நேசர் தம் வாழ்வை நினைவூட்ட நினைவூட்ட..

வாருங்கள் நாங்கள்
வாப்பாவை வரவேற்போம்!
வாசமலர் பாசாலர்
வாஞ்சையுள்ள நேசமலர்
ஆசைமலர் எங்கள்
அகம் பூத்த அன்பு மலர்
மக்கத்தார் என்றே நாம்
மகிழ்ந்தேற்றுக் கொண்ட மலர்
இப்போதும்……. இங்கே
எம்மோடு இணைந்தபடி……………….

வாருங்கள் நாங்கள்
வாப்பாவை வரவேற்போம்!
வாசமலர் அதனின்
வாசத்தை நுகர்ந்தவரே
பாச மலர் அதனில்
பரிவில் நனைந்தவரே!
இறை—
நேசர்தம் வாழ்வியலை
நினைவூட்ட ……….நினைவூட்ட……..
நேர்கண்டு சுகித்தவரே!

வாருங்கள் நாங்கள்
வாப்பாவை வரவேற்போம்!
எதையும் ஆய்வொழுங்கில்
எடுத்தோதி உறுதிசெய்து
உளவியலில் உணர்வலையை
முரீதீன்கள் விளங்கவென
நகைச்சுவையாய்க் கதைசொல்லி
அறிவு தரும் ஆத்மகுரு,
அன்பாளர் பண்பாளர்
அறிவொளிரும் பேராளர்….
மக்கத்தார்-

வாருங்கள் நாங்கள்
வாப்பாவை வரவேற்போம்!
புத்திதொட எட்டாத
புதையல்களை, உட்பொருளை,
அற்புதமாய் தன்னுடைய
ஆற்றலினால், அனுபவத்தால்
அகமியத்தால், செப்பனிட்டு,
நுட்பமாய்ச் சீடர்களின்
நுண்ணுணர்வைக் கூராக்கி
சீர் செய்யும் பேர் ஆசான்
ஸெய்யித் அஷ்-ஷேகு
அப்துஸ் ஸமத் ஆலீம்
அப்துல் மஜீத் என்ற
மக்கத்தார் வாப்பாவை
மனம் மகிழ்ந்து வரவேற்று
வாழ்த்துரைப்போம் வாருங்கள்!

வாருங்கள் நாங்கள்
வாப்பாவை வரவேற்போம்!
தொழிலால் அவர் ஆசிரியர்
தொடர்ந் துயர்ந்து
அதிபரய்ச் சிலகாலம்………
அதன் பின்னே……..
கலாசாலை விரிவுரையில்
பாட்டு, சங்கீதப்
போதனையில் சில காலம்….
போய் முடிய…
ஓவியராய் பாடகராய்ச்
சோபித்து….
கலாபூஷணம் என்ற
கௌரவமும் பெற்றெடுத்தார்
என்றாலும் இதற்கெல்லாம் மேலாக
இரசிகன் நான் என்பதில்தான்
இவருக்கு உடன்பாடு!
இதமாய்ப் பக்குவமாய்
இரசித்து… மிக அழகாய்
கருத்துக்கள் கூறும்
கலா  ரசிகன்….
கனதியும் காத்திரமும்
வழியும் அவர் விமர்சனத்தில்…..

வாருங்கள் நாங்கள்
வாப்பாவை வரவேற்போம்!
மன நலனைத் தேடுபவர்
குண நலனை நாடுபவர்
என்று பலர் தினமும்…
அண்டி வருபவரை ஆதரித்து..
சேவையென
சிகிச்சையினை, வைத்தியத்தை
சிறப்பாய் செய்துவரும்…
வாப்பாவை!

வாருங்கள் நாங்கள்
வாப்பாவை வரவேற்போம்!
தரீக்கா வாழ்க்கையினை
சரியாகக் கற்பித்த
ஹல்லாஜ் மன்ஸூர்
வாப்பாவின் பிள்ளையினை;
அடுத்ததொரு வாரிசாய்
அவரே பயிற்றுவித்த
ஏக கலீபாவை…
காதிரி, ஜிஷ்தி
றிபாஇய்யி, நக்ஷபந்திய்யி,
தரீக்காக் களுக்கான
தலைமை பதவியினை
தக்கபடி பெற்றெடுத்த
மக்கத்தார் வாப்பாவை…
மகிழ்ந்து, மனங்குளிர்ந்து
வாழ்த்தி வரவேற்போம்
வாருங்கள்!
கவிஞர் பாலமுனை பாறூக்,
(முகாமையாளர் இலங்கை வங்கி)
பாலமுனை.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *