“மஹ்ழறத்துல் ஐதுரூஸிய்யா –ஹல்லாஜ் மக்காம்” தைக்கா திறப்பு விழா ஒரு கண்ணோட்டம்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர்ரஹீம்

நாட்டில் ஏற்பட்ட கோரமான யுத்தத்தின் விளைவாக 1990 ஆம் ஆண்டு வட மாகாணத்தின் யாழ்ப்பாணத்திலிருந்தும் முஸ்லிம் மக்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டதன் பின்னர் சுமார் 26 வருடங்களாகக் கைவிடப்பட்டிருந்த “மஹ்ழறத்துல் ஐதுரூஸிய்யா –ஹல்லாஜ் மக்காம்” தைக்காவானது, கலீபத்துல் ஹல்லாஜ் அஸ்ஸெய்யித் அஷ்ஷெய்க் அப்துல் மஜீத் மக்கத்தார் (றஹ்) அவர்களினால் திருத்தியமைக்கப்பட்டு கடந்த 21.05.2017 ஞாயிற்றுக் கிழமை அஸர் தொழுகையுடன் அன்னாரினால் உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது.

சுமார் 200 வருடங்கள் பழமையான இத்தைக்காவானது ஷெய்குனா ஹல்லாஜுல் மன்ஸூர் நாயகத்தின் பாட்டானாரான அந்தர தீவைச் சேர்ந்த அஸ்ஸெய்யித் பூக்கோயாத் தங்கள்(றஹ்) அவர்களால் நிர்மாணிக்கப்பட்டது. அதன் பின்னர் அவரது மகனான அஸ்ஸெய்யித் அப்துர் ரஹ்மான் மௌலானா (றஹ்) ஐதுறூஸிய்யி, மற்றும் அதனைத் தொடர்ந்து அன்னாரின் மகனான அஸ்ஸெய்யித் அஷ்ஷெய்க் ஹல்லாஜுல் மன்ஸூர் (றஹ்) அவர்களாலும் நடாத்தப்பட்டு வந்தது. தற்போது இதன் பொறுப்புதாரராக கலீபத்துல் ஹல்லாஜ் அஸ்ஸெய்யித் அஷ்ஷெய்க் அப்துல் மஜீத் மக்கத்தார் (றஹ்) அவர்கள் இருந்து வருகிறார்கள்.

அட்டாளைச்சேனையைச் சேர்ந்த சகோதரர் ஜனாப் ஏ.சீ.எம். நிஹால் அவர்களின் இனிய பாங்கினைத் தொடர்ந்து யாழ்ப்பாணம் சோலைத் தக்கியாப் பள்ளிவாசல் பேஷ் இமாம் மௌலவி அ.அஸீஸ் அவர்களினால் அஸர் தொழுகை நடாத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து தைக்காவின் முன்னால் தலைவர் மர்ஹூம் அல்ஹாஜ் ஏ.எஸ்.எம்.ஸாதிக் (JP) அவர்கள் உட்பட நல்லோர்கள் ஸாலிஹீன்கள் மற்றும் அனைத்து முஸ்லிமான ஆண்கள்; பெண்கள் பெயரிலும் யாஸீன் ஓதி ஹதியாச் செய்யப்பட்டது. யாழ்ப்பாணம் முஹ்யித்தீன் ஜும்ஆ பள்ளிவாசல் பேஷ் இமாம் மௌலவி எம்.ஏ.சீ. ஜாபிர் (நத்வி) அவர்கள் துஆப் பிராத்தனையை மேற்கொண்டார்கள்.

அதனைத் தொடர்ந்து யாழ்ப்பாண மாவட்ட ஜம்மியத்துல் உலமா சபைத் தலைவர் மௌலவி எம்.சுஃப்யான் அவர்களின் உரை இடம்பெற்றது. அவர் தனது உரையில், சுமார் ஆயிரம் வருடங்களாக பரம்பரை பரம்பரையாக வாழ்ந்த மண்ணைவிட்டு ஈமானைப் பாதுகாப்பதற்காக நமது அசையும் அசையாச் சொத்துக்கள் அனைத்தையும் விட்டு விட்டு சென்றோம். அல்லாஹ்வின் மாபெரும் கிருபையின் காரணமாக இறைநேசர்களின் துஆ பரக்கத்தின் காரணமாக எதிர்பாராதவிதமாக நாம் வாழ்ந்த மண்ணில் மீண்டும் வாழ்வதற்குரிய ஒரு சூழலை அல்லாஹ் நமக்கு அமைத்துத் தந்தான். இவ்வாறு சொந்த மண்ணில் மீள் குடியேறிய மக்கள் தம்முடைய வீடுகள் தொழில் துறவுகள் அனைத்தையும் விட முதலாவதாக தம்முடைய மஸ்ஜித்களை சரி செய்தனர். யாழ்ப்பாணத்தில் சுமார் 14 பள்ளிவாசல்களில் இந்த ஐதுறூஸ் மக்காம் தவிர்த்து மற்றப் பள்ளிவாசல்கள் திறக்கப்பட்டு மார்க்க விடயங்கள் நடைபெற்று வரும் நிலையில் இன்று இந்த தைக்காவும் திறக்கப்படமையானது மகிழ்ச்சியளிக்கின்றது. அல்ஹம்துலில்லாஹ்.

ஒரு காலத்தில் பல்வேறுபட்ட ஸாலிஹான நல்லமல்கள் இந்தப் பள்ளியிலே நடைபெற்றன. ஸாலிஹான மனிதர்கள் பலர் இந்தத் தெருவிலே வாழந்தார்கள். அவர்கள் அனைவரும் இந்தத் தைக்காவுடன் தொடர்புபட்டவர்களாக இருந்து வந்தார்கள். சிறப்பான ஒரு ஆலிம் இந்தப் பள்ளிவாசலிலே தொழுகை மற்றும் ஏனைய நல்லமல்களை நடாத்திக் கொண்டு வந்தார்கள்.

காலத்தின் தேவை காரணமாக பள்ளிவாசல்கள் விரிவு படுத்தப்பட்ட போதும் அவற்றுடன் தொடர்புபடும் மக்களின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே இருக்கின்றது. அதனால் நாம் அனைவரும் பள்ளிவாசலுடன் தொடர்புகளைப் பேணி வரவேண்டும் என வேண்டிக் கொண்டார்கள்.

பின்னர் உரையாற்றிய ஷெய்குனா மக்கத்தார் (றஹ்) அவர்கள்;

முன்னர் நடைபெற்றது போன்று தொழுகை, ரமழான் காலங்களில் தறாவீஹ், இறாத்தீபு, மௌலித், பெரியார்களை ஞாபகம் செய்யும் நிகழ்வுகள் கந்தூரிகள் உள்ளிட்ட அனைத்து மார்க்கக் கடமைகளும் எந்தவிதமான மாற்றங்களும் இன்றி இந்தத் தைக்காவில் இனிவரும் காலங்களிலும் நடைபெறும் எனத் தெரிவித்தார்.

மேலும் தன்னுடன் இரவு பகலாக நின்று தன்னலம் கருதாது உழைத்து தைக்காவின் பணிகளை சீராக முடிக்க ஒத்துழைத்த அனைவருக்கும் தனது நன்றிகளைத் தெரிவித்ததுடன்,  அவர்களின் ஈருலக நன்மைக்காவும் துஆச் செய்தார்கள்.

இறுதியாக மஹ்ழறத்துல் ஐதுறூஸிய்யாப் பேஷ் இமாம் மௌலவி எம்.எஸ்.எம். முரீஸ் அவர்களின் நன்றியுரையுடன் நிகழ்வுகள் இனிதே நிறைவு பெற்றன.

நிகழ்வுகளில்  யாழ்ப்பாணம், வவுனியா, நீர்கொழும்பு, கொழும்பு, அக்கரைப்பற்று, கல்முனை, சாய்ந்தமருது, ஏறாவூர், நாவலப்பிட்டி மற்றும் கஹட்டோவிட்ட உள்ளிட்ட நாட்டின் பல பாகங்களிலிருந்தும் வருகை தந்த முரீதீன்கள், முஹிப்பீன்கள், உலமாக்கள், தைக்கா நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர், – நன்றி ஹாதிமுல் மக்காம்.

திருத்தியமைக்கப்பட முன்னர்;

 

 

தைக்காவின் திறப்பு விழா நிகழ்வுகள்;

 

 

 

.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *