Archives

Kuthba

 அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ். வபர.

1979 ஆம் ஆண்டு அக்கரைப்பற்று சின்ன( பட்டின)ப் பள்ளிவாசலின் அனுமதி பெறப்பட்டு 
கட்டப்பட்ட மஹ்ழறத்துல் காதிரிய்யா பள்ளிவாசலில் பல்வேறுபட்ட நல்ல நோக்கங்களை 
கருத்திற்கொண்டு; குத்பா ஓதுவதற்காக கடந்த 01.01.2013ல் அனுமதிகோரப்பட்டது.
( கடிதம் -01)
கடிதம்-01

அக்கரைப்பற்று மஹ்றத்துல் காதிரிய்யா தக்கியாவில் (ஜும்ஆ பள்ளிவாசலில்) குத்பா நடத்துவதற்காக அனுமதிகோரி அக்கரைப்பற்று பட்டின ஜும்ஆ பள்ளிவாசலுக்கு அனுப்பப்பட்ட கடிதம்

 

 அதனைத் தொடர்ந்து கடந்த 2013.02.02 ஆம் திகதி தேதியிட்ட 727 ஆம் இலக்க கடிதத்தின் மூலம் அக்கரைப்பற்று பட்டின ஜும்ஆ பள்ளிவாசலால், மேற்படி மஹ்ழறத்துல் காதிரிய்யா பள்ளிவாசலில் குத்பா ஓதுவதில் எந்தவித ஆட்சேபனையும் இல்லையென மறுமொழி வழங்கப்பட்டது ( கடிதம் -02).

கடிதம் -2

அக்கரைப்பற்று மஹ்றத்துல் காதிரிய்யா தக்கியாவில் (ஜும்ஆ பள்ளிவாசலில்) குத்பா நடத்துவதில் ஆட்சேபனை இல்லையென அக்கரைப்பற்று பட்டின ஜும்ஆ பள்ளிவாசலால் வழங்கப்பட்ட கடிதம்

அதனைத் தொடர்ந்து கடந்த 12.04.2013 வெள்ளிக் கிழமை முதல் அக்கரைப்பற்று மஹ்ழறத்துல் காதிரிய்யா ஜும்ஆ பள்ளிவாசலில் குத்பா ஓதப்படுகிறது.  அல்ஹம்துலில்லாஹ்.

முதலாவது குத்பாப் பேருரையை அதிகண்ணியமிக்க ஷெய்குனா குத்புஸ்ஸமான் அப்துல் மஜீத் மக்கத்தார் வாப்பா நாயகம் (றலி) அவர்கள் நிகழ்த்தினார்கள். 

%%wppa%% %%slideonlyf=16%% %%align=center%%

ஜும்ஆ பிரசங்கம் 12.04.2013

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர்ரஹீம்

12-04-2013 ( ஹிஜ்ரி 1434 ஜமாதுல் அவ்வல் மாதம் பிறை 01) வெள்ளிக்கிழமை அக்கரைப்பற்று மஹ்ழறத்துல் காதிரிய்யா ஜும்ஆ மஸ்ஜிதில் முதலாவது ஜும்ஆவானது காதிரிய்யா ஜிஷ்திய்யா றிபாஇய்யா நக்ஷபந்திய்யா தரீக்காக்களின் ஆன்மீகத் தலைவர் அதிசங்கைக்குரிய குத்புஸ் ஸமான்  கலீபத்துல் ஹல்லாஜ் அப்துல் மஜீத் பின் அப்துஸ் ஸமது ஆலிம் மக்கத்தார் (ஸபீதிய்யி, அல்யெமனிய்யி) றலியல்லாஹு அன்ஹு அவர்களினால் நடாத்தி வைக்கப்பட்டது.

அதன் போது சங்கைக்குரிய ஷெய்கு நாயகம் அவர்களினால் ஆற்றப்பட்ட தமிழ் குத்பாவின் எழுத்து வடிவம்.

___________________

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹு.

நஹ்மதுஹூ வனஸ்தஈனுஹூ வனஸ்த்ஃபிரூஹூ வனுஃமினு பிஹீ வனுதவக்கலு அலைஹி.

வநஊது பில்லாஹி மின் ஸுரூரி அன்புஸினா வமின் ஸெய்யிஆதி அஃமாலினா மய்யெஹ்திஹில்லாஹு ஃபலா முழில்லழாஹ். வமய் யுழ்லில்ஹு ஃபலா ஹாதியலஹ். வனஷ்ஹது அன்லா இலாஹ இல்லல்லாஹு வஹ்தஹூ லா ஷரீக லஹூ

வஅஷ்ஹது அன்னமுஹம்மதன் அப்துஹூ வரஸூலுஹு. ஸல்லல்லாஹு அலா ஸெய்யிதினா முஹம்மதின் வஆலா ஆலிஹீ வஸஹ்பிஹீ அஜ்மஈன். அம்மா பஃத்.

ஃபகத் காலல்லாஹு த்தஆலா ஃபில் குர்-ஆனில் கரீம். வல் ஃபுர்கானிஹில் மஜீத்.

அஊது பில்லாஹி மினஷ்ஷெய்தானிர் ரஜீம். பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

அலிஃப் லாம் மீம் தாலிக்கல் கிதாபு லா றைப ஃபீஹி ஹுதல் லில் முத்தகீன். அல்லதீன யுஃமினூன பில் கைபி வயிகீமூனஸ் ஸலாத்தி வமிம்மா ரஸக்னாஹும் யுன்ஃபிகூன். வல்லதீன யுஃமினூன பிமா உன்ஸில இலைக்க வமா உன்தில மின் கப்லிக வபில் ஆகிரத்திஹும் யூகினூன்.  வகாலன் நபிய்யு (ஸல்) அலைஹிவஸல்லம்

அத்தக்வா ஹாஹுனா.

ஈமான் கொண்ட மனிதர்களே இந்த ஜும்மாவுடைய திருநாளில் உங்களுக்கு நான் சில உபதேசம் செய்ய விரும்புகிறேன். முதலில் அல்லாஹ்வின் மீது தக்வா செய்து கொள்ளுமாறு முதலில் எனக்கும் பின்னர் உங்களுக்கும் வஸிய்யத்து செய்கிறேன்.அல்லாஹுத்தஆலா தனது குர்ஆனிலே கூறியிருக்கின்றான்.

அலிஃப் லாம் மீம் தாலிக்கல் கிதாபு லா றைப ஃபீஹி ஹுதல் லில் முத்தகீன்.

இந்தப் புத்தகம் தக்வா உள்ளவனுக்கு நேர்வழிகாட்டும் என்பதில் சந்தேகமில்லை. அந்தத் தக்வா உள்ளவன் யாரென்றால் புலன்களுக்கு அப்பாலுள்ள மறைவானவற்றை நம்புவான். இன்னும் தனது தொழுகையை நிலைநிறுத்துவான். இன்னும் தன்னிடத்திலுள்ள அநேகமானவற்றை மக்களுக்கு தானம் செய்வான். இன்னும் அவன் யாரென்றால் உமக்கு இறக்கிய இந்த வேதத்தின் மீதும் உமக்கு முன்பு நாம் இறக்கிய ஸுஹுஃபுகள் வேதங்கள் மீதும் இன்னும் என்னுடைய இறுதி நாள்மீதும் நம்பிக்கை கொள்வான்.

இன்னும் றஸூல் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியிருக்கிறார்கள், அத்தக்வாஹு ஹாஹுனா தக்வா என்பது உள்ளத்துடனே காணப்படுகிறது.

மேலும் இன்னத் தக்வா துன்ஜீகும் மின் அதாபின் அழீம்.

வதுத் கிலுகும் இலல் ஜென்னா. நிச்சயமாகத் தக்வா எனும் இறையச்சம்  முஃமின்களை எரிநரகத்தின் வேதனைகளைவிட்டும் காக்கும். சுவர்க்கத்தில் நுழையச் செய்யும்.  இந்த ஹதீஸ் அபூ ஹுரைரா றலியல்லாஹு அன்ஹு அவர்கள் மூலம் அறிவிக்கப்படுகிறது. இது புஹாரி முஸ்லிம் ஆகிய கிரந்தங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தப் புனிதமான இடத்தில் அல்லாஹ்வை ஞாபகப்படுத்துவதற்காகவேண்டி ஒரு கடமைப்பாட்டுடனே இந்த குத்பாவை ஆரம்பம் செய்கிறேன். அல்லாஹ் என்பது எமது கண்களுக்கு எமது காதுகளுக்கு எமது ஆற்றலுக்கு எமது அறிவுக்கு எல்லாம் அப்பாற்பட்ட ஒரு அமைப்பு. அதை நாம் நேரடியாகக்  காணக்கூடிய சக்தியோ அந்தத் தகுதியோ எம்மில் யாரிடமும் இல்லை. அதைப் பற்றி அல்லாஹ் குர்ஆனில் கூறிய சில கூற்றுக்கள் எமக்கு ஞாபகம் வரலாம்.

வமா கான லிபஷரின் அய்யுகல்லிமல்லாஹ். ——

என்னோடு நேருக்கு நேராகப் பேசக்கூடிய தகுதி உங்களில் யாருக்கும் இல்லை. இல்லா வஹ்யன்  அப்படிப் பேசுவதென்றால் வஹி மூலம் உங்களோடு பேசுவேன்.  அவ் மின் வராய் ஹிஜாபின் அல்லது திரை மறைவிற்கு அப்பால் உங்களோடு பேசுவேன். வயுர்ஸில றஸூலன் யூஹிய பிஇத்னிஹீ மா யஷாஅ. அல்லாஹ் விரும்பியதை அறிவிக்கக்கூடிய ஒரு தூதனை அனுப்பி உங்களோடு பேசுவேனே அன்றி நான் நேருக்கு நேராகப் பேசுவதில்லை. அப்படிப் பேசக்கூடிய தகுதி உங்களில் யாருக்கும் இல்லை.

இந்தக் குர்-ஆன் ஆயத்தை அடிப்படையாகக் கொண்டு பார்த்தால் எமது நாட்டில் எல்லா இயக்கங்களிலும் அல்லாஹ்வைப் பற்றிப் பிரஸ்தாபிக்கின்ற அறிஞர்கள் இயக்கங்கள் கூறிக்கொண்டு இருப்பது அல்லாஹ்வை எல்லாவற்றிற்கும் இந்த உலகில் நேரடியாகக்கொண்டு அவனுடைய வஸீலாக்களை அவனுடைய அவ்லியாக்களை அவர்களுடைய அமைப்பினை ஏளனம் செய்துகொண்டிருக்கின்றபடியால் எமது விடயங்கள் அல்லாஹ்வினால் கொண்டு சேர்க்கப்படுவது கடினமாகிவிட்டது. அதனால் நாம் கேட்கின்ற எந்த துஆவும் எவருக்கும் நிறைவேற்றப்பட்டதாக நாம் காணவில்லை. சந்தோசப்படவும் இல்லை. காரணம் அதற்கு ஒரு முறை இருக்கிறது. அல்லாஹ் இந்த உலகத்திற்கு அருட்கொடையாக அனுப்பப்பட்டவர் நாயகம்(ஸல்) அவர்கள். அல்லாஹ் நேரடியாக அருள்புரியத் தெரியாதவன் இல்லை. அவன் அருள் புரிந்தமுறை நாயகத்தை அனுப்பித்தான். அல்லாஹ் காலத்திற்குக் காலம் அவ்லியாக்களை அனுப்பி அவன் தனது அருளை மக்களுக்குச் சொரிந்துகொண்டிருக்கிறான். இந்தவழியை நாம் ஏளனம் செய்வது எந்தவகையிலும் சாத்தியமில்லை. அப்படிச் செய்தால் எமக்கு அல்லாஹ்வோடு சேர்ந்துகொள்ளக் கூடிய வாசல்கள் அற்றுவிடும். எம்மை ஈன்றெடுத்த தாய் எமக்கு ஒரு திரை; அல்லாஹ் எம்மைப் படைப்பதற்கு எமது தாயை வஸீலாவாக வைத்துள்ளான். அவளுடைய வயிற்றிலே நம்மை உருவாக்கி இப்படி ஒரு மனிதனாக்கியதற்கு தாயும் ஒரு முக்கிய காரணம், அவளின் கர்ப்ப அறை ஒரு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. அப்படி அமைந்திருப்பது ஏனென்றால் அல்லாஹ் அவ் மின் வரா இ ஹிஜாபின் இங்கே உம்மா ஒரு திரை. எனக்கு வாப்பா உணவளிக்கிறார் வாப்பா ஒரு திரை. எனது ஆசிரியர் எனக்குப் பாடம் கற்பிக்கிறார். அங்கே ஆசிரியர் ஒரு திரை. எனக்கு சில செல்வந்தர்கள் உதவி புரிகின்றனர். அந்த செல்வந்தர்கள் ஒரு திரை. அப்படி இந்த உலகத்தில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு திரை இருப்பதுபோல் அருள் பெருவதற்கு அவ்லியாக்கள் என்ற திரை வைக்கப்பட்டுள்ளது. அந்தத் திரையை அனுகாமல் எமக்கு ஒரு போதும் விமோசனம் இல்லை. அப்படி இல்லையென்று யாராவது சொன்னால் அதற்கு வேறு ஒரு வழியுமில்லை. ஸூறதுன் நிஸா என்ற பாடத்தில்  69வது வசனத்தில் அல்லாஹ் கூறிய ஒரு விடயத்தை ஞாபகப்படுத்துங்கள்.

வமய் யுதிஉல்லாஹ வரஸூல ப உலாயிக மஅல்லதீன அன் அமல்லாஹு அலைஹிம் மினன் நபிய்யீன வஸ்ஸித்தீகீன வஷ்ஷுஹதாஇ வஸ்ஸாலிஹீன். வஹஸுன உலா இக றஃபீக்கா. நீங்கள் அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் மிகப் பொருத்தமானவர்களாக இருந்தால் உங்களை அல்லாஹுத் தஆலா அவனது அருளைப் பெற்ற நேசர்களான அவ்லியாக்களான நபிமார்கள் ஸித்தீகீன்கள் ஷுஹதாக்கள் ஸாலிஹீன்கள் ஆகியவர்களோடு உங்களை சேர்த்து வைப்பான். ம அல்லதீன அன் அமல்லாஹு உங்களை சேர்த்து வைப்பான். ஏன் தெரியுமா வஹஸுன உலா இக றஃபீக்கா. அவர்கள் தான் உங்களுக்குத் தோழமைக்குப் பொருத்தமானவர்கள். ஏனென்றால் எமது பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு ஊடகமானவர்கள். ஒரு மீடியாவானவர்கள் ஒரு வஸீலாவானவர்கள். அப்படிச் சொன்ன அல்லாஹ், தாலிக்கல் பழ்லு மினல்லாஹ் இவர்களுக்கு இந்த அருள் கொடுத்தது அல்லாஹ். அல்லாஹ் கொடுக்கத்தான் செய்திருக்கிறான். எனவே தாலிக்கல் பழ்லு மினல்லாஹ் வக்கஃபா பில்லாஹி அலீமா.    உங்களுடைய எந்த அறிவும் அல்லாஹ்வுக்குத் தேவையில்லை. எல்லாவற்றையும் அறிந்து கொள்வதில் அல்லாஹ் போதுமேயானவன். என்ற அந்தக் குர்ஆன் ஆயத்தைச் சொன்னது நீங்கள் சற்று யோசிக்க வேண்டும்.

புகழுக்குரிய நண்பர்களே முஸ்லிம் சகோதரர்களே!  எமது நாட்டிலே நடந்த பிரச்சினைகளுக்கு முக்கிய காரணம் பெரியார்களை கண்ணியப்படுத்தும் முறையை நாம் தெரிந்து கொள்ளாததுதான். றஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஸஹாபாக்களைப் பார்த்து ஒரு கேள்வி கேட்டால் அதற்கு அந்த ஸஹாபாக்கள் வழ்ழாஹுன் வறஸூலுன் அஃலம். உங்களுக்கும் அல்லாஹ்வுக்கும்தான் தெரியும் நாயகமே என்று சொல்லும் அளவுக்குத் தன்னை மடைமையாக்கிப் பக்குவப்படுத்தி வைத்திருந்தார்கள். இது உங்களுக்குத் தெரியாதா நாயகமே இதுதானே இந்தவிடயம் என்று அவர்கள் ஒருபோதும் கூறத்துணியவில்லை. ஆனால் அவர்கள் மடையர்களும் இல்லை. இந்த உலகத்திலே 100 பேர்கள் தெரிவு செய்யப்பட்டதில் உமர் றலியல்லாஹுத் தஆலா அன்ஹூ அவர்களும் ஒருவர். முதலாவதாக நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள். ஐம்பத்தி ஓராவதாக உமர் றலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஸஹாபாக்கள் மடையர்களும் இல்லை. ஏனென்றால் நாயகம் அவர்களைப் பற்றிச் சொன்ன ஒரு வார்த்தை  அவர்களுடைய அந்தஸ்த்தை விளங்கப்படுத்தும் அது அஸ் ஸஹாபதி கன்னுஜும் வபி அய்யிஹிம் இக்ததைத்தும் இஹ்ததைத்தும். என்னுடைய ஸஹாபாக்கள் நட்சத்திரங்களைப் போன்றவர்கள் அவர்களில் எவரை எவர் பின்பற்றினாலும் வழிதவறமாட்டார். அந்த அந்தஸ்த்தைப் பெற்றவர்கள். குத்ப் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி நாயகத்திடம் கேட்டார்கள். நீங்கள் செய்கின்ற வேலை ஒரு ஸஹாபி செய்வதைவிட மேலாக இருக்கின்றது. நீங்கள் ஒரு ஸஹாபியைவிட மேலானவர்தானே? என்று கேட்டார்கள் அதற்கு குத்பு முஹியித்தீன் அப்துல் காதிர் ஜீலானி நாயகம் அவர்கள் சொன்னார்கள். அவர்கள் ஓடுகின்ற குதிரையின் காலில் எழும்புகின்ற ஒரு புழுதிக்குக் கூட நான் சமனில்லை. அவர்கள் நாயகத்திடத்திலே அந்த அளவு அந்தஸ்தைப் பெற்றவர்கள்.

அவர்கள் நேரிலே நாயகத்தை இரசித்தவர்கள். சுவைத்தவர்கள். அந்த அந்தஸ்த்து என்னிடம் இல்லை. எனவே நான் எவ்வளவு பெரிய கொடிகட்டிப் பறந்தாலும் அந்த ஸஹாபியின் குதிரையின் கால் தூசிக்குக்கூட நான் பெறுமதியில்லை. என்று முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ஜீலானி றலியல்லாஹுத்தஆலா நாயகம் கூறியிருக்கக்கூடிய அந்தஸ்த்தைப் பெற்றவர்கள். அந்த ஸஹாபாக்கள் கூட நாயகத்தைப் பார்த்து ஒரு வசனம் கூட கூறவில்லை. மிகவும் ஒழுக்கமாக இருந்தார்கள்.  றஸூல் நாயகம் ஸல்லல்லாஹு  அலைஹி வஸல்லம்  அவர்கள் சொன்னார்கள் எனக்குப் பின் நபிவருவதில்லை. அப்படி வருவதென்றால் உமர்(றலி) வருவார். என்று சொன்ன அந்தஸ்த்தைப் பெற்றவர்கள். எங்களுடைய அபூபக்கர் நாயகம் இருக்கின்றார்களே அவர்களைப் போன்று ஒரு மனிதன் இந்த உலகத்திலே இல்லை என்று நாயகமே வர்ணித்தவர்கள். இந்தத் தக்வா விசயத்தில் அவர்களுக்கு நிகராக இந்த உலகத்தில் யாருமே இல்லை. இந்த உலகத்திலுள்ள மனிதர்களின் ஈமானை ஒரு தட்டிலும் அவர்களுடைய ஈமானை ஒரு தட்டிலும் போட்டால் அவர்களுடைய ஈமான் கதிக்கும் என்று சொன்ன அந்தஸ்த்தைப் பெற்றவர்கள். அவர்கூட நாயகத்திடம் ஒரு கேள்வி கேட்டதில்லை. அப்படிக் கேட்டால் நாயகத்தின்  மரியாதைக்குப் பிழையாகுமோ அல்லது நாம் கேட்கின்ற கூற்று நாயகங்களை மனங்களை ஏதாவது ஒரு வகையில் தாக்குமோ அல்லது நாம் கேட்கின்ற கூற்று மடத்தனமாக அமையுமோ என்ற மன விசாரணையில் அவர் எந்தக் கேள்வியும்  கேட்கவில்லை. ஆனால் அவர்கள் நாயகத்தை முற்றாக ஏற்றுக் கொண்டவர்கள். நாயகம் எந்தப் பிழையும் அற்றவர்கள்.

றுப்ப ரப்பின் ரப்பஹூ லம் யஃரிஃபன் வலம் யறுப்

ரபீபஹூ லாகின் அழல்ல்ல் கௌம பில் ஆரா இ ரால்

அல்லாஹ்வை நான் காண்கின்றேன். அல்லாஹ்விடமே நான் உன்னை சேர்க்கின்றேன் என்று உங்கள் எல்லோரையும் வழிகேட்டிலே தள்ளுகின்ற அறிஞர்களிடத்திலே செல்லாதீர்கள். அப்படிச் சென்றால் நீங்கள் அல்லாஹ்விடம் செல்வதற்குப் பதிலாக வழிகேட்டிலேயே தள்ளப்படுவீர்கள் என்று உமர் காஹிரி நாயகம் அவர்கள் சொல்லியிருக்கின்ற ஒரு பாடல் இந்த இடத்திற்குப் பொருத்தம்.

நான் முதல் சொன்னபடி அத்தக்வா ஹாஹுனா. றஸூல் நாயம் தன் நெஞ்சைத்தொட்டுச் சொன்னார்கள் இதை அபூ ஹுரைரா நாயகம் அறிவிக்கிறார்கள் தக்வா இங்கே இந்த நெஞ்சை சார்ந்தது. அபூபக்கர் நாயகம் வீதியில் வந்தபோது தன்றஸூல் விஷயத்தை அபூபக்கர் நாயகத்திடம் கேட்போம் என்று றஸூல் நாயகம்(ஸல்) ஒரு பாதையோரத்திலே ஒதுங்கி அபூபக்கரே! என்று கூப்பிட்டு நான் உங்களிடத்தில் ஒரு விஷயம் கேட்கலாம் என்று எண்ணினேன் அதைக் கேட்கவா?  கேளுங்கள். நான் றஸூலாக்கப்பட்டிருப்பதை நீங்கள் நம்புவீர்களா  உடனே அவர்கள் நீங்கள் றஸூலாக்கப்பட்டது உண்மை என்பதை நான் அறிவேன். ஏனென்றால் நானும் நீங்களும் ஒரே திசையில் சென்றவர்கள். என்று நாயகத்திடம் உடனே பைஅத்துப் பெற்றார்.

றஸூல் நாயகங்களை இரண்டு விடயங்கள் சந்தோசப்படுத்தியது இந்த உலகத்தில்.   ஒன்று அபூபக்கர் நாயகம் பை அத்துப் பெற்றது.  இரண்டாவது பத்ர் யுத்தம் வெற்றிபெற்றது.  இந்த இரண்டையும் நாயகங்கள் நினைத்து மகிழ்கின்ற காலங்கள் அநேகம்.

தக்வா என்று சொல்வது இறையச்சம். அது வகா என்ற அரபு அடிப்படைச் சொல்லில் இருந்து வந்தது.

றஸூல் நாயகத்திடம் நேரியவழி என்றால் என்ன நாயகமே என்று கேட்டதற்கு, தன்னுடைய அஸாவை நீட்டி ஒரு நீண்ட கோட்டைக் கீறி பக்கத்தில் வளைந்த சில கோடுகளைக் கீறி நேரிய கோட்டைக் காட்டி இது நேரிய பாதை இந்த வளைந்த கோடுகள் கெட்ட பாதைகள் என்று ஒரு கீறிக்காட்டியிருக்கின்றார்கள்.

