நல்லாசி பொழிந்து வருகவே..

ஏக இரட்சகனின் ஏக நாதரே – எம்
மனம் நிறைந்த நபி போதகரே!
ஏவல் செய்திடும்
இழி அடியோர்களின்
அன்பு நிறை
எங்கள் ஸலாம்!

அண்ணல் நபியின்
அமைதி வழியில்
அகிலம் காக்கும்-இறை
நேயர்களே!
எங்கள் ஸலாம்!

எம் வாழ்வின் கறைகள்
அகற்றி வாழ்வில்
ஒளி ஏற்றிட
வாழ்வை வளமாக்கிட
வந்துதித்த எங்கள்
குருநாதரே!
கோமான் நபியின்
நாயிபுர் றஸூலே
எங்கள் ஸலாம்!

அருளின் உருவாய்
அவனியின் கருவாய்
அவன் பணியின் திருவாய்
அக்கரைப்பற்றின் – மணி
விளக்காய்
அண்ட கோடியின்
அற்புத அரசனின்-புனித
குதுபியத்தின் குத்பே!
காமில் ஷெய்க்கே
அருள் மாரி பொழியவே ]
வாருங்கள்!

அன்பு மழையில்-நாம்
நனைய
அன்புடனே வாருங்கள்
அடியார்களின் துயர் துடைக்க-இன்
மனம் கொண்டு
வாருங்கள்!

எம் உள்ளங்களில்
நிறைந்தவர்கள்- தெய்வ
நீள் நில வாழ்வில்
நிலைத்தவர்கள் – எம்
பாழ்பட்ட மனங்களை
பரிசுத்தப்படுத்தவே – பாசமுடன்
வாருங்கள்!

உள்ளுணர்வுகளை
உசுப்புகின்றவர்கள்
உள்ளமைக்காய் உழைப்பவர்கள்
ஹக்கானியத்தின்
பேர் ஒளியாய்
காசினிக்கு
வந்தவர்கள்
ஊதாரிகளாய்
உலகளக்கும்- எம்மை
மாட்சிமை மிகு வல்லோனின்
வீச்சுக்களில்
இணைத்திட
தயை காட்டி
வாருங்கள்!

வல்ல நாயனின் – அருள்
நயன விழி காட்டும்
மகாஞானியே!
மாண்புடன் வாருங்கள்
பல் ஞானம்
பாலாறாய் பொங்கி எழும்
மகா ஞானியே!
தவசீலர்களின்
தர்ம போதனையின்
தவஞானியே!
தயவு கொண்டு
வாருங்கள்!

ஞான வழி யோகிகளின்
ஞானத்தின் திறவுகோல்
வள்ளல் றஸூலை
வாகாய் சுமந்த
வானகத்து ஞானி
பாவிகளிலும்
பெரும் பாவிகள் – எம்மை
தீனுல் இஸ்லாத்தின்
தூதில் துவட்டிட
வினயமுடன்
வாருங்கள்!

பூமான் றஸூலின்
பூவுலக வாரிசு
தீரமிக்க அப்பாஸ் (றலி)
நெஞ்சுரச்சின்னம்
அபூபக்கர் (றலி)
குலத்தில் பூத்த மலர்
அப்துஸ்ஸமது மௌலானா என்னும்
நாயகத்தின் பேரர் அப்துல் மஜீத் என்னும்
நாயக செம்மல்
நானிலம் தழைக்கவே – நாளும்
வாருங்கள்!

குத்புனா ஹல்லாஜ் (றலி)
அன்ந்தர காரராம்
அவர் பாதையில் ஜனனித்தவராம்
பண்புகளின் உறைவிடமாம்
பாங்காய் பரிவு கொள்ள
வாரீர்கள்! வருகவே!!
மதீனத்து மாநபி மக்கள்- மனம்
குதூகலிக்க செய்தது போல்
வாரீர்கள்! வருக!
பாவிகள் நாம்
பரிதவிக்கும் – எம்மை
தூய்மைப்படுத்தும்
ஹஜரத் அஸ்வத்தே!
வருக! வருகவே!
நல்லாசி பொழிந்து வருகவே!

மௌலவி எம். ஏ. பிர்னாஸ்(மன்பஈ)
அக்கரைப்பற்று

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *