முஹம்மது அபூபக்கர் லெப்பை ஆலிம் (வலி)
முஹம்மது அபூபக்கர் லெப்பை ஆலிம் (வலி) அல்-குத்ப், அப்துஸ்ஸமது மௌலானா (றலி)யின் அக்கரைப்பற்று வருகையின் வைதிகத்தோடு முஹம்மது அபூபக்கர் என்ற சிறுவராக உறவு கொண்ட இவர்கள் மத்ரஸா மாணவராகவும், ஆலிமாகவும்,முரீதாகவும், கலீபதுல் காதிரிய்யியாகவும், மருமகனாகவும், சின்னப்பள்ளியின் தலைவராகவும், வலியாகவும், மார்க்க மேதையாகவும், பெருங்கவிஞராகவும் என பல்பட்ட நிலையில் பரிணமிக்கின்றார்கள். ஒரு மார்க்க மேதாகுணஞானியின் தொடர்பு தன்னை மேதையாக உருவாக்கும் என்பதற்கு இப்பெரியாரின் வாழ்வு சுவடாய் பதிந்திருக்கின்றது.
அக்கரைப்பற்று வதிவிடமாகக் கொண்ட மர்ஹும் இஸ்மாயீல் அவர்களின் மகனாக முஹம்மது அபூபக்கர் லெப்பை ஆலிம் பிறக்கின்றார்கள். ஏழை விவசாயியின் மகனாக விளங்கிய இவர்கள் அப்துஸ் ஸமது மௌலானா (றலி)யின் அன்பிலும் அரவணைப்பிலும் வளர்ந்து வரும் போது சிறுவர் மார்க்கக் கல்வியில் கொண்டிருக்கும் பேரார்வத்தை கண்டு கொண்ட பெரியார் தனது ஆன்ம நண்பரான சங்கைக்குரிய அல்லாமா அஸ்-ஸெய்யித் முஹம்மது மாப்பிள்ளை லெப்பை ஆலிம்(றலி)யிடம் சிறுவரை ஒப்படைத்து இந்தியா பாக்கியத்துஸ் ஸாலிஹா மதரஸாவில் சேர்க்குமாறு வேண்டியதற்கு அமைவாக சேர்க்கப்பட்டு பல வருடங்கள் அம் மத்ராஸாவில் ஓதி ஆலிமாக பட்டம் பெற்று அக்கரைப்பற்று திரும்புகின்றார்கள்.
இவர் அக்கரைப்பற்று மாதாவின் முதலாவது ஆலிமாக மதிக்கப்படுபவர். முதலாவது ஹாபீஸாகவும் போற்றப்படுகின்றார். அக்கரைப்பற்று 4ஆம் குறிச்சியில் பெரிய பள்ளிவாசல் அருகில் இவர் பிறந்தார். இளமையில் இந்தியா சென்று ‘பாக்கியத்துஸ்ஸாலிஹாத்’ மதராஸாவில் பல வருடங்கள் ஓதி, ஆலிமாகப் பட்டம் பெற்றவர். ( 129.தகவல் : பொன்மலர், பக்-134).
அஷ்-ஷெய்க் அப்துஸ் ஸமது மௌலானா (றலி) அவர்கள் பெருஞ்செல்வந்தராக அக்காலத்தில் விளங்கியதனால் இலங்கையின் பல பாகங்களிலிருந்தும் முஸ்லிம் பிள்ளைகளை இந்தியா கிதாப் மதரஸாவுக்கு ஓதுவதற்காக அனுப்பி அப்பிள்ளைகளின் கல்வித் தேவைக்குரிய பணமும் தவணைக்கு தவணை அனுப்பிக் கொண்டு வந்துள்ளார்கள். இவர்களின் செலவிலும், கவனிப்பிலும் பலர் ஆலிம்களாக வெளியாகியிருக்கின்றனர். அவர்களுள் ஒருதான் அபூபக்கர் லெப்பை ஆலிமாகும்.
அபூபக்கர் லெப்பை ஆலிம் அவர்கள் சங்கைக்குரிய அப்துஸ் ஸமது மௌலானா (றலி) அவர்களின் உபந்நியாசங்களாலும், போதனைகளாலும் உந்தப்பட்டு ஸூஃபித்துவ சீடராக மாறியுள்ளார்கள். அப்பெரியாரிடமிருந்து ‘பைஅத்தையும்’ மார்க்கப் போதனைகள் புரிவதற்கான உத்தரவையும் பெற்று சின்னப்பள்ளியின் பேஷ் இமாமாக அவர்களால் நியமனம் செய்யப்பட்டுமிருக்கின்றார்கள். சில வருடங்களின் பின் காதிரிய்யா தரீக்காவில் மக்களை வழிநடத்துவதற்குரிய ‘இஜாஸத்’ ‘அஸ்மா’ இஸ்ம் றாதீப் செய்வதற்கான உத்தரவுகள் அஷ்-ஷெய்க் அஸ்-ஸெய்யித்; அப்துஸ்ஸமது மௌலானா (றலி) அவர்களால் வழங்கப்பட்டுள்ளது.