இந்த விஷயம் புஹாரி ஷரீபிலே இமாம் புஹாரி நாயகம் அவர்கள் எழுதியிருக்கின்றார்கள். உமர் றலியல்லாஹு அன்ஹு அவர்களிடத்தில் கேட்டதற்கு தக்வா என்பது ஒரு நேரிய வரம்பில் இரண்டு பக்கத்திலும் முட்கள் நிறைந்திருக்க நடுவே மிகக் கவனமாக நடந்து செல்வதைப் போன்றது. அதில் அங்காலே இங்காலே சறுகினால் அந்த முட்கள் தன்னுடைய உடுப்பை உடம்பைக் கிழித்து விடும் என்று ஒரு வரைவிலக்கணம் கூறியிருக்கிறார்கள். அப்படியானது இந்தத்  தக்வா.

எனவே தக்வா என்பது உள்ளத்தோடு சம்பந்தப்பட்டது. அந்தத் தக்வாவுடைய இறையச்சம் ஒன்றே நரக வேதனையிலிருந்து விடுதலையளித்து சுவர்க்கத்தைக் கொடுக்கும். மனதிலே அல்லாஹ்வைப் பிக்ர் செய்தல். ஃபிக்ர் தன்னுடைய மனதிலே இறைவனைப் பற்றிய சிந்தனை. அதுதான் தொழுகை. ஜும்ஆ என்ற இன்றைய நாளைப் பற்றி அல்லாஹ் அறிவித்த வசனம்  யா அய்யுஹல்லதீன ஆமனூ இலா நூதிய லிஸ்ஸலாத்தி மிய்யவ்மில் ஜும்ஆ ஃபஸ் அவ் இலா பிதிக்ரில்லாஹ் ஏ ஈமான் கொண்ட மனிதர்களே  வெள்ளிக்கிழமை நாள் வந்ததும் தொழுகைக்கு அழைக்கப்பட்டால், உங்களுடைய கடைகளைப் பூட்டிவிட்டு பள்ளிக்கு விரைந்து செல்லுங்கள். நீங்கள் அல்லாஹ்வைத் தியானிப்பதற்கு. அல்லாஹ் தொழுகையை தியானம் என்றே கூறியிருக்கிறான். அப்படியான அந்தஸ்துப் பெற்றதுதான் இந்தத் தக்வா அதைப் பெற்றுக் கொள்ளும் வழிதான் இந்த தரீக்கா. இறையச்சம் என்பது அல்லாஹ்வுக்குப் பயந்து கொள்வது என்ற கருத்தில் ஆகும்.

கௌபுன் றஜா பயத்திற்கும் ஒரு எதிர்பார்ப்புக்கும் மத்தியில் நடந்து வந்து நாம் இறைவனை சிந்தித்து சிந்தித்து அந்த உடம்பு அந்த மனம் கலக்கப்பட்டால் ஜலால் ஜமால் என்ற மர்த்தபாக்களாக மாறி தீவிரம் சாத்வீகம் என்ற அமைப்பைப் பெற்று பின்னர் அவன் பேசும் வாய் அவன் தொடும் கை அவன் பார்க்கும் கண்ணாக மாறுகின்ற ஒரு நிலை இந்த உலகத்தில் உண்டு அதை நாம் பெற்றுக் கொள்ள முடியும் என்பது திண்ணம்  தொழுகை மூலம் நாம் எல்லா ஞானத்தையும் பெற்றுக் கொள்ள முடியும். நம்மவர்கள் சொல்லுகின்ற தொழுகையில்லை. அலி றலியல்லாஹுத் தஆலா அன்ஹு, அபூபக்கர் நாயகம் சொன்ன தொழுகை. ‘லா அஃபுத றப்பன் வலம் அறஹூ’ நான் அல்லாஹ்வைப் பார்க்காமல் வணங்குவதில்லை என்பது அஸ்ஸலாத்து நிஸ்யானு மா ஸிவல்லாஹ். தொழுகை என்பது அல்லாஹ் அல்லாத அத்தனையும் மறத்தல். நாம் மறப்பதற்கு அதிகம் முயற்சிக்கிறோம் எம்மைவிட்டு அது விலகவில்லை. ஆனால் அதற்குள் நாம் நினைக்கின்ற உலக எண்ணங்களோ அதிகம். அப்படி நினைத்துக் கொள்வது எங்களை நாங்களே ஏமாற்றுகின்ற ஒரு செயல். எனவே அல்லாஹ்வின் மீது நாம் தக்வா செய்து கொள்வதற்கு ஆதாரமானவர்கள் தான் எங்களது கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள். எங்களுடைய குத்பு முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி அவர்கள். பத்ர் ஸஹாபாக்கள் அவர்கள். மற்றும் உலகத்திலுள்ள அவ்லியா, அன்பியா, ஷுஹதா, ஸாலிஹீன்கள் மற்றும் இமாம்கள். எங்களுடைய ஷெய்குனா ஹல்லாஜ் மன்ஸூர், ஜலாலுத்தீன், அப்துஸ் ஸமத் மௌலானா, ஷெய்க் சிக்கந்தர் வலி, ஸெய்னுலாப்தீன் வலி, மிஸ்கீன் அலி ஷாஹ் மெஹ்பூப், யாஸீன் மௌலானா, வஹாப் மௌலானா, வாஹித் மௌலானா போன்ற நேர்வழிபெற்ற இறையன்பைப் பெற்றவர்களின் வழியைத் தேடுவதுதான்.

இஹ்தினஸ் ஸிராத்தல் முஸ்தகீம் இறைவா எனக்கு நேரிய வழியைக் காட்டு. ஸிறாத்தல்லதீன அன் அம்த அலைஹிம் நீ யாருக்கு நிஃமத்துச் செய்திருக்கின்றாயோ அவர்கள் வழியில் என்று சொன்ன இந்த வார்த்தைகள் இவர்கள் பற்றிய கதைகள்தான். நாம் பின்பற்றுவது இமாம்களை.

இமாம்கள் பின்பற்றியது தபஉத்தாபிஈன்களை

தபஉத்தாபிஈன்கள் பின்பற்றியது தாபிஈன்களை

தாபிஈன்கள் பின்பற்றியது ஸஹாபாக்களை

ஸஹாபாக்கள் பின்பற்றியது நாயகத்தை.

நாயகம் பின்பற்றியது அல்லாஹ்வை.

நாம் அல்லாவிடம் நேரடியாகப் பேசும் தகுதியற்றவர்கள். எனவேதான் அல்லாஹ்வை அனுகுவதென்றால் இந்த வஸீலா முறையிலேதான் அனுக வேண்டும். தக்வா என்பது நாம் நினைக்கின்ற மாதிரி ஒரு சின்ன விஷயம் இல்லை.

காலத்தில் அஃறாபு ஆமன்னா லம் துஃமினூ வலாகின் கூலூ அஸ்லம்னா

காட்டரபிகள் வந்து நாயகம் (ஸல்) அவர்களிடம் நாங்கள் ஈமான் கொண்டோம் என்று கூறினார்கள். அதற்கு அல்லாஹ் நபியே நீர் கூறும்.  நீங்கள் ஈமான் கொள்ளவில்லை. விரும்பினால் உங்களை முஸ்லிம்கள் என்று கூறிக்கொள்ளுங்கள்.

வமிம்மா யத் குலில் ஈமான ஃபீ குலூபிக்கும்

ஈமான் என்பது இதயத்தோடு சம்பந்தப்பட்ட விஷயம் அது இன்னும் உங்கள் மனதில் நுழையவில்லை என்று குர்ஆனில் ஸூறத்துல் ஹுஜ்றாத்திலே நாயகத்திற்கு அல்லாஹ் எடுத்து இந்த  வசனத்தைச் சொன்னான். எனவே பெரியார்களே உலமாக்களே உங்கள் எல்லோருக்கும் நான் என்னால் முடிந்த ஒரு வஸீயத்தைச் செய்கிறேன். இந்த விஷயத்தில் நானும் நீங்களும் நல்லதொரு நிலைக்கு வரவேண்டும்  என்ற நோக்கத்தோடு கூறுகிறேன். அல்லாவிடத்திலே தக்வா என்ற இறையச்சத்தை நாம் எல்லோரும் ஏற்படுத்தி அல்லாஹ்வின் அருளைப் பெற்ற நல்லடியார்கள் கூட்டத்திலே எங்கள் அனைவரையும் அல்லாஹ் சேர்த்து வைக்கவேண்டும் என வேண்டி எனது இந்த சிற்றுரையை குத்பாவினை முடிக்கிறேன் ஆமீன் ஆமீன் யாறப்பல் ஆலமீன்.