம் கூறினார்கள். அதனைத் தொடர்ந்து இருவரும் இரண்டு ரக்-அத்து தொழுது ஸலாம் கொடுத்தார்கள். அவர்கள் அப்போது இருந்தது மக்காவின் ஹரமுடைய எல்லையாகவும் தொழுதது கஃபாவாகவும் காணப்பட்டது. கஃபாவிலே நபி ஹிழ்ர் அலைஹிஸ்ஸலாம் மற்றும் அது போன்றவர்களும் மௌலானா நாயகமவர்களை வரவேற்று வாழ்த்துத் தெரிவித்தார்கள். இதன் பின்னர் நபி ஹிழ்ர் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் எனது சிறிய மகனே உனது பயணத்தை மக்காவை நோக்கி ஆக்கிக் கொள் என நன்மாறாயணம் கூறினார்கள்.
இந்த நிகழ்வுகள் எல்லாம் மறைந்த பிறகு தன்னுடைய வீட்டுக்கு வந்த மௌலானா நாயகமவர்கள் தனது தாயின் கேள்விக்கு விடை பகருமுகமாக நடந்த சம்பவங்களை அவர்களுக்கு விவரித்தார்கள்.
மக்கா பயணம்
மக்கா முகர்ரமாவை அடைந்த மௌலானா நாயகமவர்கள் தனது நீண்ட நாள் ஆசையாக இருந்த பிரகாரம் புனிதமிக்க அஹ்லுல் பைத்தைச்சேர்ந்த அக்காலத்திலே மக்கமா நகரிலே பிரபல்யம் பெற்ற பெரியாரான தன்னுடைய ஷெய்க் மௌலானா அஸ்-ஸெய்யித் முஹம்மத் பின் அஸ்-ஸெய்யித் முஹம்மத் உஸ்மானுல் மீர்கனிய்யி றலியல்லாஹு அன்ஹு அவர்களைக் கண்டுகொள்கிறார்கள். பின்னர் அவர்களிடம் மஹ்பூபே சுப்ஹானி மஹ்சூகே றஹ்மானி குத்புல் அக்தாப் கௌதுல் அஃழம் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி றலியல்லாஹுத்தஆலா அன்ஹு அவர்களின் வழி நிற்கும் பை-அத் கிலாபத்தைப் பெற்றார்கள்.
தம்மீது சுமத்தப்பட்ட மக்களுக்கு ஆன்மீக பரிபக்குவத்தை அடையச்செய்யும் பொறுப்பினை சிறப்புடன் ஏற்று நடாத்தும் பொருட்டு மக்கமாநகரிலிருந்தே தனது பணியை ஆரம்பிக்கவும் செய்தார்கள்.
நாயகமவர்களின் குரு நாதர் அவர்கள் தன்னுடைய பதினொன்றாவது வயதிலே, கஃபாவிலே ஆரம்பம் முதல் இறுதிவரை தஜ்வீத் முறைப்படி குர்-ஆனை ஒதித்தறாவீஹ் தொழுவித்த போது அவரது தந்தை அல்குத்புல் அழீம் அஸ்-ஸெய்யித் முஹ்ம்மத் உஸ்மானுல் மீர்கனிய்யி றலியல்லாஹு அன்ஹு அவர்கள் உள்ளிட்ட பெரும் அவ்லியாக்கள் மற்றும் கண்ணியமிக்கவர்களால் அல்லாஹ்வின் நெருங்கிய நல்லடியாராக வருவார் என்று நன்மாறாயம் கூறப்பட்டிருந்ததை இங்கு கவனிக்கத்தக்கதாகும். ( மனாகிப்- பக்கம் : 32)
மதீனா பயணம்
புனிதமிகு ஹஜ்ஜுக்கடைமையை நிறைவேற்றிய பின் நமக்கெல்லாம் செய்யிதும் ஆகாவுமாகிய முஃமிங்களின் உயிரினும் மேலான அஹ்மது நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களை ஜியாரத் செய்வதற்காக சென்றார்கள்.