25 வருட ஆன்மீக பயிற்சியை வழங்கி, கலீபத்துல் காதிரிய்யி முஹம்மது அபூபக்கர் லெப்பை ஆலிம் (வலி)க்கும் தனது மூத்த மகளான அஸ்-ஸெய்யித் றைஹானத்தும்மா (வலி) அவர்களுக்கும் சின்ன மௌலானா (றலி) ஆல் திருமணம் செய்து வைக்கப்படுகின்றார்கள்.
கலீபத்துல் காதிரிய்யி முஹம்மது அபூபக்கர் லெப்பை ஆலிம் (வலி)க்கும் தனது மூத்த மகளான அஸ்-ஸெய்யித் றைஹானத்தும்மா (வலி) அவர்களுக்கும் சின்ன மௌலானா (றலி) ஆல் திருமணம் செய்து வைக்கப்படுகின்றார்கள்.
இவ்விரு இல்லற தம்பதிகளுக்கும் நான்கு ஆண் குழந்தைகளும் ஒரு பெண் குழந்தையும் கிடைத்திருக்கின்றன. அஸ்-ஸெய்யித் ஹாஸீம் ஆலிம் மௌலானா, அஸ்-ஸெய்யித் அப்துஸ்ஸலாம் மௌலானா, அஸ்-ஸெய்யித் முஹல்லம் அப்துஸ்ஸமது ஆலிம் மௌலானா, அஸ்-ஸெய்யித் அப்துர் றஷீத் ஆலிம் மௌலானா ஆகிய ஆண் குழந்தைகளும் அஸ்-ஸெய்யித் உம்முகுல்தூம் உம்மா எனும் பெண் குழந்தையுமாகும்.
இவர்கள் ஜும்ஆப் பட்டினப் பள்ளி வாசலில் அடக்கஞ் செய்யப்பட்டிருக்கும் அப்துஸ்ஸமத் (சின்ன மௌலானா) அவர்களின் அருமை மகளை மணந்து நான்கு ஆண் பிள்ளைகளும் ஒரு பெண் பிள்ளையும் இருந்தனர்.(130. தகவல் : பொன்மலர், பக் – 135).
1810 ஆம் ஆண்டு அப்துஸ் ஸமது மௌலானா நாயகம் அவர்கள் இப்பதிவாழ் முஸ்லிம்களின் பிள்ளைகளுக்காக மக்தாப் ஒன்றை ஸ்தாபித்து அபூபக்கர் ஆலிமை லெப்பையாக நியமித்துள்ளார்கள். இம் மக்தாப் முறைதான் இப்பிரதேசத்தின் கால்கோள் கல்வி நிலையமாகும். இதிலிருந்துதான் ஏனைய மக்தாப்களும் மதரஸாக்களும் உருவாக்கம் பெற்றுள்ளன. பிற்காலத்தில் அம் மக்தாப் அபூபக்கர் லெப்பை ஆலிம் மதரஸா என்ற பெயரில் வழங்கப் பட்டுள்ளது.
இவர்கள் காதிரிய்யியா தரீக்காவில் மக்களை வழி நடத்தி, இஜாஸத், நஸீஹத் வழங்கியுள்ளார்கள். ஞானத்துவ பாணியில் எதையும் பேசுகின்ற தன்மை கொண்டவராக, மக்கள் மத்தியில் விளங்கியுள்ளார்கள். மார்க்க சம்பந்தமான சிக்கல்களுக்கு முறையான தீர்வுகளையும் முன்வைத்து தன் தலைமையின் கீழ் ஊரை காத்துள்ளார்கள்.
இவ்வூரில் மூத்த பரம்பரையில் மௌலானா அவர்களுக்கும் அவர்களின் மூத்த மருமகனான பெரியார். முஹம்மது அபூபக்கர் லெப்பை ஆலிம் அவர்களுக்கும் முதலிடம், தனியிடம் உண்டு சமய, சமூக, ஆன்மீக அடைவுகளை இவ்விருவர்களிலிருந்தே மக்கள் பெற்றனர். இவ்வூரின் கல்விமான்களாகவும் தவைர்களாகவும், ஆன்மீக ஞானிகளாகவும், சமயப் பெரியார்களாகவும் இவர்களே செயலாற்றினர். (131.ஆதாரம்: அக்கரைப்பற்று வரலாறு, பக்-276).
சன்மார்க்கத்துறையில் புலமையுடன் இருந்த இவர்கள் தமிழ்மொழி இலக்கிய, அறபு மொழி இலக்கியத்துவத்திற்கும் பங்களிப்பு வழங்கியுள்ளார்கள். அறபு தமிழிலும் தமிழ்மொழியிலும் கவிதைகள் பாடியபெரும்புலவனாக இருந்துள்ளார்கள். தூய தமிழில் வித்துவச்செருக்குடன் மிக எளிமைப்படுத்தப்பட்டஎண்ணற்ற கவிதைகளைத் தந்து இலக்கியத்தை வளம்படுத்தியுள்ளார்கள். இவர்களது பாடல்கள் அனைத்தும் பக்தி நிலையே தொனியாக உட்கொண்டுள்ளன. பக்தி பரசவத்தின் விளிம்பில் நின்று பாடுபட்ட கவிதைகள் பக்தியை தூண்டக் கூடியதாகவுமிருக்கின்றன. இனிமை சொட்டும் பாடலாகவும், சொக்கி நயக்கத்தக்கதாகவும் இரண்டறக்கலந்து நிற்பது ஒரு பெரும் புலவனுக்குரிய பண்பை வெளிப்படுத்துகின்றது.
இந்நிலத்து மாதாவின் கலை இலக்கிய கருத்தாவாக தன்னை பதித்துக் கொண்ட அபூபக்கர் லெப்பை ஆலிம் (வலி) அவர்கள் திருக்கலியாண சிறப்பு, மண்ணறை வேதனை, ஒளிவிடும் மெய்ஞான தீபம் ஆகிய நூற்களை தந்து, இஸ்லாமிய இலக்கியத்தை செழுமைப்படுத்தியுள்ளார்கள். இவர்களது கவிகள் யாவும் ஞானத்தை சாறாய் பிழிந்து ஊட்டுபவையாக அமைந்துள்ளன. இந்தக்கவிதைகளை ஆராய்கின்ற போது இவர்கள் முழு ஸூஃபி ஞானியாக சஞ்சரித்துள்ளார்கள் என்பதை அறியக் கூடியதாவுள்ளது. இறை நம்பிக்கையில் குடி கொண்ட இவர்கள் கவிகள் இறையச்சம் மேலிட்டு இறையாதரவை வேண்டித் தன்னிலை மறந்து பாடப்பட்டதாக அமைந்துள்ளன. மிக தாழ்மை மிக்கவராக பாடல்களில் தோன்றியிருக்குமிவர்கள் அவ்தாத்துமார்களின் மகாமில்தரிபட்டிருக்க வேண்டும். அன்னவர்களின் சொல் ஆளுகை, சொல்நயம், கவி முறைமை முதலான அழகியல் வனப்புக்களை சுகிக்க கீழ்வரும் கவி துளிகள் நிறைவுடையதாகும்.
அழுதேன் என்னை ஆதரிப்பீர் நபியே – என்னைத்
தாபரிப்பீர் ஸபிய்யே!
நாகமுடும்பு நவின்றுரை கூறிய தாயகமானேவரே – உரைகூறிய
தாகம் வராமலே தாபரிப்பீர் – எங்கள்
தாஸிமே யானபிய்யே! – யாநபிய்யே!
காலனும் வந்து கடுந்தென் உயிர்தனில்
கைபோடும் வேளையிலே – என்னை
கலிமாவினோடு கரைசேர்க்க கடன்
காத்திமே யாநபிய்யே! – யாநபிய்யே!
மன்னனின் முங்கர் மணலறை வந்தாறு
மாசலவும் கேட்டிடுவார் – வந்தாறு
அதை என்னாவினாலே இயம்பு உதவிசெய்
தீடேற்றும் யாநபிய்யே!
‘மூத்த ஆலிமு’ என அழைக்கப்பட்ட வரகவியின் தந்தையாகும் இவர் கவிஞர் சின்ன மௌலானாவின் மருமகன். வரிசையான திருக்கலியாண பாடல்களைத் தந்த ஒரு கவிஞர். மாப்பிள்ளை விருத்தம் ‘சவ்வாஸ் விருத்தம்’ என இனிமையான ஓசை நயத்துடனும், எதுகை மோனையுடனுமான வாழ்த்துப் பாடல்களை யாத்தவர். திருமண வைபவங்களின் போது, மணமகனை வாழ்த்தும் இவரது பாடல்கள் இறைவனின் ஆசி வேண்டி ஒலிக்கின்றன. ஆன்மீக மணங்கமழும் அற்புதமான பாடல்களாகும். இவை இன்னும் மதிக்கப்படுகின்ற வரிசைக் கவிதைகளாக மக்கள் மனங்களில் நிலைத்திருக்கின்றன. (132.ஆதாரம்: கொடிமலர், பக் – 192).
கருங்கொடித்தீவின் முதலாவது புலவர் தமிழ், அறபு மொழிகளில் பாடல்களை இயற்றியவர். திருக்காலியாணச் சிறப்பு, மண்ணறை வேதனை, மெய்ஞான தீபம், சாயந்தாட்டுப்பாடல் ஆகியவற்றை ஆக்கியுள்ளார். (133. தகவல்: அக்கரைப்பற்று வரலாறு, பக்கம் – 216).
தீனுல் இஸ்லாத்தின் யதார்த்தங்கள் சுடர்விடும் இவர்களது வரிகளில் அறபு, தமிழ்மொழி சொற்கள் ஒன்றி இசையும், கருத்தும், இனிமையும் குழையாமல் கையாளும் பக்குவம் இயல்புக் கவிஞர் என்பதை உணர்த்தி நிற்கின்றது. அறபு, தமிழ், அறபுத் தமிழ் இலக்கிய பாரம்பரியத்தின் முன்னோடியாக என்றும் இவர்கள் விளங்குவார்கள்.
இவருக்கு நான்கு ஆண்பிள்ளைகளும் ஒரு பெண்பிள்ளையுமிருந்தனர். நான்கு ஆண்களையும் ஆலிம்களென்று எல்லோரும் அழைப்பர். மூத்தவரான ஹாஷிம் ஆலிமை மூத்தாலிம் என்று ஊரவர் அழைப்பர். மேடைச் சொற்பொழிவிலும் பாவியற்றுவதிலும் இவர் வல்லவர். ஹாஷிம் புலவர் நினைத்தவுடன் கவிபாடும் ஆசுகவியாவார். அடுத்தவர்களான அப்துஸ்ஸலாம், அப்துஸ் ஸமத் (மக்கத்தார்) அப்துர் றஷீத் ஆலிம் ஆகிய அனைவரும் இறைஞானமும் பாப்புனையும் ஆற்றலும் பெற்றவர்கள். இவரது மகளான உம்முல் குல்தூம் (மக்கத்தும்மா)வினது புதவல்வரே புஹாரி ஆலிம் என அழைக்கப்படும் அபூபக்கர் ஆலிம் ஆவார்.(134. தகவல்: பொன்மலர், பக்- 135).
அறபு மொழியில் ஆழிய புலமை இவர்களுக்கு இருந்திருப்பதை இவர்களது இலக்கியங்கள் படம்பிடித்துக் காட்டுகின்றன. பேஷ் இமாமாகவும், லெப்பையாகவும், தலைவராகவும், தரீக்கா முர்ஷித்தாகவும் ஆன்மீக வைத்தியராகவும் பன்மொழி பண்டிதராகவும், இலக்கிய வித்தகராகவும், ஒளிசிந்தி ஆன்மீக சமூக கலாசார பண்பாட்டுத்துறை அபிவிருத்தி அருந்தொண்டாற்றிய இம்மஹான் 1917ஆண்டுஅல்லாஹுவின் நியதியில் சாய்கின்றனர். அல்-குத்ப், அஷ்-ஷெய்க் அஸ்-ஸெய்யித், அல்-ஹாபிழ், அப்துஸ்ஸமத் மௌலானா ஸபீத்திய்யி யமானிய்யி காதிரிய்யி, ஐதருஸிய்யி,றிபாஇய்யி, ஷாதுலிய்யி (றலி) அவர்களின் வலப்புறமாக சயணிக்கின்றனர். அவர்களின் இல்லத்தரசி கருங்கொடியூரின் புனித அஹ்லுல் பைத்தின் தாய் அஸ்-ஸெய்யித் றைஹானத்தும்மா (வலி)அவர்கள் கி.பி 1939 ஆம் ஆண்டு கணவனான அபூபக்கர் லெப்பை ஆலிம் (வலி)அவர்களின் விலாவில் ஸியாரம் கொள்கின்றனர்.
Leave a comment