Muhiyidden Ibnu Arabi Raliyallahu Anhu

முஹ்யித்தீன் இப்னு அரபி றலியல்லாஹுஅன்ஹு.

ஸ்பெயினின் மூர்ஸியா எனும் சிற்றூரில் வள்ளல் ஹாத்திம் தாயீன் வமிசவழியில் ஹிஜ்ரி 560 ரமலான் பிறை 17 வியாழக் கிழமை(கி.பி.1165 ஜூலை 29)அன்று பிறந்த இவாகளின் இயற் பெயர் அபூபக்கர் முஹம்மத் இப்னு அலீ முஹ்யித்தீன் என்பதாகும். இவர்களின் பெற்றோருக்கு 50 வயதாகியும் குழந்தை இல்லாத குறையை பகுதாது சென்று முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி றலியல்லாஹு அன்ஹு அவர்களிடம் எடுத்துரைத்தபோது, அவர்களின் ஆசீர்வாதத்துடன் இவர்கள், முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி றலியல்லாஹு அன்ஹு அவர்கள் மறைந்து 5 மாதங்களுக்குப் பின் பிறந்தார்கள். ஸ்பெயினில் இவர்கள் பெயர் அப்னு சுராக்கா. அரபகத்தில் இப்னு அரபி என்றே அழைக்கப்பட்டார்கள்.

தம் தந்தையிடமும், செவில்லியில் வாழ்ந்த அபூபக்கர் இப்னு கலாப் அவர்களிடமும், இப்னு முஅல்லிஃப் அபுல்ஹஸன் ஷரீஹ், அபுல்காசிம் ஷர்ரத் என்பவர்களிடமும் மார்க்க கல்வி பயின்றனர். மேலும் யூத, கிறத்துவ,ஜெராஸ்டிய மதம் பற்றிய நூல்கள்,கிரேக்க தத்துவ ஞானம், கணிதம் பற்றிய நூல்களையும் பயின்றார்கள்.

இளமையிலேயே ஹதீதுகளுக்கு இவர்கள் அளித்த விளக்கம் முதுபெரும் அறிஞர்களையும் வியப்பில் ஆழ்த்தியது. ரனிஸ் துறைமுகத்தில் கப்பலில் அமர்ந்திருக்கும் போது கடலில் நடந்து வந்த கிள்று அலைஹிஸ்ஸலாம் அவர்ளிடம் உரையாடினர். பின்னர் மீண்டும் அவர்கள் காட்சி வழங்கி கிர்கா அணிவித்து சென்றனர். அதன்பின் அவர்கள் ஆன்மீக வெளிச்சம் பெற்றனர். செம்பை; பொன்னாக்கும் கீமியா கலையையும் தெரிந்து கொண்டனர். இஸ்முல் அஃலமும் இவர்களுக்கு தெரியவந்தது.

இவர்கள் பல அற்புத கனவுகள் கண்டனர். அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் மற்ற நபிமார்களுடன் இவர்களுக்கு காட்சி வழங்கி ‘விலாயத்தே முஹம்மதிய்யா’வின் கடைசி வலியாக நியமித்திருப்பதாக கூறி மறைந்தனர்.

ஹிஜ்ரி 598ல் தூனிஸை விட்டும் நீங்கி வட ஆப்பிரிக்காவிலிருந்த சிற்றூர்களுக்கு சுற்றுப் பயணம் செய்து இறுதியாக கெய்ரோ வந்தடைந்தனர். அவர்களின் ஞானக் கருத்துக்களால் பலர் பரவசமடைந்தனர். இதனால் அவர்களின் செல்வாக்கு நாளுக்கு நாள் வளர்ந்தது. இதை பிடிக்காத இவர்களின் எதிரிகள் இவர்களைக் கொல்ல முயன்றும் அது முடியவில்லை. அதன்பின் ஆட்சியாளர்களைக் கொண்டு அவர்களை சிறை செய்தனர். ஆனால் இவர்களின் ஆதரவாளர்கள் செய்த கிளர்ச்சியினால் இவர்களை விடுதலை செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டனர்.