மதீனா முனவ்வராவிலே மன்னர் மஹ்மூத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களை ஜியாரத் செய்து பெற்ற பேரின்பத்தை தனது வாழ்நாளிலே இறுதிவரை நினைவு கூறக்கூடியவர்களாக நாயகமவர்கள் இருந்தார்கள்.
தாயகம் திரும்புதலும் தாயின் மறைவும்
மக்காவிலே மூன்று வருடங்களாகத் தங்கி கல்வத், நப்ஸை அடக்குதல் அடங்களான பயிற்சிகளிலே ஈடுபட்டுக் கொண்டிருந்த மௌலானா நாயகமவர்கள் தனது குருநாதர் அஸ்-ஷெய்க் முஹம்மத் உஸ்மானுல் மீர்கனிய்யி றலியல்லாஹு அன்ஹு அவர்களின் உத்தரவு கிடைக்கப் பெற்றதும் மக்காவிலிருந்து தனது தாயகம் திரும்புகின்றார்கள். அங்கு சென்ற மூன்றாம் நாள் தனது தாய் தாருல் பனாவைவிட்டு தாருல் பகாவினை அடைகின்றார்கள். இன்னாலில்லாஹி வ-இன்னா இலைஹி றாஜிஊன்.
மார்க்கப்பணி
தொடர்ந்து வந்த மூன்றாண்டு காலப்பகுதியில் தனது சொந்த ஊரிலே தங்கி மக்களுக்கு நல்லவிடயங்களைக் கூறூவதில் ஈடுபடலானார்கள். மௌலானா நாயகமவர்களின் உபதேசங்களைக் கேட்கக்கூடிய மக்களின் கண்கள் பனிக்குமளவு அவரது நல்லுபதேசங்கள் இருந்தன.
மேலும் உலகை ஆசிக்காதவர்களில் மிகப் பெரியவராகவும் சிறந்த கொடைவள்ளலாகவும் மௌலானா நாயகமவர்கள் இருந்தார்கள். அந்தக்காலத்திலே யெமனிலே காணப்பட்ட அறிவாளிகள் மதிக்கும் நிலையில் மௌலானா நாயகமவர்கள் காணப்பட்டார்கள். அறிவையும் ஸுஹ்தையும் ஒன்றாகச்சேர்த்தால் அது மௌலானா நாயகம்தான் என்னும் அளவிற்கு அன்னார் சிறப்புற்று விளங்கினார்கள். ( மனாகிப் : பக்கம் -35)
இந்தியாவுக்கான விஜயம்
இலங்கையில், காலி சோலையில் குடி கொண்டிருக்கும் காதிரிய்யதுன் நபவிய்யாத்தரீக்காவின் செய்குமார்களில் ஒருவரான அஸ்-ஸெய்யித் முபாரக் மௌலானா நாயகமவர்களுடன் ஒன்றாக யெமனிலே இருந்து வந்தபோதிலும் பாதீப் மௌலானா நாயகமவர்கள் முதலிலே இந்தியாவுக்குச்சென்றார்கள்.
இந்தியாவிலே மலபாரிலே சிறிது காலம் மார்க்கப் பிரச்சாரம் செய்ததுடன் சங்கை பொருந்திய வலிமார்களில் ஒருவரான அஸ்-ஸெய்யித் அப்துர் ரஹ்மானுல் ஜிப்ரி மௌலானா றலியல்லாஹு அன்ஹு அவர்களைச் சந்தித்து அலவலாவக் கூடியவர்களாவும் இருந்தார்கள்.
பதினான்கு தரீக்காக்களுக்கு தர்பியத்துக் கொடுக்கக் கூடியவராக ஒருந்த மௌலானா நாயகமவர்கள் ஒரு தடவை இந்தியாவில் லக்னூருக்கு வருகிறார்கள். பின்னர் முராத்- ஆபாத் என்ற என்ற ஊருக்குப் போகப் ஆயத்தமாகும் போது, அவர்களுடைய முரீதீன்கள் நாயகமவர்களைத்தடுத்தார்கள். அங்கே வாந்திபேதி (வபா) பரவி அதிகமானவர்கள் மரணத்தைத்தழுவிக் கொண்டிருக்கின்றார்கள் என்று சொன்ன போது, நாயகமவர்கள் ஒரு பேப்பரிலே தன்னுடைய பெயரை எழுதி அதைக் குறித்த ஊரிலே ஒரு உயர்ந்த இடத்திலே தொங்கவிடும்படி பணித்தார்கள். என்ன ஆச்சரியம் இறைவனின் நாட்டப்படி அந்தக் கொடிய நோய் அந்த ஊரிலிருந்தே மறைந்தது..
( மௌலானா நாயகமவர்கள் இதே செயலை இது போன்ற பல இடங்களிலும் செய்யக்கூடியவர்களாக இருந்தார்கள்- மனாகிப் – பக்கம் : 35)
இலங்கைத் திரு நாட்டிற்கான வருகை.
அறிஞர் சித்தி லெவ்வை இலங்கை முஸ்லிம்களின் கல்வி வளர்ச்சிக்காப் பாடுபட்டுக் கொண்டிருந்த வேளையிலேயே மௌலானா நாயகமவர்கள் இலங்கைக்கு வருகைதந்தார்கள். மௌலானா நாயகமவர்களினதும், சம காலத்தில் எகிப்திலிருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட அரபி பாச்சாவினதும் வருகையானது அறிஞர் சித்திலெப்பைக்கு பெரும் மன உறுதியை அளித்தது.
மருதானை ஸாஹிராக் கல்லூரி, மற்றும் இது போன்ற பல கலைக்கூடங்கள் தோன்றுவதற்கு இவர்களது முயற்சியும் அறிஞர் சித்தி லெவ்வைவின் அனுசரனையும் காரணமாக இருந்தது. மேலும் அறிஞர் சித்திலெவ்வையினால் வெளியிடப்பட்ட “முஸ்லிம் நேசன்” என்ற பத்திரிகை வெளியீட்டின் பின்னணியிலும் மௌலானா நாயகமவர்கள் இருந்தார்கள்.
தஃவாப் பணி
இலங்கைத்திரு நாட்டின் கொழும்பு மாநகரிலே ஆரம்பித்த மௌலானா நாயகமவர்களின் தஃவாப் பணியானது, பின்பு நாட்டின் பல பாகங்களுக்கும் வியாபித்ததைத் தொடர்ந்து அது பல்லாயிரக் கணக்கானோரை நேர்வழியின் பால் கொண்டுவருவதற்குக் காரணமாக இருந்தது.
கொழும்பிலே மருதானை, புதிய சோனகத்தெரு, கொள்ளுப்பிட்டி போன்ற இடங்களிலும் கேகாலை மாவட்டத்திலே மாவனல்லை, ஹெம்மாதகம, தல்துவை, நாப்பாவளை ஆகிய இடங்களிலும் மத்திய மாகாணத்திலே கண்டி மற்றும் கம்பளையிலும் மேலும் ஊவா மாகாணத்திலே பதுளை, பரணகமை போன்ற இடங்களிலும் உள்ளடங்களாக பூகொடை, திஹாரிய, உடுகொட, ஓகொடபொல மற்றும் கஹடோவிட்ட என தன்னுடைய தஃவாப் பணியை தீவிரமாகச்செயற்படுத்தினார்கள்.
அன்று இலங்கையின் நான்கு கோறளைகளுக்கும் விஜயம் செய்த மௌலானா நாயகமவர்கள் நீண்ட காலம் இருந்த ஹெம்மாதகமையில் இருந்து விடைபெறும் தருவாய், ஊர்மக்கள் அனைவரையும் ஒன்றுகூட்டி ஒரு உபதேசம் செய்தார்கள். அந்த உபதேசத்திலும் கூட தனது வழமையான பாணியில் தொழுகையை நிலைநாட்டுவது பற்றி பேசிக்கொண்டிருக்கும் போது தொழுகையை நிலைநாட்டுபவனுக்குத்தான் இறைவன் பரக்கத்துச் செய்கின்றான். எவன் ஒருவன் ஐந்து நேரத்தொழுகையை விடுகின்றானோ அவனது உலக ஆகிரா சம்பந்தமான பரக்கத்து இல்லாமலாக்கப்படும் என்ற தொணிப்பொருளில் உரையாற்றினார்கள். உபதேசத்தின் இடை நடுவேகுறுக்கிட்ட என்பது வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர், நான் இதுகாலவரை பள்ளியிலே ஸஜதா செய்தது கிடையாது. ஆனால் எனது பயிர் பச்சைகளில் குறைவு இல்லை. கால்நடைகளில் நல்ல பரக்கத்து காணப்படுகின்றது. அவற்றிலிருந்து பால் கிடைப்பதிலும் எந்தக் குறைவும் இல்லை என்று இருமாப்புடன் கூற; ஜலாலியத்தி நிலையை அடைந்த நாயகமவர்கள், நான் சொன்னது குர்-ஆனிலும் ஸுன்னாவிலும்
உள்ளதையே. இது பொய்யாக இருக்குமாக இருந்தால் உமக்கு இறைவன் பரக்கத்துச் செய்யாதிருப்பானாக என்று கூறினார்கள். ஆனால் மூன்று நாட்கள் கூடச்செல்லவில்லை.அவனது விவசாயம் அழிந்தது. பயிர் பச்சைகள் நாசமாயின. கால்நடைகளின் பால் மடிகள் வறண்டு போயின. பின்னர் அந்த முதியவர் தௌபாச்செய்து மீண்டார். இன்றைக்கும் அந்த விவசாய நிலம் பிரயோசனம் அற்றதாக இருக்கின்றது. ( மனாகிப் – பக்கம் : 40)
அல்லாஹுத்தஆலா மௌலானா நாயகமவர்களின் பரக்கத்துக் கொண்டு எமக்கும் தொழுகையில் தாயிமாய் இருப்பதற்கு அருள் பாலிப்பானாக ! ஆமீன்.
மற்றொரு சந்தர்ப்பத்தில், ஒரு அநீதியாளன் ஒருவனின் காளைமாடு ஒன்று மக்கள் போய்வரக்கூடிய பாதையில் கட்டப்பட்டிருந்தது. இதனால் பல காரணங்களையும் கருத்திற்கொண்டுஅந்த மாட்டை வேறொரு இடத்தில் கட்டுமாறு நாயகமவர்கள் தூது அனுப்பினார்கள். அதற்கு கட்கடுத்த அந்த அநீதியாளன்: நான் கட்டவும் மாட்டேன் திருப்பவும் மாட்டேன் என்று கூறினான். பின்னர் அந்த மாடு செத்துக்காணப்பட்டது. ( மனாகிப் : பக்கம் – 44)
மௌலானா நாயகமவர்களின் கிதாபுகள்
மௌலானா நாயகமவர்கள் உயிர் வாழ்ந்த காலத்திலும் இன்று போல், கண்மணி நாயகம் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் பெற்றோரைச் சந்தேகக்கண்கொண்டு பார்க்கக் கூடிய நிலை காணப்பட்டபோது, துஹ்பதுல் முஸ்லிமீன் ஃபீ அபவை ஸெய்யிதில் முர்ஸலீன்” என்ற பத்வா நூலை வெளியிட்டதன் மூலம் அந்த சந்தேகத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தார்கள்.
மௌலானா நாயகமவர்கள் அஸ்றாருல் பதீஅஃ ஃபித்தஜல்லிய்யாத்திர் ரஃபீஅஃ, வத்துரருல் பாஃகிரா ஜவாதி, ருஃயதில்லாஹி ஃபில் ஆகிரா, வமிஃராஜுஸ்ஸலிகீன் இலா ஹழ்ரத்தி றப்பில் ஆலமீன் உள்ளிட்ட இன்னோரன்ன பல நூல்களை எழுதியபோதும், “ஸுரூருல் முகர்ரிபீன் ஃபீ ரத்தில் மஹ்ஜூபீன்” என்ற தலைப்பிலே வஹ்ஹாபிகளுக்கு எதிராக எழுதிய நூல் மிகவும் பிரசித்திபெற்றது.
மேலும் மௌலானா நாயகமவர்கள் தனது தஃவாப் பணிக்காக பல ஊர்களிலும் தக்கியாக்களை அமைத்து அவற்றை மையமாக வைத்து தீன் பணி மேற்கொண்டார்கள்.
கஹட்டோவிட்டவுக்கான விஜயம்
இலங்கையின் பல பாகங்களுக்கும் விஜயம் செய்த மௌலானா நாயகம் அவர்கள் இறுதியாக இயற்கை எழில் ததும்பும் கஹட்டோவிட்டாவினை அடந்தார்கள். அக்கிராம மக்களின் விருந்தோம்பும் பண்பை மெச்சினார்கள். பின்னர் கஹட்டோவிட்ட பெரிய பள்ளிவாசலுக்கு அண்மையில் ஒரு நிலத்தை வாங்கி அதிலே தக்கியா ஒன்றை அமைத்து தமது பணியை இனிதே தொடர்ந்தார்கள்.
தங்களைப் பின்பற்றும் முரீதீன்களும் முஹிப்பீன்களும் உலக இன்பங்களைக் கண்டு மதிமயங்காது , சைத்தானின் ஊசலாட்டங்களுக்கு உட்பட்டு ஹக்கை நோட்டமிடுவதை மறக்காதிருப்பதற்கான ஒரு மிகப்பெரும் பயிற்சியாக நாள்தோரும் மற்றும் வாரந்தோரும் ஓதுவதற்கு ஔறாதுகளையும் ராதீபையும் தொகுத்துத் தந்திருக்கின்றார்கள்.
குர்-ஆன் ஹதீஸிலிருந்து தேர்ந்து எடுக்கப்பட்ட வசனங்களைக்கொண்டு அமைக்கப்பெற்ற “ராதீபுல் ஜீலானி”யில் திக்ர், அவ்ராத், சலவாத், தஸ்பீஹ், இஸ்திஃபார் மட்டுமல்லாது ஆன்மீக, இலௌகீக, இம்மை, மறுமைத் தேவைகளைக் கோரிப்பிரார்த்திக்கும் துஆவும் அமையப் பெற்றிருக்கின்றமை அதன் சிறப்பம்சமாகும்.
அன்று தொடக்கம் நாட்டிலே எவ்வளவு பெரிய குழப்பங்களும் பிரச்சினைகளும் காணப்பட்ட காலங்கள் அடங்கலாக இன்றுவறைக்கும் இறைவனின் உதவி கொண்டு ஒவ்வொரு வெள்ளி இரவும் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் புகழ்பாடும் அஸ்ராருர்-ரப்பானிய்யா மௌலிது மஜ்லிஸும் மௌலானா நாய்கமவர்களினால் கோர்வை செய்யப்பட்ட “ராதீபுல் ஜீலானி”யும் கஹட்டோவிட்டவில் அமையப்பெற்றிருக்கும் அவரது தக்கியாவிலே தவறாது ஓதிவரப்படுகின்றது.
( அஸ்ராருர் ரப்பானியா மௌலிதானது மௌலானா நாயகம் அவர்களின் ஷெய்காகிய அஸ்-ஸெய்யித் முஹம்மது உஸ்மானுல் மீர்கனிய்யி றலியல்லாஹு அன்ஹு அவர்களினால் கோர்வை செய்யப்பட்டது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்).
கஹட்டோவிட்ட பாதீபிய்யாத்தக்கியாவிலே றமழான் இரவுகளில் நடைபெறும் வித்ரியா, ஹிஸ்பு மற்றும் நோன்புப் பெருநாள் இரவுகளிலே ஃபித்ரா விநியோகித்தல் என்பன இன்று ஒரு நூற்றாண்டையும் கடந்தும் வெகு சிறப்பாக நடைபெற்றுவருகின்றன என்றால் அது மிகையல்ல.
வலிகள் கோமான் குத்புல் அக்தாப் கௌதுல் அஃழம் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி றலியல்லாஹு அன்ஹு அவர்கள் பேரில் தனது தாயாரினால் நடாத்திவரப்பட்ட நத்ர் கந்தூரியை, அக்கம் பக்கத்துக் கிராமக்களுடன் தூரத்துக் கிராம மக்களையும் ஒன்றிணைத்து சகோதரத்துவத்தினை வளர்த்துக் கொள்ளும் நோக்குடன் ஆண், பெண் அனைவரும் இஸ்லாமிய வரையறைகளுக்கு உட்பட்டதாகக் கலந்துகொள்ளூம் விதமாக நடாத்தினார்கள்.
அவரால் ஆரம்பிக்கப்பட்ட இவ்வைபவம் இன்று ஒன்றரை நூற்றாண்டையும் நிறைவு செய்து வெகுசிறப்பாக நடைபெற்றுவருகின்றது.
ஆன்மீகத்துறைக்கு மட்டுமல்லாது இலௌகீகத் துறைக்கும் வழிகாட்டிய நாயகமவர்கள் மல்யுத்தம், சிலம்படி போற தற்காப்புக் கலைகளுக்கும் தங்கள் முரீதீன்களுக்கு ஊக்கமளித்தார்கள்.
அவ்லியாக்களிலே அவுதாதுகளின் அந்தஸ்த்தைப் பெற்று தனது வாழ்நாள் முழுவதும் தீனுக்காகவும் கல்விக்காகவும் உழைத்த மௌலானா நாயகமவர்கள் ஹிஜ்ரி ஹிஜ்ரி 109 ஜமாதுல் ஆகிர் மாதம் பிறை 14ல் ( 14-01-1982) வியாழக்கிழமை அஸருடைய நேரத்திலே வஃபாத்தாகி அவரால் தனது முரீதீன்களுக்காக ஒதுக்கப்பட்ட இடத்திலேயே நல்லடக்கம் செய்யப்பட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ-இன்னா இலைஹி றாஜிஊன்.
அன்னார் உயிறோடு இருக்கும் போது போலவே, அவரது வபாத்தின் பின்னரும் பல கராமாத்துக்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.
அன்னாரின் வபாத்தின் பின்னர் பைத்தியம் பிடித்த ஒருவர் பலவாறான மருத்துவங்களும் பலனளிக்காத்தால் தர்காவிலே தரிக்க வைக்கப்பட்டார். நாட்கள் நகர்ந்தன. மௌலானா நாயகம் அவர்கள் கனவிலே தோன்றி ஓதி வருவதற்கு விர்துகளைக் கொடுத்தார்கள். பின்னர் அந்த விர்துகளை ஓதி அவர் சுகம் பெற்றார்கள் என்ற சம்பவம் அன்னாரின் புகழ் கூறும் மனாகிப் கிதாபிலே பதிவாகியுள்ளது.
தனது வாழ்நாளிலே மஃரிபாவுடைய விடயங்களை குறிப்பிட்ட ரு சிலரிடம் மாத்திரமே கதைக்கக்கூடியவர்களாக அன்னார் இருந்துள்ளார்கள். அதிலும் குறிப்பாக மௌலானா நாயகமவர்களின் காதிமாக இருந்து அவரது பக்கத்திலேயே அடக்கம் செய்யப்பட்டவரான அல்-ஆலிம் அல்-ஹாஜ் முஹம்மது மஃஃதூம் பின் முஹம்மது லெப்பை (கஹட்டோவிட்ட) அவர்களிடம் வேறு யாருக்கும் கூறாத ஆன்மீக இரகசியங்களைக் கூறியுள்ளார்கள். ( மனாகிப் : பக்கம் -24)
யா முஹ்யித்தீன் அஹ்யகல்பீ பினூரி மஃரிஃபத்திக்க அபதன் கமா துஹ்யித்தீன்.
நாயகமவர்கள் வாழும் காலத்திலும் மறைந்த பின்னரும் மக்களின் பல்வேறுபட்ட தேவைகளை நிறைவேற்றியவன்னமுள்ளனர். நற்குணத்திலே சிறந்தவர்களாகவும் தோற்றத்திலே அழகானவர்களாகவும் இருந்ததுமட்டுமல்லாது மக்களுக்கு அதிக இரக்கம் காட்டக்கூடியவர்களாகவும் இருந்தார்கள். மென்மையும் தனிமையை அதிகம் விரும்பும் பண்பும் அவரோடிணைந்து காணப்பட்டன.
பணிவு, வெட்கம், இரக்கம், கொடைகொடுக்கும் தன்மை என்பன அன்னாரின் குணங்களாகக் காணப்பட்டன. மிஸ்கீன்களுடன் அதிகம் உட்காரக்கூடியவர்களாக இருந்தார்கள். பணக்காரர்களை அவர்களின் பணத்துக்காக கண்ணியப்படுத்தமாட்டார்கள் மேலும் ஏழைகளை அவர்களின் ஏழ்மைக்காக புறக்கணிக்கவும் மாட்டார்கள். அல்லாஹ்வுக்காகவேண்டியே கோபப்படக்கூடியவர்களாக இருந்தார்கள்.
அதிகமான உயரமும் இல்லாமல், அதேவேளை அதிகமாகக் குட்டையாகவும் இல்லாமல் நடுத்தரமான உயரம் உடையவர்களாக இருந்தார்கள். அவர்கள் செம்பட்டை நிறத்தில் இலேசான பக்கவாட்டிலான தாடியைஉடையவர்களாக இருந்தார்கள். மேலும் அன்னாரின் வயிறும் நெஞ்சும் ஒரே நேராக இருந்தது.
அல்லாஹுத்தஆலா அன்னாரின் பரக்கத்துக் கொண்டு ஈருலகிலும் நம் அனைவருக்கும் அருள் பாலிப்பானாக. ஆமீன்.
பின்னிணைப்பு (அந்நத்ர் 150வது நினைவு மலரிலிருந்து….)
கஹட்டொவிட்டவுக்கான வருகை
ஒரு நாள் கம்பளையிலிருந்து புகைவண்டியில் கொழும்புக்குப் போகும் வழியில் வியாங்கொடை புகையிரத நிலையத்தில் இறங்கி நிட்டம்புவவிற்கு வந்தார்கள். அஸர் தொழுகைக்காக இடம் தேடிக்கொண்டிருக்கும் வேளையில் நிட்டம்புவயில் ஒரு முஸ்லீமுக்குரிய கடையொன்று இருப்பதாக அறிந்து அந்தக் கடைக்குச் சென்று அறபு நாட்டிலிருந்து வந்திருக்கும் ஒரு பெரியாருக்கு வசதி செய்து தரமுடியுமா எனக் கேட்டார்கள். கடையிலிருந்தவர்கள் இப்போதைக்கு முடியாது எனக்கூற அவ்விருவரும் திரும்பிச் செல்லுலம் வேளையில் கடையின் உள்ளிருந்து அவதானித்துக் கொண்டிருந்த அஸன் மீரா லெவ்வை மத்திச்சம் என்பவர் ஓடோடிச்சென்று அவ்விருவரையும் அழைத்து வந்து அஸர் தொழுகைக்கான வசதியை செய்து கொடுத்தார். அஸர் தொழுகை முடிந்ததும் வந்த இருவரையும் உபசரித்து அவர்கள் பற்றி விசாரித்தார். தாங்கள் தேடிப்போய் சந்திக்கவிருந்த பெரியாரே தம் கடமைக்கு வந்திருப்பதாக அறிந்து மட்டில்லா மகிழ்ச்சியடைந்த அஸன் மீரா லெவ்வை மத்திச்சம் மௌலானா நாயகத்தைக் கஹட்டோவிட்டாவுக்கு அழைத்துச் சென்றார்கள். மௌலானா நாயகம் அவர்கள் ஊர் மக்களால் வரவேற்கப்பட்டார்கள். கஹட்டோவிட்டாவில் தங்கிய மௌலானா நாயகம் அவர்கள் பெரிய பள்ளிவாசலுக்கு அருகே ஒரு சில நிலத்தை வாங்கி தக்கியா ஒன்றையும் அமைத்தார்கள். அவர்களால் அமைக்கப்பட்ட தக்கியாவையும், அசையும், அசையாப் பொருட்களைப் பரிபாலிக்கவும் பேணிப்பாதுகாக்கவும், அவர்களின் சிஷ்யர்களான பின்வரும் பெயர் கொண்டவர்கள் மௌலானா நாயகம் அவர்களால் நியமனம் செய்யப்பட்டார்கள். இவர்கள் மர்ஹூம்களான அஹ்மது லெவ்வை சுலைமான் லெவ்வை, ஹஸன் மீரா லெவ்வை மத்திச்சம், உதுமா லெவ்வை மத்திச்சம், உமர் லெவ்வை மத்திச்சம் ஆகியோர்களாவர்.
அவர்களால் வெளியிடப்பட்ட நூல்களில் பெயர்ப்பட்டியல் பின்வருமாறு;
- அத்துரருல் பாகிராத் ஃபீ ஜவாஸி ருஃயதில்லாஹி பில் ஆகிறா.
- அஸ்ஸெய்புல் மஸ்லூல் ஃபீ றத்தில் மஸாமீரி வத்தபூல்
- மஃதினுஸ் ஸுரூர் அல்முன்.கிது மினல் ழுலுமாத்தி இலந்நூர்
- றியாழுல் ஜினான்
- றிஸாலத்துல் அத்கார்
- ஸுரூருல் முகர்ரபீன் பீ றத்தில் மஹ்ஜூபீன் ( வஹாபிகளுக்கு எதிரானது)
- நஸீமுன் நஜ்தி பீ றத்தி முன்.கிரில் மஹ்தீ
இது போன்ற இன்னும் பல அறபு மொழியிலான நூல்களையும் இயற்றித் தந்துள்ளார்கள்.
இது போன்று மௌலானா நாயகம் அவர்களின் வபாத்துக்குப் பின் அவர்கள் பேரிலான புகழ் பாடல்களும், இறங்கற் பாடல்களும் பல உலமாக்களால் இயற்றப்பட்டன. அக்குறனையைச் சேர்ந்த அல்.ஆலிம் முஹ்யித்தீன் அப்துல் காதிர் இப்னுன் ஆலிமில் மர்ஹூம் அவர்கள் ஹதீய்யத்துஸ் ஸரந்தீப் என்ற மனாகிபை இயற்றியுள்ளார்கள். இதேபோன்று கொழும்பைச் சேர்ந்த அப்துரஹ்மான் இப்னு ஹகீம் மீரான் என்பவர் ஹுஸ்னுல் அஸாலீஃப் பீ மத்ஹி ஷெய்கி அப்தில்லாஹி பாதீப் என்ற மனாகிப் தொகுப்பையும் இயற்றியுள்ளார்கள்.
கஹட்டோவிட்டாவில் நல்லடக்கம் செய்யப்பட்டிருக்கும் அஷ்-ஷெய்க் அப்துல்லா இப்னு உமர் பாதீப் மௌலானா நாயகம் அவர்கள் தொடர்பான சில புகைப்படங்கள்.
பாதீப் மௌலானா நாயகமவர்கள் பாவித்த பொருட்கள்
(இவை இன்று (2011, மே) வரை அன்னார் நல்லடக்கம் செய்யப்பட்டிருக்கும் கஹடோவிட்ட பாதீபிய்யாத்தக்கியாவில் பேணிப்பாதுகாக்கப் பட்டுவருகின்றது)
Leave a comment