இதன்பின் பகுதாது சென்று முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி றலியல்லாஹு அன்ஹு அவர்களின் அடக்கவிடத்திற்கு அண்மையிலுள்ள தவமடத்தில் 12 நாட்கள் தங்கிவிட்டு, மக்கா சென்று ஹஜ் செய்தனர். பின் மதீனா சென்று ஜியாரத் செய்து விட்டு திரும்பவும் மக்கா சென்று 7 வருடம் அங்கு தங்கியிருந்தனர். அதன்பின் பகுதாது வந்து சில மாதங்கள் தங்கியபின் ஆசியா முழுவதும் சுற்றுப் பயணம் செய்து விட்டு ஹிஜ்ரி611ல் மீண்டும் மக்கா திரும்பினர்.

மக்காவிலிருக்கும் போது புத்துஹாத்துல் மக்கிய்யா(மக்காவில் உதிப்பான அகமியங்கள்) எனும் புகழ் பெற்ற நூலை 560 அத்தியாயங்களில் எழுதினர். ஹில்யத்துல் அப்தால் எனும் நூலை ஒரு மணி நேரத்தில் எழுதி முடித்தனர். ஃபுஸூஸுல் ஹிகம் எனும் நூலை கனவின் மூலம் அறிவிக்கப்பட்டு எழுதியதாக சொன்னார்கள்.

500 நூல்கள் எழுதியுள்ளனர். அவற்றில் சுமார் 150 நூல்கள் வரை இப்போது உள்ளன. அதிலும் பெரும்பாலும் கையெழுத்துப் பிரதிகளாக இஸதான்புல், கென்யா, பகுதாது ஆகிய நகரின் நூல் நிலையங்களில் உள்ளன.

தம் மூதாதையரான ஹாத்திம் தாயின் தாராள இயல்பு இவர்களிடம் இயற்கையாகவே இருந்தது. இவர்கள் ஹலப் நகருக்கு சென்றபோது அந்நகரின் ஆளுனர் இவர்களை வரவேற்று இவர்களுக்கு ஒரு வீட்டை வழங்கினார். அவ் வீட்டிலிருக்கும்போது, ஓர் ஏழை இவர்களிடம் தர்மம் கேட்க, கையில் ஒன்றுமில்லாதபோது வீட்டை கொடுத்துவிட்டு அவ்விடத்தைவிட்டு வெளியேறி சென்றனர். பின்னர் திமிஷ்க் வந்து தங்கி இரத்தினம் மற்றும் ஜவுளிக் கடை வைத்து பெரும் வியாபாரம் செய்தனர்.

தம்மை ஏசித் திரிந்தவன் இறந்தபோது அவனின் அடக்கச் சடங்கில் கலந்து கொண்டு அவனுக்காக துஆ செய்தனர். ஷெய்குல் அக்பர்’ என்று அழைக்கப்பட்ட இவர்கள் மறைவாக வைக்கப்பட்டிருந்த ஞான ரகசியங்களை மக்களுக்கு வெளிப்படையாக போதித்தனர். இவர்கள் ஆன்மீக உச்சநிலையயை அடைந்திருந்தனர்.

திருக்குர்ஆனுக்கு விளக்கவுரை எழுதிக் கொண்டிருக்கும்போது நோயுற்றனர். ஸூரத் கஃபின் 18:65 வசனமான ‘பின்னர் தம் அடியார்களுள் ஒருவரைக் கண்டு கொண்டனர். அவருக்குத் தம் தனிப்பெரும் அருளை நல்கி நம்முடைய தனிப் பெரும் ஞானம் ஒன்றையும் கற்பித்திருந்தோம்’என்ற திருவசனத்திற்கு விளக்கம் சொல்லிக் கொண்டிருந்தபோது உயிர் நீத்தனர். இது ஹிஜ்ரி 638 ரபீயுல் ஆகிர் பிறை 28 வெள்ளி இரவு (கி.பி.1240 நவம்பர்16) அன்று நிகழ்ந்தது. இவர்களின் உடல் திமிஷ்கிலுள்ள ஸலாஹ் அடக்கவிடத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இவர்கள் எழுதிய ‘புத்துஹாத்துல் மக்கியா’வைப் பின்பற்றியே தாந்தே தம்முடைய டிவைன் காமெடியாவை உருவாக்கினார்.

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *